பக்கம் - 44 -
3) சுயகௌரவம் மற்றும் அநீதத்தை சகித்துக் கொள்ளாத் தன்மை: இப்பண்புகள் அவர்களிடம் கட்டுக்கடங்கா வீரத்தையும் அதிரடி ரோஷத்தையும் வேகமாக உணர்ச்சி வசப்படுவதையும் தூண்டின. எவருடைய சொல்லாவது தனக்கு கௌரவக் குறைவை அல்லது இழிவை ஏற்படுத்துகிறது என அறிந்தால் அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். தங்களது உயிரைப் பற்றி சிறிதும் இலட்சியம் செய்யாமல் வாளாலும், அம்புகளாலும் அதற்கு பதிலடி கொடுப்பார்கள்.

4) செயலில் உறுதியுடன் இருத்தல்: அம்மக்கள் ஒரு செயல் தங்களது பெருமைக்கும் உயர்வுக்கும் காரணமாக அமையும் என நம்பினால் அதை செயல்படுத்துவதிலிருந்து அவர்களை எந்தவொரு சக்தியும் தடுத்துவிட முடியாது. தங்களது உயிரைக் கொடுத்தாவது அதனை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

5) நிதானித்தல், சகித்தல், அமைதி காத்தல்: இப்பண்புகளும் அவர்களிடம் அமைந்திருந்தன. எனினும், வீரமும் போர் மீதான ஆர்வமும் மிகுந்திருந்ததால் இப்பண்புகள் மிக அரிதாகவே காணப்பட்டன.

6) எளிமையை விரும்பிப் பகட்டை வெறுத்தல்: அவர்களிடம் இப்பண்பும் காணப்பட்டது. அதனால் அவர்கள் உண்மை, நேர்மை, வாய்மை போன்றவற்றை நேசித்து மோசடி, ஏமாற்றுதல் போன்ற இழிகுணங்களை வெறுத்தனர்.

உலகின் ஏனைய பகுதிகளைப் பார்க்கிலும் அரபிய தீபகற்பத்துக்குப் புவியியல் ரீதியான முக்கியத்துவம் அமைந்திருந்தது. அத்துடன் அம்மக்களிடம் இருந்த மேற்கூறிய சில அரிய பண்புகளும் இருந்தன. இதன் காரணமாகவே இறுதி இறைத்தூதை சுமப்பதற்கும் மனித குலத்தை சீர்படுத்தி நேர்வழி நோக்கி அழைத்துச் செல்வதற்கும் அரபியர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.

அந்த மக்களிடம் அமைந்திருந்த இந்த பண்புகளில் சில தீமைகளை, துன்பங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தாலும் அடிப்படையில் அவை மிக உயரிய பண்புகளாகவே இருந்தன. அதனைச் சற்று சீரமைக்கும்போது மனித குலத்துக்கு அந்த பண்புகளால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன இஸ்லாம் அந்த சீர்திருத்தத்தையே செய்தது.

அவர்களிடமிருந்த மிக உயரிய பண்புகளில் “ஒப்பந்தங்களை நிறைவேற்றுதல்” என்ற நற்பண்புக்கு அடுத்ததாக “உயர்வான காரியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருத்தல்” என்ற பண்பு மக்களுக்கு மிக நன்மை பயக்கக் கூடியதாகும். ஏனெனில், தீமைகளையும் குழப்பங்களையும் களைந்து நீதியையும் நன்மையையும் நிலை நிறுத்துவதற்கு இந்த பண்பு மிக அவசியமாக இருக்கிறது.

மேற்கூறப்பட்டவை மட்டுமின்றி இன்னும் பல அரிய பண்புகளும் உயரிய குணங்களும் அவர்களிடம் இருந்தன. அவை அனைத்தையும் இங்கு கூறுவது நமது நோக்கமல்ல.