பக்கம் - 456 -
நபி (ஸல்) இவர்களின் உரையாடலைக் கேட்டு புன்னகை புரிந்து “கண்டிப்பாக நீ ஹிந்த் தானே” என்றார்கள். அதற்கவர் “ஆம்! நான் ஹிந்த்தான். சென்று போன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களை பொறுத்தருள்வான்!!” என்று கூறினார்.

“நீங்கள் விபசாரம் செய்யக் கூடாது” என்று நபி (ஸல்) கூறினார்கள். “ஒரு சுதந்திரமானவள் விபச்சாரம் புரிவாளா?” என ஹிந்த் ஆச்சரியப்பட்டார்.

“உங்களின் பிள்ளைகளை நீங்கள் கொல்லக் கூடாது” என நபி (ஸல்) கூறினார்கள். அதற்கு ஹிந்து, “நாங்கள் எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்த்தோம் அவர்கள் பெரியவர்களானதும் நீங்கள் அவர்களைக் கொன்று குவித்தீர்களே! என்ன நடந்தது என்று உங்களுக்கும் அவர்களுக்கும்தான் தெரியும்” என்று கூறினார். உமர் (ரழி) சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து சிரித்து மல்லாந்து விழுந்தார். அதைக் கண்டு நபி (ஸல்) புன்னகைத்தார்கள். ஹிந்த் இவ்வாறு கூறக் காரணம்: பத்ரு படைக்களத்தில் அவருடைய மகன் ஹன்ளலா இப்னு அபூ ஸுஃப்யான் கொல்லப்பட்டிருந்தார். அடுத்து, “நீங்கள் அவதூறு கூறலாகாது” என நபி (ஸல்) கூறவே, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவதூறு கூறுதல் மிகக் கெட்ட பண்பாகும். நீங்கள் நல்லவற்றையும், நற்குணங்களையுமே எங்களுக்கு கூறுகிறீர்கள்!” என ஹிந்த் பதிலுரைத்தார்.

“நீங்கள் நல்ல விஷயங்களில் எனக்கு மாறு செய்யக் கூடாது” என நபி (ஸல்) கூறவே, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! தங்களுக்கு மாறுபுரியும் எண்ணத்தில் நாங்கள் இங்கு அமர்ந்திருக்கவில்லை” என்று ஹிந்த் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் வீடு திரும்பிய ஹிந்த் வீட்டினுள் வைத்திருந்த சிலைகளைப் பார்த்து “நாங்கள் இதுவரை உங்களால் ஏமாற்றப்பட்டிருந்தோம்” எனக் கூறியவாறு அவற்றை உடைத்தெறிந்தார். (மதாக்குத் தன்ஜீல்)

ஹிந்த்தை பற்றி ஸஹீஹுல் புகாரியிலும் ஒரு நிகழ்ச்சி பதியப்பட்டுள்ளது. “ஹிந்த் நபியவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகில் யாருமே பெற்றிராத கேவலத்தை உங்களைச் சார்ந்தவர்கள் பெற வேண்டும் என நான் ஒரு காலத்தில் பிரியப்பட்டேன். இன்று, இவ்வுலகில் யாருமே கண்டிராத கண்ணியத்தை தாங்கள் அடைய வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்” என்று கூறினார். “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்னும் என்ன சொல்லப் போகிறாய்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸுஃப்யான் கஞ்சராக உள்ளார். அவருடைய செல்வத்திலிருந்து என் பிள்ளைகளுக்கு உணவளித்தல் குற்றமாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) “அதனை நன்மையாகவே கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

மக்காவில் நபியவர்களின் செயல்பாடுகள்

நபி (ஸல்) மக்காவில் 19 நாட்கள் தங்கியிருந்தார்கள். அக்காலக் கட்டத்தில் இஸ்லாமை எடுத்துரைத்தார்கள் அதன் சட்டதிட்டங்களை விவரித்தார்கள் மக்களுக்கு நேர்வழி மற்றும் இறை அச்சத்தை போதித்தார்கள் ஹரமின் எல்லைகளில் அடையாளக் கம்பங்களை புதுபிக்கும் பணியை குஜாஆ வமிசத்தவரான அபூஉஸைதுக்கு வழங்கினார்கள் அவர் நபி (ஸல்) கட்டளைப்படி அவற்றை செய்து முடித்தார். மேலும், இஸ்லாமிய அழைப்புப் பணிக்காகவும், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிலைகளை உடைத்தெறிவதற்காகவும் தோழர்களின் குழுக்களை அனுப்பினார்கள் அவை அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டன. நபியவர்களின் அறிவிப்பாளர், “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் வீடுகளிலுள்ள சிலைகளை உடைத்தெறிய வேண்டும்” என்று அறிவித்துக் கொண்டிருந்தார்.