பக்கம் - 494 -
குழுக்கள்

வரலாற்று ஆசிரியர்கள் எழுபதுக்கும் மேற்பட்ட குழுக்கள் இக்கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தன என குறிப்பிட்டுள்ளனர். எனினும், அவை அனைத்தையும் முழுவதுமாக இங்குக் குறிப்பிடுவது முடியாத காரியம். அதனை விரிவாகக் கூறுவதில் பெரிய பலன் ஏதுமில்லை என்பதால் அவற்றில் முக்கியமான குழுக்களின் விவரங்களைச் சுருக்கமாகக் காண்போம். பெரும்பாலான சமூகத்தார் மக்கா வெற்றிக்குப் பின்புதான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தனர். என்றாலும், மக்கா வெற்றிக்கு முன்பும் குழுக்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1) அப்துல் கைஸ் குழு

இக்குழுவினர் இரு பிரிவினராக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துள்ளனர். ஒரு பிரிவினர் ஹிஜ்ரி 5 அல்லது அதற்கு முன்பு மதீனா வந்தனர். இவர்களில் முன்கித் இப்னு ஹய்யான் என்பவர் வியாபார நிமித்தமாக மதீனா வந்து போய் கொண்டிருந்தார். நபி (ஸல்) மக்காவிலிருந்த மதீனா ஹிஜ்ரா செய்த பின்பு வியாபார வேலையாக மதீனா வந்த முன்கித் நபி (ஸல்) வருகையை அறிந்து அவர்களிடம் சென்று இஸ்லாமைத் தழுவினார். பின்னர் தமது சமூகத்தாருக்காக நபி (ஸல்) தந்த கடிதத்தை எடுத்துச் சென்று தன் சமூகத்தாரிடம் கொடுக்கவே, அவர்களும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். பதிமூன்று அல்லது பதிநான்கு பேர் கொண்ட ஒரு குழுவுடன் மகத்துவமிக்க மாதங்களின் ஒரு மாதத்தில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்பொழுது ஈமான் மற்றும் குடிபானங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு சென்றனர். இக்கூட்டத்தில் வயது முதிர்ந்த ‘அஷஜ் அஸ்ரீ’ என்பவரைப் பார்த்து “உங்களிடம் இரண்டு பண்புகள் இருக்கின்றன. அவற்றை அல்லாஹ் விரும்புகின்றான். 1) சகிப்புத் தன்மை, 2) நிதானம்” என நபி (ஸல்) கூறினார்கள்.

இரண்டாவது குழு இக்காலக் கட்டத்தில் வந்தது. இதில் நாற்பது பேர்கள் இருந்தனர். ஜாரூத் இப்னு அலா அப்தீ என்ற கிறிஸ்தவரும் இருந்தார். இவரும் இஸ்லாமை ஏற்று சிறந்த முஸ்லிமாகத் திகழ்ந்தார். (ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல் பாரி)

2) தவ்ஸ் குழுவினர்

இவர்கள் ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மதீனா வந்த நேரத்தில் நபி (ஸல்) கைபர் போருக்குச் சென்றிருந்தார்கள். நபி (ஸல்) மக்காவில் இருந்த போதே தவ்ஸ் சமூகத்தைச் சார்ந்த ‘துஃபைல் இப்னு அம்ர்’ என்பவர் இஸ்லாமை ஏற்ற சம்பவத்தை முன்னரே கூறியிருக்கிறோம். இவர் மக்காவிலிருந்து சென்ற போது தனது சமூகத்தாரை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைத்தார். அவர்கள் ஏற்கத் தயங்கினர். இதனால் கோபத்துடன் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்த இவர் “அல்லாஹ்வின் தூதரே! தவ்ஸ் சமூகத்தாரைச் சபித்து விடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) “அல்லாஹ்வே! தவ்ஸ் சமூகத்தாருக்கு நேர்வழி காட்டு” என துஆச் செய்தார்கள். தனது சமூகத்தாரிடம் திரும்பி வந்து மீண்டும் இஸ்லாமைப் பற்றி எடுத்துக் கூறவே அவர்களில் பெரும்பாலோர் இஸ்லாமைத் தழுவினர். அதன் பின் அவர் எழுபது, எண்பது குடும்பங்களை அழைத்துக் கொண்டு மதீனா வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து கைபர் சென்றிருந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க இவரும் கைபர் சென்று விட்டார்.