பக்கம் - 447 -
நபியுடன் இருந்த உஸ்மான் மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) ஆகிய இருவரும் “அல்லாஹ்வின் தூதரே! மேலும், அவர் குறைஷிகளைக் கொன்று குவித்து விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவ்வாறு நடக்காது. இன்றைய தினம் கஅபாவை மகிமைப்படுத்தும் தினமாகும். இன்றைய தினம் அல்லாஹ் குறைஷிகளுக்குக் கண்ணியமளித்த தினமாகும்” என்று கூறிவிட்டு ஒருவரை ஸஅதிடம் அனுப்பி அவரிடமுள்ள கொடியை வாங்கி அவரது மகன் கைசிடம் கொடுத்து விட்டார்கள். அதாவது, கொடி ஸஅதிடம்தான் இருக்கிறது என்று பொருளாகும். ஆனால் சிலர், அந்தக் கொடியை ஜுபைடம் நபி (ஸல்) கொடுத்தார்கள் என்கின்றனர்.

குறைஷிகளின் அதிர்ச்சி

நபி (ஸல்) அபூஸுஃப்யானைக் கடந்து சென்றவுடன் அப்பாஸ் (ரழி) அபூஸுஃப்யானிடம் “உடனடியாக நீ உன் கூட்டத்தனரிடம் சென்று அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அறிவிப்புச் செய்!” எனக் கூறினார். அபூஸுஃப்யான் (ரழி) மக்கா நோக்கி விரைந்து சென்று மக்காவாசிகளிடம் மிக உரக்க சப்தமிட்டு ‘குறைஷிகளே! இதோ... முஹம்மது வந்துவிட்டார். அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. எனவே, பாதுகாப்புத் தேடி எனது வீட்டிற்குள் நுழைந்து விடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் எல்லாம் பாதுகாப்புப் பெறுவர்’ என்று முழக்கமிட்டார். அபூஸுஃப்யானின் இந்நிலையைக் கண்ட அவரது மனைவி அவரது மீசையை பிடித்திழுத்து “கெண்டைக்கால் கொழுத்த இந்த திமிர் பிடித்தவனைக் கொன்று விடுங்கள்! கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பதற்கு இவன் தகுதியற்றவன்’ என்று கூறினார்.

ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத அபூஸுஃப்யான் (ரழி) “மக்களே! உங்களுக்கென்ன கேடு நேர்ந்தது! எனது பேச்சைக் கேளுங்கள்! இவளது பேச்சை கேட்டு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களால் அறவே எதிர்க்க முடியாத படையைக் கொண்டு முஹம்மது உங்களிடம் வந்திருக்கிறார். எனது வீட்டுக்குள் வந்துவிடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் பாதுகாப்புப் பெறுவர்” என்று கூறினார். அதற்கு “அல்லாஹ் உன்னை நாசமாக்குவானாக! எங்களுக்கெல்லாம் உமது ஒரு வீடு எப்படி போதுமாகும்?” என்று மக்கள் கேட்டனர். “யார் தனது வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு கொள்கிறாரோ அவரும் பாதுகாப்புப் பெறுவார் யார் மஸ்ஜிதுல் ஹராமிற்குள் செல்வாரோ அவரும் பாதுகாப்பு பெறுவார்” என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுகளையும், பள்ளிகளையும் நோக்கி ஓடினர்.

ஆனால், அதே சமயத்தில் குறைஷிகள் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒரு சிலரை ஒன்று சேர்த்து, அவர்களை முஹம்மதுடன் சண்டை செய்ய நாம் அனுப்புவோம். சண்டையில் நமக்கு வெற்றி கிடைத்தால் அதுதான் நமது நோக்கம். சண்டையில் நமக்கு தோல்வி ஏற்பட்டால் இந்த வாலிபர்களின் இழப்புக்காக அவர்களின் குடும்பத்தினர் நம்மிடம் எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்தனர்.