பக்கம் - 486 -
(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். (அல்குர்ஆன் 3:179)

அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் முழுமையாக ஏற்று நடந்த நம்பிக்கையாளர்கள் அனைவரும் இப்போல் கலந்து கொள்ள புறப்பட்டனர். இதில் கலந்து கொள்ளாதவர்களை உள்ளத்தில் நயவஞ்சகம் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டது. ஒரு நபர் போருக்குச் செல்லாது பின்தங்கி விட்டார் என நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டால் “அவரைப் பற்றி எதுவும் பேசாதீர்கள் அவரிடம் ஏதேனும் நன்மை இருக்குமாயின் அல்லாஹ் நம்முடன் அவரை இணைத்து வைப்பான். அவ்வாறு இல்லாவிட்டால் நம்மை அவரை விட்டு காப்பாற்றி நிம்மதியைத் தருவான்” என்று ஆறுதல் கூறுவார்கள். உண்மையில் தகுந்த காரணமுள்ளவர்கள் அல்லது நயவஞ்சகர்கள் இவர்களைத் தவிர அனைவரும் போரில் கலந்து கொண்டனர். சில நயவஞ்சகர்கள் பொய்க் காரணங்களைக் கூறியும், சில நயவஞ்சகர்கள் காரணம் ஏதும் கூறாமலேயே போரைப் புறக்கணித்தனர். ஆம்! உண்மையான நம்பிக்கையாளல் மூவர் தகுந்த காரணமின்றியே போரில் கலந்து கொள்ளவில்லை. அதனால் அவர்களை அல்லாஹ் சோதித்தான். பிறகு அவர்கள் மனம் வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டதால் அவர்களை மன்னித்து விட்டான்.

மதீனாவிற்கு வருகை தந்த நபி (ஸல்) பள்ளியில் இரண்டு ரகஅத் தொழுதுவிட்டு மக்களைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். எண்பதுக்கும் அதிகமான நயவஞ்சகர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பல காரணங்களைக் கூறி, தாங்கள் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்தனர். தாங்கள் உண்மையே உரைப்பதாகக் கூறி தங்களது சொல்லுக்கு வலிமை சேர்ப்பதற்காக பொய் சத்தியமும் செய்தனர். நபி (ஸல்) அந்தரங்கக் காரணங்களைத் தோண்டித் துருவாமல் வெளிப்படையான அவர்களது காரணங்களை ஏற்று, வாக்குறுதி வாங்கிக் கொண்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி, அவர்களது அந்தரங்க விஷயத்தை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டார்கள்.

உண்மை விசுவாசிகளில் பின்தங்கிய கஅப் இப்னு மாலிக், முராரா இப்னு ரபீ, ஹிலால் இப்னு உமையா (ரழி) ஆகிய மூவரும் பொய்க் காரணங்களைக் கூறாமல் தங்களது உண்மை நிலைமையைத் தெரிவித்து விட்டனர். நபி (ஸல்) இம்மூவரின் விஷயத்தில் “அல்லாஹ்வின் தீர்ப்பு வரும்வரை யாரும் இவர்களிடம் பேச வேண்டாம்” என தோழர்களுக்குக் கட்டளையிட்டு விட்டார்கள். நபியவர்களும் தோழர்களும் அவர்களிடம் பேசாமல் புறக்கணித்து ஒதுக்கி வைத்த காரணத்தால் அம்மூவருக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதே நிலையில் நாற்பது நாட்கள் கழிந்த பின்பு மூவரும் அவரவர் மனைவியை விட்டு விலகியிருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு ஐம்பது நாட்கள் கழிந்தன. இந்நாட்களில் அவர்களின் மனநிலையை அல்லாஹ்வே அறிவான். பிறகு அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான்.

(அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாது) விட்டு வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்.) பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கமாகி அவர்கள் உயிர் வாழ்வதும் மிக்க கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் நிச்சயமாக அறிந்து கொண்டனர். ஆதலால், அவர்கள் (பாவத்தில் இருந்து) விலகிக் கொள்வதற்காக அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புந்)தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவ னாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:118)