பக்கம் - 490 -

நபி (ஸல்) கலந்து கொண்ட போர்கள், நபி (ஸல்) அனுப்பி வைத்த படைப் பிரிவுகள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் நிலைமைகள், பின்விளைவுகள், மாற்றங்கள் பற்றி நாம் ஆய்வு மேற்கொண்டாலும் அல்லது வேறு யார் ஆய்வு செய்தாலும் கீழ்க்கண்ட முடிவுக்கே வர வேண்டும்.

நபி (ஸல்) இறைத்தூதர்களில் தலைசிறந்து விளங்கியது போன்றே அனுபவம் வாய்ந்த ஒரு ராஜதந்திரியாகவும், நிபுணத்துவம் நிறைந்த தலைசிறந்த தளபதியாகவும் விளங்கினார்கள். போரில் பல அனுபவம் பெற்ற தளபதிகளையும் தனது நுண்ணறிவால் மிஞ்சியிருந்தார்கள். தான் கலந்து கொண்ட எல்லா போர்க் களங்களிலும் அவர்களின் போர் திறனிலோ, ராணுவ முகாம்களைச் சரியான உறுதிமிக்க முக்கிய இடங்களில் அமைத்து போர் புரிவதிலோ ஒருக்காலும் தவறு நிகழ்ந்ததில்லை. இவை அனைத்திலும் எக்காலத்திலும் எந்தப் போர் தளபதிகளிடமும் இருந்திராத அரிய நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

உஹுத், ஹுனைன் ஆகிய போர்களில் படையினரின் தவறான முடிவுகளாலும், நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்ததாலும்தான் பின்னடைவு ஏற்பட்டது. இவ்விரண்டு போர்களில் முஸ்லிம்கள் தோற்று பின்னடைந்த போதிலும், நபி (ஸல்) புறமுதுகுக் காட்டாமல் எதிரிகளை முன்னோக்கிச் சென்று தங்களது துணிவையும் வீரத்தையும் நிலைநாட்டினார்கள். இதற்கு உஹுதுப் போர் ஓர் எடுத்துக்காட்டாகும். போரில் ஏற்பட்ட தோல்வியை வெற்றியாக மாற்றினார்கள். இதற்கு ஹுனைன் போரை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதுபோன்ற உக்கிரமான போர்களில் படையினர் புறமுதுகிட்டுத் தோற்று திரும்பி ஓடும்போது தளபதிகள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டு தப்பிப்பதிலேயே குறியாய் இருப்பார்கள். ஆனால், நபி (ஸல்) அவ்வாறு செய்யாமல், எதிரிகளை நோக்கியே முன்னேறினார்கள். இதுவரை நாம் கூறியது நபியவர்களின் போர் நிபுணத்துவம் பற்றிய கண்ணோட்டமாகும்.

மேலும், இப்போர்களினால் அரபுலகம் முழுவதும் பாதுகாப்புப் பெற்றது அங்கு நிம்மதி நிலவியது குழப்பத் தீ அணைந்தது இஸ்லாமிற்கும் சிலை வழிபாட்டிற்குமிடையே நடந்த போர்களில் எதிரிகளின் வலிமைக் குன்றியது அவர்கள் சமாதானத்திற்கு அடிபணிந்தனர் இஸ்லாமிய அழைப்புப் பணி பரவுவதற்குண்டான தடைகளும் அகன்றன. இவையாவும் நபி (ஸல்) அவர்கள் நடத்திய அறப்போர்களினால் ஏற்பட்டவை என்பது ஆய்வில் நமக்குத் தெரிய வரும் உண்மை. மேலும், இப்போர்களில் தன்னுடன் இருப்பவர்களில் உண்மையான தோழர் யார்? உள்ளத்தில் நயவஞ்சகத்தை மறைத்து மோசடி செய்யத் துடிக்கும் முனாஃபிக்குகள் யார்? என்பதை நபி (ஸல்) அவர்களால் பிரித்தறிய முடிந்தது.

இதுமட்டுமின்றி போரைத் தலைமையேற்று நடத்தும் மிகச் சிறந்த தளபதிகளையும் நபி (ஸல்) உருவாக்கினார்கள். இந்தத் தளபதிகள் இராக், ஷாம் போன்ற பகுதிகளில் பாரசீகர்களுடனும், ரோமர்களுடனும் போர் புரிந்தனர். நீண்ட காலம் வல்லரசுகளாக விளங்கிய ரோமானியர்களையும் பாரசீகர்களையும் விட மிகத் திறமையாக படையை வழி நடத்தி, தோட்டந்துரவுகளிலும் கோட்டை கொத்தளங்களிலும், மிக ஏகபோக அடக்குமுறையுடன் அராஜக வாழ்க்கை நடத்திய எதிரிகளை அவர்களது வீடு, வாசல், நாடுகளை விட்டு வெளியேற்றி வெற்றி கண்டனர்.