பக்கம் - 439 -
“தங்களின் மோசடி செயலுக்குப் பின் குறைஷிகள் என்ன செய்வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்கு முன்கூட்டியே அறிவித்தார்கள். அநேகமாக ஒப்பந்தத்தை உறுதிசெய்து, அவகாசத்தை நீட்டித் தருவதற்காக அபூ ஸுஃப்யான் உங்களிடம் வருவார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

குறைஷிகள் முடிவு செய்தவாறே அபூ ஸுஃப்யான் மக்காவிலிருந்து புறப்பட்டார். வழியில் மதீனாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த புதைல் இப்னு வரகாவை ‘உஸ்ஃபான்’ என்ற இடத்தில் சந்தித்து “புதைலே எங்கு போய் வருகிறீர்?” என்றார். அவர், “நான் எனது கோத்திரத்தாருடன் இந்த கடற்கரை மற்றும் இந்தப் பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க வந்தேன்” என்று கூறினார். அபூ ஸுஃப்யான் “நீ முஹம்மதிடம் சென்று வரவில்லையா?” என்று கேட்டார். அவர் “இல்லையென்று” கூறிவிட்டார். புதைல் அந்த இடத்தை விட்டு மக்கா நோக்கிப் புறப்பட்டு போன பின்னர் அபூ ஸுஃப்யான், “புதைல் மதீனாவுக்குச் சென்றிருந்தால் அங்கு தனது ஒட்டகங்களுக்கு தின்பதற்கு பேரீத்தம் கொட்டைகளைக் கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவரது ஒட்டகம் படுத்திருந்த இடத்திற்கு வந்து, அதன் சாணத்தைக் கிளறினார். அதில் பேரீத்தங்கொட்டைகளை பார்த்தவுடன், “நான் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்! புதைல் முஹம்மதிடம்தான் சென்று வந்திருக்கிறார்” என்று கூறினார்.

அபூ ஸுஃப்யான் மதீனா வந்தடைந்து தனது மகள் உம்மு ஹபீபாவின் வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த விரிப்பில் அவர் உட்கார நாடிய போது சட்டென உம்மு ஹபீபா (ரழி) அதைச் சுருட்டி விட்டார். “என் அருமை மகளே! இந்த விரிப்பில் நான் உட்காருவதற்குத் தகுதி அற்றவனா? அல்லது இந்த விரிப்பு எனக்குத் தகுதியற்றதா?” எனக் கேட்டார். “இல்லை! இது நபி (ஸல்) அவர்களின் விரிப்பு; நீர் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் அசுத்தமானவர்” என்று உம்மு ஹபீபா (ரழி) பதில் கூறினார்கள். இதைக் கேட்ட அவர் “என்னிடமிருந்து வந்ததற்குப் பின் உனக்கு ஏதோ தீங்கு நேர்ந்து விட்டது” எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, தான் வந்த நோக்கத்தைப் பற்றிப் பேசினார். ஆனால் நபி (ஸல்) அவருக்கு எந்த பதிலும் கூறாததால், அங்கிருந்து எழுந்து அபூபக்ரிடம் வந்து நபியவர்களிடம் தன் விஷயமாகப் பேசுமாறு கூறினார். அதற்கு அபூபக்ர், (ரழி) “அது என்னால் முடியாது” எனக் கூறிவிட்டார்கள். பின்பு அங்கிருந்து உமரிடம் சென்று நபியவர்களிடம் பேசுமாறு கூறினார். அதற்கு உமர் (ரழி) “நானா உங்களுக்காக நபியவர்களிடம் சிபாரிசு செய்வேன்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னிடம் ஒரு சிறு குச்சியைத் தவிர வேறெதுவும் இல்லை என்றாலும் அதைக் கொண்டே உங்களிடம் போர் புவேன்” என்று கூறினார்கள். பின்பு அவர் அலீ (ரழி) இடம் வந்தார். அங்கு அவருடன் ஃபாத்திமாவும் இருந்தார்கள். அவ்விருவருக்கும் முன்பாக சிறுபிள்ளையாக இருந்த ஹஸன் (ரழி) தவழ்ந்து கொண்டிருந்தார். அவர் “அலீயே! நீ எனக்கு உறவில் மிக நெருக்கமானவர். ஒரு தேவைக்காக உம்மிடம் வந்திருக்கின்றேன். நான் தோல்வியுற்றவனாக இங்கிருந்து செல்லக் கூடாது. எனவே, எனக்காக முஹம்மதிடம் சிபாரிசு செய்” என்று கூறினார். அலீ (ரழி) “உனக்கு நாசம் உண்டாகட்டும்! நபியவர்கள் தீர்க்கமாக முடிவு செய்து விட்டார்கள். அது விஷயமாக நாங்கள் அவர்களுடன் பேச முடியாது” என்று கூறிவிட்டார்கள். அவர் ஃபாத்திமாவின் பக்கம் திரும்பி “நீ உனது மகனிடம் சொல்! அவர் மக்களுக்கு மத்தியில் கார்மானமும் பாதுகாப்பும் நிலவ வேண்டுமென்று அறிவிப்புச் செய்யட்டும்! இதனால் காலமெல்லாம் அவர் அரபியர்களின் தலைவராக விளங்குவார்” என்று கூறினார். ஃபாத்திமா (ரழி), “அந்தத் தகுதியை எனது மகன் இன்னும் அடையவில்லை நபியவர்கள் இருக்க வேறு எவரும் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுக்க முடியாது.” என்று கூறிவிட்டார்கள்.