பக்கம் - 466 -
முஸ்லிம்கள் மரப் பலகைகளால் செய்யப்பட்ட பீரங்கி போன்ற குழாய்களில் புகுந்து கொண்டு கோட்டைச் சுவரை நோக்கி நெருங்கினர். எதிரிகள் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கொக்கிகளைக் கொண்டு மேலிருந்து முஸ்லிம்களைத் தாக்கினர். இதனால் மரக் குழாய்களிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறினர். அப்போது எதிரிகள் முஸ்லிம்களை நோக்கி அம்புகளை எறிந்தனர். அதில் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து எதிரிகளைப் பணிய வைப்பதற்காக போர்த் தந்திரம் என்ற முறையில் மற்றொரு வழியையும் நபி (ஸல்) கையாண்டார்கள். அங்கிருந்த திராட்சைக் கொடிகளையெல்லாம் வெட்டி வீழ்த்துமாறு கட்டளையிட்டார்கள். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். இதைப் பார்த்த ஸகீஃப் கிளையினர் தூதனுப்பி அல்லாஹ்வுக்காகவும், உறவுக்காகவும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று வேண்டினர். நபியவர்களும் அதை விட்டுவிட்டார்கள்.

“யார் கோட்டையிலிருந்து வெளியேறி எங்களிடம் வந்து சேர்ந்து விடுவாரோ அவர் அடிமைப்படுத்தப் படமாட்டார்” என்று அறிவிக்கும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். இந்த அறிவிப்பைக் கேட்டு எதிரிகளில் இருபத்து மூன்று வீரர்கள் சரணடைந்தனர். (ஸஹீஹுல் புகாரி)

அதில் பிரசித்திப் பெற்ற ‘அபூபக்ரா“வும் ஒருவர். இவர் நீர் இரைக்கும் கப்பியின் மூலமாக கயிற்றில் கீழே இறங்கி வந்தார். இதற்கு அரபியில் ‘பக்கரா’ என்று சொல்லப்படும். இதனால் நபி (ஸல்) அவருக்கு ‘அபூபக்ரா’ என்று புனைப் பெரியட்டார்கள். வந்தவர்கள் அனைவரையும் உரிமைவிட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் முஸ்லிம்களில் ஒருவர் பொறுப்பேற்கும்படி செய்தார்கள். இச்சம்பவங்களைக் கண்ட எதிரிகள் மனச் சங்கடத்திற்கு உள்ளானார்கள்.

இவ்வாறு முற்றுகையின் காலம் நீண்டு கொண்டே சென்றது. கோட்டையை வெல்வதும் மிகச் சிரமமாக இருந்தது, எதிரிகளின் அம்பு மற்றும் இரும்புக் கொக்கிகளுடைய தாக்குதலால் முஸ்லிம்களுக்குப் பெருத்தச் சேதமும் ஏற்பட்டது. ஓர் ஆண்டுக்கு முற்றுகையை தாக்குப் பிடிக்குமளவிற்கு கோட்டை வாசிகள் முழு தயாரிப்புகளுடன் இருந்தனர். இதனால் நபி (ஸல்) நவ்ஃபல் இப்னு முஆவியாவிடம் ஆலோசனை செய்தார்கள். அவர் கூறிய கருத்தாவது:

இவர்கள் பொந்திலுள்ள நயைப் போன்றவர்கள். நீங்கள் அதைப் பிடிக்க வேண்டுமென்று நிலையாக நின்றால் பிடித்து விடலாம். அதை விட்டுச் செல்வதால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காது.

நவ்ஃபலின் இந்த ஆலோசனையைக் கேட்ட நபி (ஸல்) திரும்பி சென்று விடலாம் என்று முடிவு செய்தார்கள். உமரை அழைத்து “இன்ஷா அல்லாஹ்! நாளை நாம் திரும்ப இருக்கிறோம்” என்று மக்களுக்கு அறிவிக்கும்படி கூறினார்கள். “கோட்டையை வெற்றி கொள்ளாமல் நாம் எப்படி திரும்புவது?” என்று முஸ்லிம்கள் கேட்டனர். இப்பேச்சு நபி (ஸல்) அவர்களின் காதுக்கு எட்டியவுடன் “சரி! நாளைக்கும் போரிடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் மறுநாள் போருக்குச் சென்றபோது கடினமான காயம் அவர்களுக்கு ஏற்பட்டது. அன்று மாலையில் “நாளை நாம் திரும்பிச் சென்று விடலாம்” என அறிவிப்புச் செய்தார்கள். மக்கள் அதைக் கேட்டு சந்தோஷமடைந்து புறப்படுவதற்குத் தயாரானார்கள். இதைப் பார்த்து நபி (ஸல்) சிரித்தார்கள்.

மக்கள் பயணமானவுடன் பின்வரும் துஆவை ஓதும்படி நபி (ஸல்) கூறினார்கள். “திரும்புகிறோம் பாவமீட்சி கோருகிறோம் இறைவணக்கம் செய்கிறோம் எங்கள் இறைவனையே புகழ்கிறோம்.”