பக்கம் - 482 -
இவர்கள் எத்தகையவர்கள் என்றால், நம்பிக்கையாளர்களில் உள்ள செல்வந்தர்கள் (தங்கள் பொருட்களை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்வது பற்றி குற்றம் கூறுகின்றனர். (அதிலும் குறிப்பாக) கூலி வேலை செய்து சம்பாதிப்போர் (தங்கள் பொருளை இவ்வாறு தானம் செய்வது) பற்றியும் அவர்கள் பரிகசிக்கின்றனர். அல்லாஹ் (நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கும்) அவர்களைப் பரிகசிக்கின்றான். அன்றி (மறுமையில்) துன்புறுத்தும் வேதனையும் அவர்களுக்கு உண்டு. (அல்குர்ஆன் 9:79)

தபூக்கை நோக்கி இஸ்லாமியப் படை...

இவ்வாறு முடிந்தளவு முன்னேற்பாடுகளுடன் இஸ்லாமியப் படை மதீனாவிலிருந்து புறப்பட்டது. மதீனாவில் நபி (ஸல்) அவர்களின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் முஹம்மது இப்னு மஸ்லமா (ரழி) என்றும், சிலர் ஸபா இப்னு உர்ஃபுதா (ரழி) என்றும் கூறுகின்றனர். நபி (ஸல்) தங்களது குடும்பத்திற்கு அலீ இப்னு அபூதாலிபை (ரழி) பிரதிநிதியாக நியமித்தார்கள். படை புறப்பட்ட பின் இதைப் பற்றி நயவஞ்சகர்கள் குத்தலாகப் பேசவே, அலீ (ரழி) மதீனாவில் இருந்து புறப்பட்டு நபி (ஸல்) அவர்களைச் சென்றடைந்தார்கள். “மூஸா (அலை) அவர்களுக்கு ஹாரூன் (அலை) இருந்ததைப் போன்று நீ எனக்கு இருக்க விரும்பவில்லையா? ஆனால், எனக்குப் பின் எந்தவொரு நபியும் இல்லை” என்று கூறி, அலீயை மதீனாவிற்கு திரும்ப அனுப்பி விட்டார்கள்.

படை மதீனாவிலிருந்து வியாழக்கிழமை தபூக்கை நோக்கிப் புறப்பட்டது. படையின் தயாரிப்புக்காக எவ்வளவுதான் செலவு செய்த போதிலும் இதற்கு முன்பில்லாத அளவுக்கு வீரர்களின் எண்ணிக்கை முப்பதாயிரமாக இருந்ததால், வீரர்களின் எண்ணிக்கை அளவுக்கு வாகன வசதியும், உணவும் இல்லாமலிருந்தது. ஒரே ஓர் ஒட்டகத்தில் முறை வைத்து பதினெட்டு நபர்கள் வாகனித்தனர். உணவுப் பற்றாக்குறையால் இலை தழைகளைச் சாப்பிட்டதால் வாயெல்லாம் புண்ணாகி விட்டன. தண்ணீருக்காக ஒட்டகங்களை அறுத்து அதன் இரப்பையில் இருக்கும் நீரை அருந்தும் அளவிற்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இக்காரணத்தால் இப்படைக்கு ‘ஜய்ஷுல் உஸ்ரா (வறுமைப் படை) என்று பெயர் வந்தது.

தபூக்கை நோக்கிச் செல்லும் வழியில் ‘ஜ்ர்’ என்னும் ஊர் வந்தது. ‘வாதில் குரா’ என்ற பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து வாழ்ந்த ஸமூது கூட்டத்தாரின் வீடுகள் இங்குதான் இருந்தன. தாகம் மிகுதியால் அங்குள்ள கிணற்றிலிருந்து தங்களது பாத்திரங்களிலும் துருத்திகளிலும் தண்ணீரை நிரப்பிக் கொண்டார்கள். ஆனால், “அந்தத் தண்ணீரைக் குடிக்காதீர்கள் அதில் உழுவும் செய்யாதீர்கள் அதிலிருந்து குழைத்த மாவை ஒட்டகங்களுக்குக் கொடுத்து விடுங்கள் நீங்கள் அதிலிருந்து எதையும் சாப்பிடாதீர்கள் அதை அடுத்துள்ள ஸாலிஹ் (அலை) அவர்களின் ஒட்டகம் தண்ணீர் குடித்த கிணற்றிலிருந்து நீரை சேமித்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.