பக்கம் - 487 -
இவ்வசனம் இறக்கப்பட்டதும் மூவர் மட்டுமின்றி முஸ்லிம்களும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தனர். அல்லாஹ் தங்களை மன்னித்த ஆனந்தத்தால் ஏராளமான தான தர்மங்களை வாரி வழங்கினர். இந்நாளை தங்களது வாழ்வின் பாக்கியமான நாளாகக் கருதினர். போரில் தக்க காரணங்களால் கலந்து கொள்ள இயலாதவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதாவது:

பலவீனர்களும், நோயாளிகளும், போருக்குச் செலவு செய்யும் பொருளை அடையாதவர்களும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கலப்பற்ற நம்பிக்கையாளர்களாக இருந்தால் (அதுவே போதுமானது. அவர்கள் போருக்குச் செல்லாவிட்டாலும் அதனைப் பற்றி அவர்கள் மீது எந்த குற்றமுமில்லை.) இத்தகைய நல்லவர்கள் மீது (குற்றம் கூற) எந்த வழியும் இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:91)

மதீனாவுக்கு அருகில் வந்த போது “மதீனாவில் சிலர் இருக்கின்றனர். நீங்கள் பயணித்த இடங்களிலெல்லாம் அவர்களும் உங்களுடன் இருந்தனர் தகுந்த காரணம் ஒன்றே அவர்களைப் போரில் கலக்க விடாமல் செய்து விட்டது.” என்று நபி (ஸல்) மேற்கூறப்பட்டவர்களை குறித்து கூறினார்கள். “அவர்கள் மதீனாவில் இருந்து கொண்டேவா!” (நம்முடன் வந்த நன்மையைப் பெறுகிறார்கள்!) என ஆச்சரியத்துடன் தோழர்கள் வினவினர். “ஆம்! மதீனாவில் இருந்து கொண்டே! (நன்மையைப் பெறுகிறார்கள்)” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

போரின் தாக்கங்கள்

இப்போனால் முஸ்லிம்களின் கை அரபிய தீபகற்பத்தில் ஓங்கியது. அரபிய தீபகற்பத்தில் இஸ்லாமைத் தவிர இனி வேறெந்த சக்தியும் வாழ முடியாது என்பதை அனைவரும் நன்றாக அறிந்தனர். எஞ்சியிருந்த சில மடையர்கள் மற்றும் முஸ்லிம்களின் சிரமங்களை எதிர்பார்க்கும் நயவஞ்சகர்கள் ஆகியோரின் உள்ளத்தில் மிச்ச மீதமிருந்த சில கெட்ட ஆசைகளும் அடியோடு அழிந்தன. இவர்கள் ரோமர்களின் உதவியோடு முஸ்லிம்களை வீழ்த்திவிடலாம் என்று இறுமாந்தது நாசமாகி விடவே, முற்றிலும் முஸ்லிம்களிடம் பணிந்து வாழத் தலைப்பட்டனர்.