பக்கம் - 445 -
“தப்பிப்பதற்கு வழி என்ன? எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று அபூ ஸுஃப்யான் கேட்டார். அதற்கு நான் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களிடம் நீ சிக்கினால் உன்னை அவர்கள் கொலை செய்து விடுவார்கள். இந்தக் கோவேறு கழுதையில் என் பின்னே ஏறிக்கொள். நான் உன்னை நபியவர்களிடம் அழைத்துச் சென்று உனக்காக நபி (ஸல்) அவர்களிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறினேன். அவரும் எனக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டார். மற்ற அவரது இரு நண்பர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.

நான் அவரை அழைத்து வந்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒவ்வொரு நெருப்புக்கு அருகிலும் செல்லும்போதெல்லாம் “இவன் யார்?” என விசாரித்துக் கொண்டே வந்தனர். முஸ்லிம்களும் நபியின் கோவேறு கழுதையின் மீது நான் வாகனிப்பதைப் பார்த்து, “இதோ... இவர்தான் நபியுடைய தந்தையின் சகோதரர் ஆவார். இது நபியின் கோவேறு கழுதையாகும்” என்று பேசிக் கொண்டார்கள். இவ்வாறே நான் உமர் இப்னு கத்தாப் (ரழி) மூட்டியிருந்த நெருப்புக்கருகில் சென்றபோது “அவர் இது யாரென்று கேட்டுக் கொண்டே என்னை நோக்கி எழுந்து வந்தார்.” வாகனத்தின் பின்னால் அபூஸுஃப்யானைப் பார்த்தவுடன் “இவர்தான் அல்லாஹ்வின் எதிரி அபூ ஸுஃப்யான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! எவ்வித ஒப்பந்தமும் நமக்கு மத்தியில் இல்லாமல் இருக்கும் இவ்வேளையில் அல்லாஹ் உன்னை என்னிடம் சிக்க வைத்து விட்டான்” என்று கூறிக்கொண்டே கொல்வதற்கு அனுமதி வேண்டி நபியிடம் விரைந்தார்.

நான் சுதாரித்துக் கொண்டு கழுதையை உதைத்து வேகமாக ஓட்டிக் கொண்டு நபியிடம் சென்றடைந்தேன். கழுதையிலிருந்து இறங்கி நபியின் கூடாரத்திற்குள் செல்லும் போதே உமரும் கூடாரத்திற்குள் நுழைந்து விட்டார். அவர் “அல்லாஹ்வின் தூதரே! இதோ அபூ ஸுஃப்யான்! எனக்கு அனுமதி தாருங்கள். நான் அவனைக் கொன்று விடுகிறேன்” என்று கூறினார். “அல்லாஹ்வின் தூதரே! நான் இவருக்கு அடைக்கலம் கொடுத்து விட்டேன்” என்று கூறி நபிக்கருகில் அமர்ந்து கொண்டு அவர்களது தலையை எனது நெஞ்சுடன் அணைத்துக் கொண்டேன். மேலும் “இன்றிரவு என்னைத் தவிர வேறு யாரும் நபியிடம் பேச அனுமதிக்க மாட்டேன்” என்று கூறினேன். ஆனால் உமர் (ரழி) அபூ ஸுஃப்யான் விஷயத்தில் மிகப் பிடிவாதமாக இருந்தார்கள்.

நான் “உமரே! சற்று பொறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமது ‘அதீ’ கிளையைச் சேர்ந்தவராக இவர் இருந்திருந்தால் நீ இவ்வாறு கூறமாட்டாய்” என்று கூறினேன். அதற்கவர் “அப்பாஸே! நீங்கள் சற்றுப் பொறுங்கள். எனது தந்தை இஸ்லாமை ஏற்றுக் கொள்வதை விட நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதுதான் எனக்கு மிக விருப்பமானதாகும். அதாவது என் தந்தை முஸ்லிமாகுவதை விட நீங்கள் முஸ்லிமாகுவதுதான் எனக்கு அதிக விருப்பமானதாகும், ஏனெனில், என் தந்தை முஸ்லிமானால் நபிக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட நீங்கள் முஸ்லிமானால் நபிக்கு அதிகம் மகிழ்ச்சி ஏற்படும்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் “அப்பாஸே! நீர் இவரை அழைத்துச் சென்று உமது கூடாரத்தில் தங்க வைத்து காலையில் அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். காலையில் நான் அவரை அழைத்துக் கொண்டு நபியிடம் சென்றேன். அவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் “அபூ ஸுஃப்யானே! உனக்கு என்ன கேடு நேர்ந்தது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னமும் தெரிந்து கொள்ளவில்லையா?” எனக் கேட்டார்கள். “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி; நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள் உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு இறைவன் இருந்திருந்தால் அவர் இன்று எனக்கு ஏதாவது நிச்சயம் பயனளித்திருப்பார்” என அபூஸுஃப்யான் கூறினார்.