பக்கம் - 459 -
இது மட்டுமல்ல! இதற்கு முன் ஏற்பட்ட ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் மகத்தான மக்கா வெற்றியின் தொடக்கமாக அமைந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின் மக்கள் நிம்மதியாக வாழ்ந்து பழைய உறவுகளைப் புதுப்பித்து மெருகேற்றிக் கொண்டனர். இஸ்லாமிய மார்க்கத்தை மற்றவருக்கும் எடுத்து விளக்கிக் கூறினர். அதனைப் பற்றி தங்களிடையேயும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்நாள் வரை மக்காவில் திரைமறைவில் இஸ்லாமிய நெறியைக் கடைபிடித்து வாழ்ந்த முஸ்லிம்கள், இஸ்லாமை ஏற்றுக் கொண்டதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்திக் கொண்டதுடன் மற்றவர்களையும் மார்க்கத்தின் பக்கம் அழைக்க, பெரும் பாலானவர்கள் இஸ்லாமியப் பூங்காவிற்குள் இன்முகத்துடன் நுழைந்தனர். இதுவரை நடந்த போர்களில் முஸ்லிம் படையினர் எண்ணிக்கை மூவாயிரம், நான்காயிரத்தைத் தாண்டாத நிலை. ஆனால், ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் நடந்த மக்கா போலோ பத்தாயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போர் மக்களின் அறிவுக் கண்களைத் திறந்தது. இஸ்லாமை ஏற்பதற்கு குறுக்கிட்ட தடைக் கல்லைத் தகர்த்தெறிந்தது.

அரபு தீபகற்பத்தில் முழு அளவில் அரபுலகத்தை அரசியல் மற்றும் மார்க்க ரீதியாக தங்களது கட்டுப்பாட்டில் முஸ்லிம்கள் கொண்டு வந்தனர். ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு சாதாகமான சூழ்நிலை இம்மகத்தான வெற்றியால் முழுமை பெற்றது. இதன்பின் ஏற்பட்ட கால நிலைமைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கே சாதகமாக அமைந்தன. அங்கு அனைத்தையும் முஸ்லிம்கள் தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முஸ்லிம்களின் நற்பண்புகளால் கவரப்பட்ட ஏனைய அரபு வமிசத்தினர், இஸ்லாமில் இணைய ஆர்வம் காட்டினர். அதிலிருந்து தடுத்து வந்த தீய சக்திகளும் அழிந்துவிட்டதால் இஸ்லாமை ஏற்றுக் கொள்வது அவர்களுக்கு இலகுவானது. அவர்களும் நபித்தோழர்களுடன் சேர்ந்து இஸ்லாமைப் பரப்புவதற்காக புறப்பட்டனர். இந்த அழைப்புப் பணிக்காக வரும் ஈராண்டுகளில் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டது.இது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்வின் கடைசிக் கட்டம். இஸ்லாமிய அழைப்புப் பணி ஏறக் குறைய இருபதாண்டு காலமாகச் சந்தித்த சிரமங்கள், இன்னல்கள், துன்பங்கள், மோதல்கள், போர்கள் ஆகிய அனைத்திற்குப் பின் ஏற்பட்ட அழகிய பின்விளைவுகள்தான் இக்காலக் கட்டத்தின் முக்கிய அம்சங்கள். இந்த மக்கா வெற்றிக்குப் பின் அரபுலகமே முற்றிலும் மாற்றம் கண்டது. அரபிய தீபகற்பத்தின் எதிர்காலமே தெளிவான வெளிச்சத்தை நோக்கி வெற்றி நடைபோட்டது. ‘மக்கா வெற்றிக்கு முன்“, ‘மக்கா வெற்றிக்குப் பின்’ என்று ‘மக்கா வெற்றி’ ஒரு வரலாற்று அடித்தளமாக மாறியது. குறைஷிகள்தான் அரபு மக்களுக்கு மார்க்க வழிகாட்டிகளாக விளங்கினர். சிலைகளைப் புறந்தள்ளி விட்டு, இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டது அரபியத் தீபகற்பத்தில் சிலை வணக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிந்தது என்பதற்கு மாபெரும் சான்றாகும்.

இக்காலக் கட்டத்தை நாம் இரண்டாகப் பிரிக்கலாம்

1) தியாகங்களும், போர்களும்.

2) பல குடும்பத்தினர், கிளையினர் கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தில் இணைதல்.

இவ்விரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாக இருந்தாலும் இவற்றை வேறுபடுத்திக் காட்ட முதன் முதலாக போர்களைப் பற்றி பேச இருக்கிறோம். ஏனெனில், இதற்கு முன்னால் போரைப் பற்றியே நாம் அதிகம் அலசியிருக்கிறோம். அதனால், தொடர்ந்து போரைப் பற்றி பேசுவதே பொருத்தமானதாக இருக்கும்.