பக்கம் - 501 -
10) ஹம்தான் குழுவினர்

நபி (ஸல்) தபூக் போரிலிருந்து திரும்பிய பின்பு இக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இவர்கள் கேட்டதை நபி (ஸல்) அவர்கள் எழுதிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு மாலிக் இப்னு நமத் (ரழி) என்பவரைத் தலைவராக்கினார்கள். மேலும், ஹம்தான் கிளையினரில் யாரெல்லாம் முஸ்லிமாவார்களோ அவர்களுக்கும் இவரையே பொறுப்பாளியாக்கினார்கள். ஹம்தான் கிளையில் முஸ்லிமாகாதவர்களுக்கு இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதற்காக நபி (ஸல்) காலித் பின் வலீதை (ரழி) அனுப்பி வைத்தார்கள். அவருடைய ஆறு மாத உழைப்பில் ஒருவர் கூட முஸ்லிமாகவில்லை.

இதையறிந்த நபி (ஸல்) அலீ இப்னு அபூதாலிபை அப்பணிக்காக அனுப்பி, காலிதை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். மேலும், ஹம்தான் கிளையாருக்குப் படித்து காண்பிப்பதற்காக கடிதம் ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். அலீ (ரழி) அக்கடிதத்தை அவர்கள் முன்னிலையில் படித்துக்காட்டியே இஸ்லாமிய அழைப்புப் பணி செய்தார்கள். அல்லாஹ்வின் அருளால் அம்மக்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள். இந்த நற்செய்தியை நபி (ஸல்) அவர்களுக்கு அலீ (ரழி) கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்கள். நபி (ஸல்) இச்செய்தியை செவியேற்று ஸஜ்தா செய்து, பிறகு தiலையை உயர்த்தி, (ஸலாமுன் அலாஹம்தான்) “ஹம்தான் கிளையினருக்கு ஈடேற்றம் உண்டாகுக!” என இருமுறைக் வேண்டினார்கள்.

11) ஃபஜாரா குழுவினர்

நபி (ஸல்) தபூக்கிலிருந்து திரும்பிய பின் ஹிஜ்ரி 9ல் இவர்கள் வந்தனர். இக்குழுவில் பத்து பேர்கள் இடம் பெற்றிருந்தனர். அனைவரும் இஸ்லாமை ஏற்றே நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இவர்கள் “தங்கள் ஊர் வறுமையால் வாடுகிறது பஞ்சத்தால் நாங்கள் அவதிப்படுகிறோம்” என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அவர்கள் மீது மனமிரங்கி மிம்பரில் ஏறி இரு கரங்களையும் ஏந்தி மழைக்காக துஆச் செய்தார்கள்: “அல்லாஹ்வே! நீ படைத்த ஊர்களுக்கும், கால்நடைகளுக்கும் நீர் புகட்டுவாயாக! உன் கருணையை அவர்களுக்கு அருள்வாயாக! வாடிப் போயிருக்கும் நீ படைத்த ஊரை உயிர்பிப்பாயாக! அல்லாஹ்வே! எங்களைக் காப்பாற்றும் வளமிக்க, செழுமை மிக்க, விசாலமான, அடர்த்தியான, தாமதமின்றி, உடனடியான, இடையூறின்றி பலன்தரக்கூடிய மழையை எங்களுக்கு இறக்கியருள்வாயாக! அல்லாஹ்வே! அது கருணை பொழியும் மழையாக இருக்க வேண்டும் வேதனை தரக்கூடியதாக, தகர்க்கக் கூடியதாக, மூழ்கடிக்கக் கூடியதாக, அழிக்கக் கூடியதாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வே! மழையை இறக்குவாயாக! எதிரிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!” (ஜாதுல் மஆது)

12) நஜ்ரான் குழுவினர்

ம்நஜ்ரான்’ யமன் தேசத்துக்கருகே உள்ள நகரம். இது மக்காவிலிருந்து ஏழு நாட்கள் தொலைவில் உள்ளது. (ஃபத்ஹுல் பாரி)

இந்நகரத்திற்குக் கீழ் எழுபத்து மூன்று கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்.

நஜ்ரானிலிருந்து ஹிஜ்ரி 9ல், அறுபது பேர்கள் கொண்ட குழு மதீனா வந்தது. இவர்களில் இருபத்து நான்கு பேர்கள் (உயர்மட்டத் தலைவர்கள்) முக்கியமானவர்கள். அவர்களில் மூவர் நஜ்ரான் மக்களுக்கு பிரதிநிதிகளாக இருந்தனர்.

1) அப்துல் மஸீஹ் - இவர் அம்மக்களின் ஆட்சியாளராகவும், தீர்ப்பளிப்பவராகவும் இருப்பவர். இவரை மக்கள் ‘ஆகிப்’ என அழைத்தனர்.

2) அய்ஹம் அல்லது ஷுரஹ்பீல் - இவர் அரசியல் மற்றும் கலாச்சார காரியங்களை நிறைவேற்றி வந்தார். இவரை மக்கள் ‘ஸைம்த்’ என அழைத்தனர்.

3) அபூஹாரிஸா இப்னு அல்கமா - இவர் மதரீதியான, ஆன்மீக ரீதியான காரியங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இவரை மக்கள் ‘அஸ்கஃப்’ என அழைத்தனர்.