பக்கம் - 504 -
இறுதியாக, நபி (ஸல்) எதிர்பார்த்ததே நடந்தது. முஸைலமா யமாமா திரும்பிய பின் “தன்னையும் நபி (ஸல்) தூதுத்துவத்தில் கூட்டாக்கிக் கொண்டார்கள்” என்று கூறி தனது வாதங்களை அடுக்கு மொழிகளினாலும் வசனங்களினாலும் மக்கள் மத்தியில் பரப்பினான். தம் கூட்டத்தாருக்கு மது அருந்துவது, விபச்சாரம் புரிவது இரண்டையும் ஆகுமானதாக்கினான். இவ்வாறான நிலையில் முஹம்மதை நபியாகவும் ஏற்றிருந்தான். அவனது கூட்டத்தினர் அவனையே பின்பற்றினர். அவன் மக்களிடம் மிகப் பிரபலமானான். மக்கள் அவனை “ரஹ்மானுல் யமாமா” (யமாமாவின் இறைவன்) என்று பெயர் சூட்டி அழைத்தனர்.

நானும் உங்களுடன் அதிகாரத்தில் கூட்டாக இருக்கிறேன். அதிகாரம் எங்களுக்குப் பாதி, குறைஷிகளுக்குப் பாதி என்று நபி (ஸல்) அவர்களுக்குக் கடிதம் எழுதினான். அதற்கு “நிச்சயமாக இந்தப் பூமி அல்லாஹ்வுக்குச் சொந்தமானது அவனது அடியார்களில் நாடியவர்களை அதற்கு வாரிசாக்குகிறான். நல்ல முடிவு இறையச்சமுள்ளவர்களுக்குத்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் மறுப்புக் கடிதம் எழுதினார்கள். (ஜாதுல் மஆது)

இந்நிகழ்ச்சிக்குப்பின் நடந்ததை இப்னு மஸ்வூத் (ரழி) விவரிக்கிறார்கள்: இப்னு நவ்வாஹா, இப்னு உஸால் என்ற முஸைலமாவின் இரண்டு தூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். “நான் அல்லாஹ்வின் தூதர் என்று உள்ளத்தால் உறுதி கொண்டு நாவால் மொழிகிறீர்களா?” என நபி (ஸல்) கேட்க, நாங்கள் “முஸைலமாவையே அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்கிறோம்” என அவ்விருவரும் கூறினர். “நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புகிறேன். தூதுவர்களை கொல்லும் வழக்கம் எனக்கு இருந்தால் உங்களிருவரையும் கொன்றிருப்பேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, மிஷ்காத்)

இவன் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு தன்னை நபியென்று வாதிட்டான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்பு அபூபக்ர் (ரழி) அவர்கள் இவனையும் இவனது தோழர்களையும் ஒழிப்பதற்காக யமாமா நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையில் ஹம்ஜா (ரழி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி (ரழி) இடம் பெற்றிருந்தார். அவர்தான் பொய்யன் முஸைலமாவைக் கொன்றொழித்தார்.

நபியென்று தன்னை வாதிட்ட மற்றொருவன் ‘அஸ்வத் அனஸி“. இவனும் யமன் வாசியே! இவனைக் கொல்வதற்காக நபி (ஸல்) ‘ஃபைரோஸ்’ (ரழி) என்ற தனது தோழர் ஒருவரை அனுப்பினார்கள். அவனது தலையை அவர் கொய்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்நிகழ்ச்சி நபி (ஸல்) மரணத்திற்கு ஒருநாள் முன்பு நடைபெற்றது. அல்லாஹ் இச்செய்தியை வஹி மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்துத் தந்துவிட்டான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் அபூபக்ர் (ரழி) கலீஃபாவான போது ஃபைரோஸ் (ரழி) மதீனா வந்தடைந்தார். (ஃபத்ஹுல் பாரி)

14) பனூ ஆமிர் இப்னு சஃசஆ குழுவினர்

இக்குழுவினல் அல்லாஹ்வின் எதிரி ஆமிர் இப்னு துஃபைல் என்பவனும் லபீதின் தாய்வழிச் சகோதரன் அர்பத் இப்னு கைஸ், காலித் இப்னு ஜஅஃபர், ஜப்பார் இப்னு அஸ்லம் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் இக்கூட்டத்தின் தலைவர்களாகவும், அதே சமயம் விஷமிகளாகவும் இருந்தனர். இதிலுள்ள ஆமிர் என்பவன்தான் நபித்தோழர்களை மோசடி செய்து (பிஃர்) ‘மஊனா’ என்ற கிணற்றருகே கொலை செய்தவன்.

இக்குழுவினர் மதீனா வரும் வழியில் அவர்களில் ஆமிரும் அர்பதும் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டினர். இக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். ஆமிர் பேச்சுக் கொடுத்தான். அர்பத் நபி (ஸல்) அவர்களைக் கொல்வதற்குப் பின்புறமாகச் சென்றான். ஒரு சாண் அளவு அவன் வாளை உருவுவதற்குள் அல்லாஹ் அவனது கையை தடுத்து விட்டான். அவனால் அடுத்து வாளை உருவ முடியவில்லை. அல்லாஹ் தனது நபியவர்களை பாதுகாத்துக் கொண்டான்.