பக்கம் - 473 -
அவர்களில் புகழ்பெற்ற பேச்சாளரான உத்தாத் இப்னு ஹாரிஸ் என்பவரை அவர்கள் முன்னிறுத்தினர். அவர் உரையாற்றியவுடன் இஸ்லாமியப் பேச்சாளரான கைஸ் இப்னு ஷம்மாஸுக்கு நபி (ஸல்) கட்டளையிட, அவர் எழுந்து உத்தாதிற்கு பதிலளித்தார். பின்பு தங்களின் புகழ்பெற்ற கவிஞர் ஜுப்ருகான் இப்னு பத்ரை அவர்கள் நிறுத்தினர். அவர் தங்களின் பெருமையைக் கவிதையாகப் பாடினார். நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்திடம் பதில் கூறும்படி கூறினார்கள். ஹஸ்ஸான் உடனடியாக வாயடைக்கும் பதிலைத் தனது கவிதையில் வழங்கினார்.

இப்போட்டி முடிந்தவுடன் தமீம் குழுவில் இடம் பெற்றிருந்த நடுவர் அக்ரா இப்னு ஹாபிஸ் கூறி தீர்ப்பாவது: நபி (ஸல்) அவர்களின் பேச்சாளர் நமது பேச்சாளரை விட மிகத் திறமையானவர் நபி (ஸல்) அவர்களின் கவிஞர் நமது கவிஞரைவிட மிகத் திறமையானவர் அவர்களுடைய குரல் நமது குரலைவிட மிக உயர்ந்தது அவர்களது சொற்கள் நமது சொற்களை விட மிக உயர்ந்தது. அவன் இத்தீர்ப்புக்குப் பின் அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். நபி (ஸல்) அவர்களுக்கு வெகுமதிகளை அளித்ததுடன் கைதிகளையும் அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தார்கள்.

2) குத்பா இப்னு ஆமிர் படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ஸஃபர் மாதம் ‘துரபா’ என்ற நகருக்கருகிலுள்ள ‘தபாலா’ என்ற பகுதியில் வசிக்கும் கஸ்அம் கபீலாவைச் சேர்ந்த ஒரு கிளையினரிடம் குத்பா இப்னு ஆமிர் என்பவரை இருபது வீரர்களுடன் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் பத்து ஒட்டகங்களில் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி பயணம் செய்தனர். அங்குச் சென்று எதிரிகளுடன் கடுமையான சண்டை செய்தனர். இரு தரப்பிலும் அதிகமான சேதங்கள் ஏற்பட்டன. இதில் தளபதியாக இருந்த குத்பாவும் கொல்லப்பட்டார். ஆனால், இறுதியில் வெற்றி முஸ்லிம்களுக்கே கிடைத்தது. எதிரிகளின் கால்நடைகளையும் பெண்களையும் முஸ்லிம்கள் மதீனாவுக்குக் கொண்டு வந்தனர்.

3) ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் ‘ழஹ்ஹாக் இப்னு ஸுஃப்யான் கிலாபி’ என்பவரின் தலைமையில் கிளாப் கிளையினரை இஸ்லாமின் பக்கம் அழைப்பதற்காக நபி (ஸல்) ஒரு படைப் பிரிவை அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களின் அழைப்பை அவர்கள் ஏற்க மறுத்துப் போருக்குத் தயாரானார்கள். போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். எதிரிகளில் ஒருவன் மட்டும் கொல்லப்பட்டான்.

4) அல்கமா படைப் பிரிவு: ஹிஜ்ரி 9, ரபீஉல் ஆகிர் மாதம் ‘ஜுத்தா’ கடற்கரையை நோக்கி ‘அல்கமா இப்னு முஜஸ்ஸிர்’ என்பவரின் தலைமையின் கீழ் 300 வீரர்களை நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இதற்குக் காரணம், ஹபஷாவைச் சேர்ந்த சிலர் மக்காவில் கொள்ளையடிப்பதற்காக ஜுத்தா கடற்கரையில் ஒன்று கூடியிருக்கின்றனர் என்ற தகவல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அல்கமா தனது படையுடன் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் ரோந்து சுற்றினார். அங்குள்ள ஒரு தீவு வரை சென்று தேடினார். முஸ்லிம்கள் வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்த ஹபஷிகள் தப்பி ஓடிவிட்டதால் சண்டை ஏதும் நடக்கவில்லை. (ஃபத்ஹுல் பாரி)

5) அலீ படைப் பிரிவு: தை கூட்டத்தினருக்கென்று பிரசித்திப்பெற்ற சிலை ஒன்றிருந்தது. அதை அம்மக்கள் ‘ஃபுல்ஸ்’ என்றழைத்தனர். அதை இடிப்பதற்ககாக அலீ இப்னு அபூ தாலிபை 150 வீரர்களுடன் ஹிஜ்ரி 9, ரபீஉல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அனுப்பி வைத்தார்கள். இவர்கள் நூறு ஒட்டகைகள், ஐம்பது குதிரைகளில் பயணம் செய்தனர். இவர்களிடம் கருப்பு நிறத்தில் பெரிய கொடி ஒன்றும், வெள்ளை நிறத்தில் சிறிய கொடி ஒன்றும் இருந்தது. வந்து சேர வேண்டிய இடத்தை அடைந்தவுடன், ஃபுல்ஸ் சிலையைத் தகர்த்தெறிந்து விட்டு அங்கிருந்த கஜானாவையும் கைப்பற்றினர். அதில் மூன்று வாட்களும், மூன்று கவச ஆடைகளும் இருந்தன.