பக்கம் - 465 -
கனீமா பொருட்கள்

இப்போல் முஸ்லிம்களுக்கு ஏராளமான கனீமத்துப் பொருட்கள் கிடைத்தன. ஆராயிரம் அடிமைகள், இருபத்தி நான்காயிரம் ஒட்டகங்கள், நாற்பதாயிரத்திற்கும் அதிகமான ஆடுகள், நான்காயிரம் ‘ஊக்கியா’ வெள்ளிகள் ஆகியவை கனீமத்தாக (வெற்றிப் பொருளாகக்) கிடைத்தன. நபி (ஸல்) இவற்றை ஒன்று சேர்த்து ‘ஜிஃரானா’ என்ற இடத்தில் வைத்து அதற்கு ‘மஸ்வூது இப்னு அம்ர் கிஃபாயை’ பாதுகாவலராக நியமித்தார்கள். தாயிஃப் சென்று திரும்பிய பிறகுதான் இவற்றை நபி (ஸல்) பங்கிட்டார்கள்.

சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ‘ஷீமா பின்த் ஹாரிஸ் அல் ஸஃதியா’ என்ற பெண்ணும் இருந்தார். இவர் நபி (ஸல்) அவர்களின் பால்குடி சகோதயாவார். இவரை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டது. அப்பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நபி (ஸல்) ஓர் அடையாளத்தைக் கொண்டு அப்பெண்மணி இன்னார்தான் என்பதை அறிந்து கொண்டார்கள். அவரை சங்கை செய்து, தனது போர்வையை விரித்து அமர வைத்தார்கள். அவருக்கு உதவி செய்து அவரது கூட்டத்தார்களிடமே அனுப்பி வைத்தார்கள்.

தாயிஃப் போர்

இப்போர், உண்மையில் ஹுனைன் போரின் ஒரு தொடராகும். ‘ஹவாஜின், ஸகீப்’ கிளையினரில் தோல்வியடைந்த அதிகமானவர்கள் தங்களின் தளபதி ‘மாலிக் இப்னு அவ்ஃப் நஸ்“யுடன் தாம்ஃபில் அடைக்கலம் புகுந்தனர். முதலில் ஆயிரம் வீரர்களுடன் காலித் இப்னு வலீதை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். பின்பு நக்லா அல்யமானியா, கர்னுல் மனாஜில், லிய்யா வழியாக தாம்ஃபிற்குப் பயணமானார்கள். ‘லிய்யா’ என்ற இடத்தில் மாலிக் இப்னு அவ்ஃபிற்குச் சொந்தமான பெரும் கோட்டை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அதை உடைக்கும்படி கட்டளையிட்டார்கள். தாம்ஃபின் கோட்டையில் எதிரிகள் அடைக்கலம் புகுந்திருந்தனர். நபி (ஸல்) அக்கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டார்கள்.

இம்முற்றுகை பல நாட்கள் அதாவது, நாற்பது நாட்களாக நீடித்தது என்று ஸஹீஹ் முஸ்லிமில் வரும் ஓர் அறிவிப்பிலிருந்து தெரிய வருகிறது. ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் இதற்கு மாற்றமாக கூறுகின்றனர். சிலர் இருபது நாட்கள் என்றும், சிலர் பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் என்றும், சிலர் பதினெட்டு நாட்கள் என்றும், சிலர் பதினைந்து நாட்கள் என்றும் கூறுகின்றனர். (ஃபத்ஹுல் பாரி)

இக்காலக் கட்டத்தில் இருதரப்பிலிருந்தும் அம்பு, ஈட்டி, கற்கள் ஆகியவற்றால் தாக்குதல்கள் நடந்தன. முதலில் எதிரிகளிடமிருந்து அம்புகளால் கடுமையான தாக்குதல் நடந்தது. முஸ்லிம்களில் பலருக்கு இதில் பலத்த காயமேற்பட்டது. 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதனால் முஸ்லிம்கள் தங்களது முகாம்களை மாற்றி உயரமான இடத்திற்குச் சென்று விட்டனர். அதாவது, இன்று தாம்ஃபின் பெரிய பள்ளிவாசல் இருக்குமிடத்தில் தங்களது முகாம்களை அமைத்துக் கொண்டனர்.

நபி (ஸல்) மின்ஜனீக் கருவிகள் மூலமாகக் கற்களை எறிந்து கோட்டைச் சுவரில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தினார்கள்.