பக்கம் - 480 -
நபியவர்களின் எதிர் நடவடிக்கை!

இந்த எல்லா நிலைமைகளையும் நபி (ஸல்) உன்னிப்பாகக் கவனித்து வந்தார்கள். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் ரோமர்களுடன் போர் செய்யாமலிருப்பதோ அல்லது முஸ்லிம்களின் எல்லைக்குள் அவர்களை நுழைய விடுவதோ இஸ்லாமிய அழைப்புப் பணிக்கும் முஸ்லிம் இராணுவத்தின் கௌரவத்திற்கும் மிகப் பெரிய பின்னடைவையும் களங்கத்தையும் ஏற்படுத்திவிடும். ஹுனைன் யுத்தத்தில் படுதோல்வி கண்டபின் தனது இறுதி மூச்சை எண்ணிக் கொண்டிருக்கும் முஷ்ரிக்குகள் மீண்டும் உயிர்பெற்றெழுவார்கள். முஸ்லிம்களுக்குச் சோதனைகளும், ஆபத்துகளும் நிகழ வேண்டுமென்று எதிர்பார்த்திருக்கும் நயவஞ்சகர்கள் பாவி அபூ ஆமின் உதவியுடன் ரோம் நாட்டு மன்னனுடன் தொடர்பு வைத்திருந்தனர். முஸ்லிம்கள் மீது ரோமர்கள் தாக்குதல் நடத்தினால் இந்த நயவஞ்சகர்கள் முஸ்லிம்களின் முதுகுக்குப் பின்னாலிருந்து தாக்கி அழிப்பார்கள். இதனால் இஸ்லாமைப் பரப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் இதுநாள் வரை செய்து வந்த அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். பல போர்களையும் படையெடுப்புகளையும் சந்தித்து, உம்ராலும் பொருளாலும் பல தியாகங்களைச் செய்ததின் மூலமாக கிடைத்த பயன்கள் எல்லாம் வீணாகிவிடும். இதையெல்லாம் நன்கு உணர்ந்திருந்த நபி (ஸல்) “எவ்வளவுதான் சிரமம் ஏற்பட்டாலும் ரோமர்களது எல்லைக்கும் செல்லக் கூடாது அதே சமயம் இஸ்லாமிய எல்லையில் அவர்கள் படையுடன் நுழைய வாய்ப்பும் அளிக்கக் கூடாது” என்று திட்டவட்டமான முடிவெடுத்தார்கள்.

ரோமர்களிடம் போர் புரிய தயாராகும்படி அறிவிப்பு

நபி (ஸல்) தங்களின் நிலைமையை அறிந்து தெளிவாக முடிவெடுத்த பின் போருக்குத் தயாராகுங்கள் என தங்களது தோழர்களுக்கு அறிவித்தார்கள். அருகிலுள்ள அரபு கோத்திரத்தாருக்கும், மக்கா வாசிகளுக்கும் தங்களது தோழர்களின் குழுக்களை அனுப்பி போருக்குத் தயாராகும்படி கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) ஒரு போருக்காகச் செல்லும் போது, தான் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிடாமல் அதற்கு மாற்றமாக வேறொர் இடத்திற்குச் செல்கிறோம் என்று குறிப்பிடுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை பெரும் ஆபத்திற்குரியதாக இருப்பதாலும், மிகக் கடுமையான வறுமை நிலைமையில் இருப்பதாலும் தங்களின் நோக்கத்தை நபி (ஸல்) வெளிப்படையாகக் கூறினார்கள். “நாம் ரோமர்களை சந்திக்க இருக்கிறோம் என்று மக்களுக்கு தெளிவுபடுத்தி, அதற்குத் தேவையான முழு தயாரிப்புகளையும் செய்து கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தி, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்கு ஆர்வமூட்டினார்கள். அல்லாஹ் அத்தியாயம் பராஆவின் ஒரு பகுதியை இறக்கிவைத்தான். துணிவுடன் எதிரிகளை எதிர்க்க வேண்டும் என்றும், அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதால் ஏற்படும் நன்மைகளை விளக்கியும், இந்த வசனங்களின் மூலம் அல்லாஹ் அவர்களைப் போருக்கு ஆயத்தமாக்கினான். நபி (ஸல்) அவர்களும் தர்மம் செய்வதின் சிறப்புகளையும், அல்லாஹ்வின் பாதையில் தங்களின் உயர்வான பொருட்களைச் செலவு செய்வதின் சிறப்புகளையும் கூறி தங்களின் தோழர்களுக்கு ஆர்வமூட்டினார்கள்.

முஸ்லிம்கள் போட்டி போட்டுக்கொண்டு போருக்குத் தயாராகுகின்றனர்

ரோமர்களிடம் போர் புரிய வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் அழைப்பைக் கேட்டதுதான் தாமதம், முஸ்லிம்கள் நபியவர்களின் கட்டளைக்கிணங்க வெகு விரைவாக போருக்குத் தயாராகினர். மக்காவைச் சுற்றியுள்ள அரபி கோத்திரத்தார்கள் எல்லாம் பல வழிகளில் மதீனா வந்து குழுமினர். உள்ளத்தில் நயவஞ்சகத் தன்மையுள்ளவர்களைத் தவிர போரில் கலந்து கொள்ளாமலிருப்பதை மற்றெவரும் அறவே விரும்பவில்லை. ஆம்! நபி (ஸல்) அவர்களின் அந்த நெருக்கமான மூன்று தோழர்களைத் தவிர. இவர்கள் போரில் கலந்து கொள்ளவில்லை. மற்றும் தங்களின் போருக்கான செலவுகளைச் செய்ய இயலாத வறுமையில் உள்ள நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நாங்களும் ரோமர்களுடன் போர் புரிய உங்களுடன் வருகிறோம். எங்களுக்கு வாகன வசதி செய்து தாருங்கள்” என்று கேட்டனர். நபி (ஸல்) மிக்க கவலையுடன் “உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் வாகனம் ஒன்றுமில்லையே” என்றார்கள். அந்தப் பதிலை கேட்ட தோழர்கள் “அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய எங்களிடம் வசதி இல்லையே!” என்று அழுதவர்களாக சபையிலிருந்து திரும்பிச் சென்றனர்.