பக்கம் - 485 -
மதீனாவிற்குத் திரும்புதல்

தபூக்கிலிருந்து இஸ்லாமிய ராணுவம் சண்டையின்றி வெற்றி வாகை சூடி மதீனா வந்தது. சண்டைகளிலிருந்து இறைநம்பிக்கையாளர்களை அல்லாஹ் பாதுகாத்தான். வழியில் ஒரு கணவாயை அடையும்போது நபி (ஸல்) அவர்களைக் கொன்றுவிட வேண்டுமென பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் சதித்திட்டம் தீட்டினர். நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முன் பக்கத்தில் இருந்து அம்மார் இழுத்துச் செல்ல, ஹுதைஃபா (ரழி) ஒட்டகத்தைப் பின்னாலிருந்து ஓட்டிச் சென்றார். திடீரென ஒரு கூட்டம் முகங்களை மறைத்தவர்களாக இம்மூவரையும் சூழ்ந்து கொண்டனர். ஹுதைஃபா (ரழி) தன்னிடமிருந்த வளைந்த கைத்தடியால் சூழ்ச்சிக்காரர்களுடைய வாகனங்களின் முகத்தை நோக்கி சுழற்றி அடித்தார். நபித்தோழர்கள் உஷாராக இருப்பதைக் கண்ட அந்தக் கும்பலின் உள்ளத்தில் பயம் கவ்வியதும் தப்பி ஓடி, முஸ்லிம்களின் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விட்டனர். அந்தக் கும்பலில் வந்தவர்கள் யார்? அவர்களது நோக்கம் என்ன? என்பதை நபி (ஸல்) விவரித்துக் கூறினார்கள். இதனால்தான் ஹுதைஃபாவுக்கு “நபியின் அந்தரங்கத் தோழர்” என்ற புனைப் பெயரும் உண்டு.

இந்நிகழ்ச்சி குறித்து அல்லாஹ் குறிப்பிடுகிறான்:

(உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி அவர்கள்) தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் முயற்சித்தனர். (அல்குர்ஆன் 9:74)

வெகு தூரத்தில் மதீனாவின் கட்டடங்கள் தெரியவே “இது தாபா (இது சிறந்த ஊர்). இதோ உஹுது மலை. இது நம்மை நேசிக்கிறது நாமும் இதனை நேசிக்கிறோம்” என நபி (ஸல்) கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் வருகையை கேள்விப்பட்ட முஸ்லிம்களில் பெண்கள், சிறுவர், சிறுமியர், குழந்தைகள் அனைவரும் மதீனாவுக்கு வெளியே வந்து மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று,

“நம் எதிரே முழு நிலா தோன்றியது

வழியனுப்பும் பாறைகளிலிருந்து.

நன்றி கூறல் நம்மீது கடமை;

அல்லாஹ்வை அழைப்பவர் அழைக்கும் வரை.”

என்று பாடினர்.

ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்தடைந்தார்கள். இப்போருக்காக ஐம்பது நாட்கள் செலவாயின. அதாவது, இருபது நாட்கள் தபூக்கில் தங்கினார்கள். மீதம் முப்பது நாட்கள் இதற்கான பயணத்தில் கழிந்தன. இதுவே நபி (ஸல்) கலந்து கொண்ட இறுதிப் போராகும்.

பின்தங்கியவர்கள்

இப்போர் அதன் விசேஷ நிலைமைகளைப் பொறுத்து அல்லாஹ்வின் மிகப்பெரும் சோதனையாக அமைந்திருந்தது. உண்மை முஸ்லிம் யார் என இப்போர் இனங்காட்டிவிட்டது. ஆம்! இதுபோன்ற நிலைமையில் அல்லாஹ்வின் நடைமுறை அவ்வாறே அமைந்திருந்தது. இதையே அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.