பக்கம் - 468 -
நபியவர்கள் மீது அன்சாரிகளின் வருத்தம்

புதிதாக இஸ்லாமைத் தழுவிய குறைஷித் தலைவர்களுக்கும் ஏனைய குறைஷிகளுக்கும் நபி (ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கினார்கள். ஆனால், இஸ்லாமுக்காக நீண்ட காலம் தியாகம் செய்து வந்த தனது உற்ற தோழர்களுக்கு அந்தளவு வழங்கவில்லை. ஒரு பெரிய அரசியல் காரணத்தை முன்னிட்டு நபி (ஸல்) இவ்வாறு செய்தார்கள். பொதுவாக மக்கள் அந்த நுட்பத்தை விளங்கிக் கொள்ளாமல் பலவாறு பேசினார்கள். இதைப் பற்றி அபூஸயீது அல்குத் (ரழி) வாயிலாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அறிவிப்பதை பார்ப்போம்.

அபூஸயீது அல்குத்ரீ (ரழி) கூறுகிறார்கள்: குறைஷிகளுக்கும் ஏனைய அரபு கோத்திரங்களுக்கும் நபி (ஸல்) கனீமத்தை வாரி வழங்கினார்கள். ஆனால், அன்சாரிகளுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் அன்சாரிகளில் ஒரு குறிப்பிட்ட கிளையினர் மன வருத்தமடைந்து பலவாறாகப் பேசினர். அவர்களில் சிலர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) தனது கூட்டத்தினருக்கே வாரி வழங்குகின்றார்கள்” என்று பேசினார்கள். ஸஅது இப்னு உபாதா (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அன்சாரிகளில் இந்தக் கூட்டத்தினர் உங்கள் மீது வருத்தமாக உள்ளனர். உங்களுக்குக் கிடைக்கப்பட்ட இந்த கனீமா பொருட்களில் உங்கள் கூட்டத்தாருக்கும் ஏனைய கோத்திரங்களுக்கும் வாரி வழங்கினீர்கள். ஆனால் அன்சாரிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதுதான் அவர்களின் வருத்தத்திற்குக் காரணம்” என்றார். “ஸஅதே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “நான் எனது கூட்டத்தால் ஒருவன்தானே!” என்று கூறினார். நபி (ஸல்) “சரி! உங்கள் கூட்டத்தார்களை இந்தத் தடாகத்திற்கு அருகில் ஒன்று சேருங்கள்” என்று கூறினார்கள்.

ஸஅது (ரழி), நபியவர்களிடமிருந்து வெளியேறி தனது கூட்டத்தாரிடம் சென்று அவர்களை அந்தத் தடாகத்திற்கருகில் ஒன்று சேர்த்தார். அங்கே சில முஹாஜிர்களும் வந்தார்கள். அவர்களுக்கு ஸஅது (ரழி) அனுமதி வழங்கவே அவர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். மேலும் சில முஹாஜிர்கள் அங்கே வந்தனர். ஆனால், அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அனைவரும் ஒன்று சேர்ந்தவுடன் ஸஅது (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் சென்று “அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். வாருங்கள்!” என நபியவர்களை அழைத்தார்கள். நபி (ஸல்) அங்கு வந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு பேசினார்கள். “அன்சாரி கூட்டத்தினரே! உங்களைப் பற்றி எனக்கு எட்டிய செய்தி என்ன? என்மீது நீங்கள் கோபமடைந்துள்ளீர்களா? நீங்கள் வழிகேட்டில் இருக்கும் போது நான் உங்களிடம் வரவில்லையா? அல்லாஹ் உங்களுக்கு (நான் வந்த பின்) நேர்வழி காட்டினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை செல்வந்தர்களாக்கினான். நீங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக இருந்தீர்கள். அல்லாஹ் உங்களை ஒன்று சேர்த்தான்.” இவ்வாறு நபி (ஸல்) கூறி முடித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஆம்! நீங்கள் கூறியது உண்மைதான். அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்கள் மீது பெரும் கருணையுடைவர்கள், பேருபகாரம் உள்ளவர்கள்” என்று அன்சாரிகள் கூறினார்கள்.

“அன்சாரிகளே! நீங்கள் எனக்குப் பதிலளிக்க மாட்டீர்களா?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களிடம் என்ன கூறுவது? அனைத்து உபகாரமும் கிருபையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமே உரித்தானது” என்று அன்சாரிகள் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) கூறியதாவது: “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! பொய்ப்பிக்கப் பட்டவராக நீங்கள் எங்களிடம் வந்தீர்கள் நாங்கள் உங்களை உண்மைப்படுத்தினோம். மக்களால் கைவிடப்பட்டவர்களாக எங்களிடம் வந்தீர்கள் நாங்கள்தான் உங்களுக்கு உதவி செய்தோம். மக்களால் விரட்டப்பட்ட நிலையில் வந்தீர்கள் நாங்கள் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்தோம். நீங்கள் சிரமத்துடன் வந்தீர்கள் நாங்கள் உங்களுக்கு ஆதரவளித்தோம் என்று நீங்கள் பதில் கூறலாம்.