பக்கம் - 449 -
இஸ்லாமியப் படை மக்காவுக்குள் நுழைகிறது

நபி (ஸல்) கூறிய வழியில் இஸ்லாமியப் படையின் ஒவ்வொரு பிரிவும் புறப்பட ஆரம்பித்தது. காலித் (ரழி) மற்றும் அவரது படையினரும் தங்களை எதிர்த்த முஷ்ரிக்குகளை வெட்டி வீழ்த்தினர். காலிதின் படையிலிருந்த குர்ஸ் இப்னு ஜாபிர் ஃபிஹ், குனைஸ் இப்னு காலித் இப்னு ரபிஆ (ரழி) ஆகிய இருவரும் படையை விட்டு வழிதவறி வேறொரு வழியில் சென்றனர். இவ்விருவரையும் குறைஷிகள் கொன்று விட்டனர். ‘கன்தமா’ என்ற இடத்தில் ஒன்று சேர்ந்திருந்த குறைஷி வீணர்கள் காலிதின் படையை எதிர்த்தனர். ஆனால், முஸ்லிம் வீரர்கள் எதிர்த்துத் தாக்கியதில் பன்னிரெண்டு முஷ்ரிக்குகள் கொல்லப்பட்டனர். இதைப் பார்த்து கதிகலங்கிய முஷ்ரிக்குகள் உயிர் பிழைக்க தப்பித்து ஓடலானார்கள். இவ்வாறு புறமுதுகுக் காட்டி ஓடியவர்களில் முஸ்லிம்களுடன் சண்டை செய்வதற்காக நீண்ட காலமாக ஆயுதத்தைத் தயார் செய்து வைத்திருந்த மாஸ் இப்னு கைஸும் ஒருவனாவான். தப்பித்து ஓடிய இவன் தனது வீட்டினுள் ஒளிந்து கொண்டு “விரைவாகக் கதவை தாழிட்டுக் கொள்!” என்று கத்தினான். அவனைப் பார்த்த அவனது மனைவி “என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தாயே! அந்த வீராப்பெல்லாம் இப்போது எங்கே போய்விட்டது?” என்று கேட்டார். அதற்கு அவன் பாடிய கவிதைகளாவது:

“ஃகன்தமா போர்க்கள நாளை நீ கண்டிருந்தால்....
நீ என்னைப் பழித்து ஒரு சொல் கூட உதிர்க்க மாட்டாய்.
ஸஃப்வான் ஓட் இக்மாவும் ஓட ஓட,
உருவிய வாள்கள் எங்களை வரவேற்றன
முன் கைகளையும் தலைகளையும் வெட்டி அவை சாய்த்தன
அங்கு வீரர்களின் முழக்கங்கள், கர்ஜனைகள்,
முக்கல் முனகல் இதைத் தவிர வேறெதையும் கேட்க முடியவில்லை......”

காலித் (ரழி) இவ்வாறு மக்காவுக்குள் நுழைந்து ஸஃபா மலையில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தார்.

இது ஒருபுறமிருக்க ஜுபைர் (ரழி), இன்றைய ‘ஃபத்ஹ்’ பள்ளிவாசலுக்கருகில் உள்ள ‘ஹஜுன்’ என்ற இடத்தில் நபி (ஸல்) தன்னிடம் கொடுத்த கொடியை நட்டுவிட்டு அவ்விடத்தில் ஒரு கூடாரம் அமைத்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களின் வருகைக்காக அங்கேயே காத்திருந்தார்கள்.

நபியவர்கள் சங்கைமிகு பள்ளிக்குள் நுழைகிறார்கள் சிலைகளை அகற்றுகிறார்கள்

நபி (ஸல்) அங்கிருந்து புறப்பட்டார்கள். அவர்களைச் சுற்றி முன்னும் பின்னும் முஹாஜிர்களும் அன்சாரிகளும் புடைசூழ அணிவகுத்துச் சென்றனர். இந்நிலையில் பள்ளிக்குள் நுழைந்து ஹஜ்ருல் அஸ்வதை நெருங்கிச் சென்று, அதைத் தங்களது கையால் தொட்டு முத்தமிட்டு கஅபாவைத் தவாஃப் செய்தார்கள். தங்களது கையில் இருந்த வில்லால் கஅபாவைச் சுற்றி இருந்த 360 சிலைகளை

“சத்தியம் வந்தது அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” (அல்குர்ஆன் 17:81)

என்ற வசனத்தை ஓதியவர்களாகக் குத்திக் கீழே தள்ளினார்கள். சிலைகளெல்லாம் முகம் குப்புற கீழே விழுந்தன. நபியவர்கள் வாகனத்தின் மீது இருந்து கொண்டே தவாஃப் செய்தார்கள். இஹ்ராம் அணியாமல் இருந்ததால் தவாஃப் மட்டுமே செய்தார்கள். தவாiஃப முடித்தவுடன் உஸ்மான் இப்னு தல்ஹா (ரழி) அவர்களை அழைத்து அவரிடம் இருந்து கஅபாவின் சாவியைப் பெற்று அதைத் திறக்கக் கூறினார்கள். நபி (ஸல்) உள்ளே நுழைந்து வரையப்பட்ட பல படங்களைப் பார்த்தார்கள். அப்படங்களில் நபி இப்றாஹீம், நபி இஸ்மாயீல் (அலை) ஆகிய இருவரும் அம்புகளைக் கொண்டு குறி பார்க்கும் வகையில் வரையப்பட்ட படமும் இருந்தது. இதனைக் கண்ட நபி (ஸல்) “அல்லாஹ் இவ்வாறு வரைந்தவர்களை நாசமாக்குவானாக! இவ்விருவரும் ஒரு காலமும் அம்புகளைக் கொண்டு குறி பார்த்ததே கிடையாது” என்றார்கள். மேலும், கஅபாவுக்குள் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெண் புறாவின் உருவம் இருந்தது. அதையும் நபி (ஸல்) தங்களது கைகளால் உடைத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அங்கு வரையப்பட்டிருந்த மற்ற உருவப் படங்களும் அழிக்கப்பட்டன.