பக்கம் - 496 -
நபி (ஸல்) அவர்களுக்கு இவர் யார் என்பது தெரியாது. “அல்லாஹ்வின் தூதரே! கஅப் இப்னு ஜுபைர் உங்களிடம் பாதுகாப்புத் தேடி வந்துள்ளார். அவர் தனது தவறுகளுக்காக வருந்தி மன்னிப்புக்கோரி இஸ்லாமையும் ஏற்றுக் கொண்டு விட்டார். நான் அவரை அழைத்து வந்தால் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) “ஆம்! தாராளமாக ஏற்றுக் கொள்வேன்” என்றார்கள் “அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அந்த கஅப்” என்று கூறினார். கூறியதுதான் தாமதம். அவர்மீது வேகமாகப் பாய்ந்து அவரைப் பிடித்துக் கொண்டு “அல்லாஹ்வின் தூதரே! ஆணையிடுங்கள். இவன் தலையைக் கொய்து விடுகிறேன்” என்று அன்சாரிகளில் ஒருவர் கூறினார். ஆனால் நபி (ஸல்), “நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டாம். அவரை விட்டு விடுங்கள். அவர் திருந்தி, தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு வந்துள்ளார்” எனக் கூறினார்கள். அதனால் மனங்குளிர்ந்த கஅப் நபி (ஸல்) அவர்களுக்கு முன் சில கவிதைகளைப் படித்தார்.

சுஆது பிரிந்து விட்டாள்.
இன்னும் என்னுள்ளம் நிலை குலைந்து
சுய நினைவிழந்து கைதியாய் அவள் பின் அலைகிறது.
இதைக் காப்பாற்ற முடியவில்லையே!

என்று ஆரம்பித்து,

அல்லாஹ்வின் தூதர் என்னை எச்சரித்தார்கள் என
எனக்குத் தகவல் வந்தது. அல்லாஹ்வின் தூதரிடம்
மன்னிப்பை நான் விரும்புகிறேன்.
சற்று நில்லுங்கள்! நல்லுரைகளும் விளக்கங்களும்
நிறைந்த குர்ஆன் எனும் வெகுமதியை வழங்கியவன்
உங்களுக்கு நல்வழி காட்டியுள்ளான்.
கோள் மூட்டுவோர் பேச்சால் என்னை நீங்கள்
தண்டித்து விடாதீர்கள். என்னைப் பற்றி பலவாறு
பேச்சுகள் இருப்பினும் நான் எக்குற்றமும் புரியவில்லை.
நான் இருக்கும் இவ்விடத்தில் யானை இருந்து
நான் பார்ப்பதையும் கேட்பதையும் அது கேட்டால் நடுநடுங்கிவிடும்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் அதற்கு அனுமதி அருளினாலேயன்றி...
பழிவாங்கும் ஆற்றலுள்ளவன் கையில்
என் கையை வைத்து விட்டேன்.
இனி நான் அவரிடம் சண்டையிடேன்.
அவர் கூற்றை முழுமையாக ஏற்பேன்

‘உன்னைப் பற்றி பல தகவல்கள் வந்துள்ளன,
நீ விசாரணைக்குரியவன்’ எனக் கூறக் கேட்டேன்.
பல சிங்கக் காடுகளை அடுத்துள்ள ‘அஸ்ஸர்“
என்ற பள்ளத்தாக்கின் அடர்ந்த காடுகளில்
குகை கொண்ட சிங்கத்தை அஞ்சுவதை விட
நான் நபியுடன் பேசும் போது அவரை அஞ்சுகிறேன்.
நிச்சயம் நபி ஒளிமயமானவரே!
அவரால் நாமும் ஒளி பெறலாம்.
அல்லாஹ்வின் வாட்களிலே
உருவப்பட்ட இந்திய வாட்களைப் போல் நபி மிளிர்கிறார்கள்.