பக்கம் - 438 -
குஜாஆவைச் சேர்ந்த அம்ரு இப்னு ஸாலிம் மக்காவிலிருந்து மதீனாவிற்கு விரைந்தார். அங்கிருந்து நபியவர்களின் பள்ளிவாயிலை நோக்கி நடந்த அவர், பள்ளிக்குள் நுழைந்ததும் நபியவர்கள் முன்னிலையில் நின்று கொண்டார். நபியவர்கள் மக்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார்கள். அம்ரு நடந்த துக்கத்தை கவிதைகளில் பாடிக் காட்டினார்.

இறைவா! நான் முஹம்மதிடம் எங்களின் ஒப்பந்தத்தையும்
அவர் தந்தையின் பழமையான ஒப்பந்தத்தையும்
கேட்டு வந்திருக்கின்றேன். நீங்கள் பிள்ளைகள்
நாங்கள் பெற்றோர்கள் பின்பு நாம் முஸ்லிமானோம்
பின்வாங்கவில்லை முழுமையாக உதவுங்கள்
அல்லாஹ் உமக்கு வழிகாட்டுவான்.
அல்லாஹ்வின் அடியார்களை அழை
உதவிக்கு அவர்களும் வருவார்கள்
அவர்களில் ஆயுதம் ஏந்திய அல்லாஹ்வின்
தூதரும் இருக்கின்றார். அவர் வானில் நீந்தும்
முழு நிலா போல் அழகுள்ளவர்.
அவருக்கு அநீதமிழைத்தால் முகம் மாறிவிடுவார்.
நுரை தள்ளும் கடல்போன்ற படையுடன் வருவார்
குறைஷிகள் உன் வாக்கு மாறினர்.
உன் வலுவான ஒப்பந்தத்தை முறித்து விட்டனர்.
கதாவில் எனக்குப் பதுங்கு குழி வைத்துள்ளனர்.
ஒருவரையும் உதவிக்கு அழையேன்
என நினைத்துக் கொண்டனர். அவர்கள் அற்பர்கள்
சிறுபான்மையினர் வதீல் இரவு எங்களைத் தாக்கினர்.
நாங்கள் இறைவனை... பணிந்து குனிந்து வணங்கிய போது
எங்களை அவர்கள் வெட்டினர்.

அவன் கவிதைகளைக் கேட்ட நபி (ஸல்) “உனக்கு உதவி செய்யப்படும்” என்று ஆறுதல் கூறினார்கள். அந்நேரத்தில் வானத்திலிருந்து ஒரு மேகம் அங்கு வந்தது. நபி (ஸல்) அவர்கள் “இம்மேகம் குஜாஆ கிளையினர் உதவி பெற்று விட்டனர் என்பதற்கு முன் அறிவிப்பு” என்றார்கள்.

பிறகு ஃபுதைல் இப்னு வரகா அல்குஸாம் தனது கோத்திரத்தினர் சிலரை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களது சமூகம் வந்து, தங்களில் பலர் கொல்லப்பட்டதையும், குறைஷிகள் பலர் தங்களுக்கு எதிராக பக்ரு குலத்தவருக்கு உதவி செய்ததையும் கூறிவிட்டு மக்கா திரும்பினார்.

அபூ ஸுஃப்யான் ஓடி வருகிறார்

குறைஷிகளும், அவர்களது தோழர்களும் செய்தது ஒப்பந்தத்தை முறிக்கும் செயலாகும் மிகப்பெரிய மோசடியாகும். எவ்விதத்திலும் இச்செயலை நியாயப்படுத்த முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தங்களின் இத்தீய செயலுக்குப் பின் அதன் விபரீதத்தை அறிந்து கொண்ட குறைஷிகள் உடனடியாக அவசர ஆலோசனை சபையைக் கூட்டினர். ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குத் தங்களின் தளபதி அபூஸுஃப்யானை மதீனாவுக்கு அனுப்ப வேண்டுமென்று அதில் முடிவெடுத்தனர்.