பக்கம் - 503 -
சில காலத்திற்குப் பின் அந்தச் சமூகத்தில் இஸ்லாம் பரவ ஆரம்பித்தது. ஸம்து, ஆகிப் (ரழி) இருவரும் நஜ்ரான் சென்ற பிறகு இஸ்லாமை ஏற்றனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். நபி (ஸல்) ஜகாத் மற்றும் ஜிஸ்யாவை வசூலிக்க நஜ்ரானுக்கு அலீயை அனுப்பி இருக்கின்றார்கள். ஜகாத் முஸ்லிம்களிடம் மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் நஜ்ரானில் இஸ்லாம் பரவியுள்ளது என்பதை அறிய முடிகிறது. (ஃபத்ஹுல் பாரி, ஜாதுல் மஆது)

13) பனூ ஹனீஃபா குழுவினர்

இக்கிளையைச் சார்ந்த பதினேழு நபர்கள் ஹிஜ்ரி 9ம் ஆண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். இவர்களில் பொய்யன் முஸைலமாவும் ஒருவன். இவனது முழுப்பெயர் முஸைலமா இப்னு ஸுமாமா இப்னு கபீர் இப்னு ஹபீப் இப்னு ஹாரிஸ் என்பதாகும். (ஃபத்ஹுல் பாரி)

இக்குழுவினர் அன்சாரி ஒருவர் வீட்டில் தங்கி, அங்கிருந்து நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தனர் அனைவரும் இஸ்லாமைத் தழுவினர். ஆனால், முஸைலமா நபியை ஏற்று நம்பிக்கை கொண்டானா? இல்லையா? என்பதைப் பற்றி மட்டும் பலவிதமான கருத்துகள் உள்ளன. இவற்றை ஆராய்ந்தால் கீழ்காணும் முடிவுக்கு வரலாம்:

இவனிடம் பதவி மோகமும் அகம்பாவமும் இருந்ததால், குழுவுடன் வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்திக்காமல் தனியாக சந்தித்தான். இவனைத் தங்களது நேசனாக மாற்ற நபி (ஸல்) சொல்லாலும் செயலாலும் அழகிய முறையில் நடந்து கொண்டார்கள். அது எவ்விதப் பலனையும் தராததால் அவனிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பு நபி (ஸல்) ஒரு கனவு கண்டிருந்தார்கள். அதில் பூமியில் உள்ள பொக்கிஷங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டு, அதிலிருந்து தங்கக் காப்புகள் இரண்டு தங்களது கைக்குள் வருவதாக பார்த்தார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது. மறைவில் இருந்து “அவ்விரண்டையும் ஊதி விடுங்கள்” என அறிவிக்கப்படவே நபி (ஸல்) ஊதிவிட்டார்கள். அது காணாமல் போய்விட்டது. தனக்குப் பின் இரண்டு பொய்யர்கள் வருவார்கள் என இக்கனவுக்கு விளக்கம் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் முஸைலமா கண்ணியக்குறைவாக நடந்து கொண்டு, “முஹம்மது தனக்குப் பின் அதிகாரத்தை எனக்கு வழங்கினால் அவரை ஏற்றுக் கொள்வேன்” என்று கூறி வந்தான். நபி (ஸல்) கரத்தில் ஒரு பேரீத்த மர மட்டையுடன், “அவன் இருந்த இடத்திற்குச் சென்றார்கள். ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் என்பவரும் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தார். நபி (ஸல்) முஸைலமாவிடம் சிறிது நேரம் உரையாடினார்கள். அப்போது அவன் “நீங்கள் விரும்பினால் இப்போது அதிகாரங்களை தங்களுக்கு விட்டுத் தருகிறோம். உங்களுக்குப் பிறகு எல்லா அதிகாரங்களையும் எங்களுக்கு நீங்கள் வழங்கிட வேண்டும்” என்றான். “சின்ன மட்டைத் துண்டைக் கூட நீ கேட்டால் நான் தரமாட்டேன். உன் விஷயத்தில் அல்லாஹ்வின் கட்டளையை நீ மீறிவிட முடியாது. இதே நிலையில் நீ திரும்பினால் அல்லாஹ் உன்னைக் கொன்று விடுவான். எனக்குக் கனவில் காட்டப்பட்டது நிச்சயமாக நீதான் என்று சத்தியமாக எண்ணுகிறேன். இதோ! ஸாபித் என் சார்பாக உனக்கு பதில் தருவார்” எனக் கூறிவிட்டு நபி (ஸல்) திரும்பி விட்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஃபத்ஹுல் பாரி)