பக்கம் - 498 -
8) ஸகீஃப் குழுவினர்

இவர்கள் ஹிஜ்ரி 9, ரமழான் மாதம் வந்தனர். ஹிஜ்ரி 8ல், துல்கஅதா மாதம் நபி (ஸல்) தாயிஃப் போர் முடிந்து மதீனா திரும்பும் வழியில் இவர்களின் தலைவர் உர்வா இப்னு மஸ்வூத் ஸகஃபி நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாமைத் தழுவினார். தான் தலைவர் என்பதாலும், தனது பேச்சை மக்கள் கேட்டு நடக்கின்றனர் என்பதாலும், தன்னை மக்கள் தங்கள் வீட்டு கன்னிப் பெண்களை விட அதிகம் நேசிக்கிறார்கள் என்பதாலும், தான் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவர்களை அழைத்தால் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்றெண்ணி தனது சமூகத்தாரை இஸ்லாமிற்கு அழைத்தார். ஆனால், அம்மக்களோ அவன் எண்ணத்திற்கு நேர் மாற்றமாக நடந்தனர். நாலாத் திசைகளிலிருந்தும் அவரை அம்பெறிந்துக் கொன்றே விட்டனர்.

சில மாதங்கள் கழிந்து அவர்கள் ஒன்றுகூடி “நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான அரபிகள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டு விட்டனர். அவர்களை எதிர்க்கும் ஆற்றல் நம்மிடமில்லை. நாம் என்ன செய்யலாம்?” என்று ஆலோசனை செய்தனர். இறுதியில், அப்து யாலீல் இப்னு அம்ரு என்பவரைத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்ப முடிவு செய்து, அது தொடர்பாக அவரிடம் பேசினர்.

இஸ்லாமைக் கற்று, அதனை ஏற்றுத், திரும்ப மக்களிடம் வந்து கூறும் போது உர்வாவுக்கு ஏற்பட்ட கதி நமக்கும் ஏற்படுமோ என அஞ்சி அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார். என்னுடன் உங்களது ஆட்கள் சிலரையும் அனுப்பி வைத்தால் சென்று வருகிறேன் என்ற ஒரு மாற்று ஆலோசனையை முன் வைத்தார். அவர்கள் அதனை ஏற்று மாலிக் குடும்பத்தைச் சேர்ந்த மூவரையும், தங்களது நட்புக் கோத்திரங்களிலிருந்து இருவரையும் அவருடன் அனுப்ப ஒப்புக் கொண்டனர். ஆக மொத்தம், ஆறு நபர்கள் மதீனா நோக்கி பயணமானார்கள்.

அவர்களில் உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் ஸஃகபீ என்பவரும் இருந்தார். அவர்தான் அவர்களில் மிகச் சிறிய வயதுடையவர். அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளியின் ஓரத்தில் அவர்கள் தங்குவதற்காகக் கூடாரம் ஒன்றை நபி (ஸல்) அமைத்துத் தந்தார்கள். குர்ஆன் ஓதுவதை கேட்கவும், மக்கள் தொழுவதைப் பார்த்து கற்றுக் கொள்ளவும் அவர்களை பள்ளியிலேயே தங்க வைத்தார்கள். இவர்கள் நபி (ஸல்) அவர்களிடமும் அவ்வப்போது வந்து போய் கொண்டிருந்தார்கள். இக்குழுத் தலைவர், நபியவர்களிடம் “உங்களுக்கும் எங்களுக்குமிடையே ஓர் ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தர வேண்டும். அதில், விபச்சாரம், மது, வட்டி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும். எங்களின் பெரிய சிலையான லாத்தை உடைக்கக் கூடாது. தொழுகையை எங்களுக்கு விதிவிலக்கு ஆக்க வேண்டும். எங்களின் மற்ற சிலைகளை நாங்கள் உடைக்க மாட்டோம். இந்த அம்சங்கள் எல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டும்” என்று கூறினார்.

இவர்களின் எந்த ஒப்பந்தத்தையும் நபி (ஸல்) ஏற்க மறுத்து விட்டார்கள். இவர்கள் அனைவரும் சபையை விட்டு அகன்று தனியாக ஆலோசனை செய்தனர். பணிந்து விடுவதைத் தவிர வேறு வழி இல்லாததால், நபியவர்களிடம் வந்து லாத் சிலையை நாங்கள் உடைக்க மாட்டோம். நீங்கள்தான் உடைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டனர். நபி (ஸல்) அவர்களும் அதனை ஒத்துக் கொண்டார்கள். இந்த அடிப்படையில் அவர்களுக்கு நபி (ஸல்) ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள்.