பக்கம் - 505 -
இவ்விருவரின் சதித்திட்டம் தெரிந்த நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் எதிராக துஆச் செய்தார்கள். இவ்விருவரும் செல்லும் வழியில் ஓர் இடியை அல்லாஹ் ஏவினான். அது அர்பதையும் அவனது ஒட்டகத்தையும் எரித்து நாசமாக்கியது. நண்பன் அர்பத் செத்தபின்பு ஆமிர், சலூலியாப் பெண்ணுடன் இரவு தங்கினான். அவனது கழுத்தில் ஒரு கொப்புளத்தை அல்லாஹ் ஏற்படுத்தினான் அதுவே அவனது மரணத்திற்குக் காரணமானது. “ஒட்டகக் கொப்புளமா? சலூலியா வீட்டில் மரணமா?” என ஓலமிட்டவனாக, “வேண்டாம் வேண்டாம். என்னை இங்கிருந்து கிளப்புங்கள். எனது குதிரையைக் கொண்டு வாருங்கள்” என்றான். மதீனாவிலிருந்து தனது ஊருக்கு குதிரையில் போய்க் கொண்டிருக்கும் போதே செத்து வீழ்ந்தான்.

இந்நிகழ்ச்சி பற்றி ஸஹீஹுல் புகாரியில் வருவதாவது: ஆமிர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து மூன்று விஷயங்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். “குடிசை வீடுகளில் உள்ளவர்கள் உங்களுக்கு, மாடி வீடுகளில் உள்ளவர்கள் எனக்கு. அதாவது, ஏழைகளை நீங்கள் ஆதிக்கம் செலுத்தலாம், பணக்காரர்களை நான் ஆதிக்கம் செலுத்துவேன். அல்லது உங்களுக்குப் பின் நானே ஆளுநராக இருப்பேன். அல்லது ஆயிரம் ஆண் குதிரை, ஆயிரம் பெண் குதிரைகளில் கத்ஃபான் கிளையினரை அழைத்து வந்து உன்னிடம் போர் புவேன்.” அவன் இவ்வாறு கூறிவிட்டு திரும்பும் வழியில் ஒரு பெண்ணின் வீட்டில் தங்கியிருந்த போது அம்மை நோயால் தாக்கப்பட்டு “ஒட்டக கொப்பளமா? இன்னவள் வீட்டில் மரணமா?” என்று அலறினான். பிறகு தனது குதிரையை வரவழைத்து அதில் ஏறி வாகனித்துச் செல்லும் போது செத்து மடிந்தான்.

15) துஜீப் குழுவினர்

இக்குழுவினர் ஜகாத் பொருட்களை தங்களிலுள்ள ஏழை எளியோருக்குப் பங்கிட்டு வழங்கிய பின்பு மீதமானதை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களிடம் தங்கி குர்ஆனையும் மார்க்கக் கல்வியையும் கற்றனர். மேலும், பல விஷயங்கள் குறித்து கேட்டனர். நபி (ஸல்) அவற்றை அவர்களுக்கு எழுதிக் கொடுக்கும்படி தோழர்களிடம் சொன்னார்கள். நீண்ட நாட்கள் தங்கியிருக்க முடியாமல் திரும்பிச் செல்ல அனுமதி கேட்டனர். அவர்கள் புறப்படும் போது அவர்களிலுள்ள அடிமை நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை மன்னித்து என் மீது கருணை காட்டி உள்ளத்தால் சீமானாக்க வேண்டும் என்று எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆக் கேட்குமாறு கோருவதற்காகவே நான் இங்கு வந்தேன்” என்றார். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே அவருக்கு துஆச் செய்தார்கள்.

அல்லாஹ் தனது தூதரின் துஆவை அப்படியே ஏற்றுக் கொண்டான். நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் குழப்பங்கள் அதிகமாகி மக்கள் மார்க்கத்தை விட்டு மதம் மாறும் அபாயம் ஏற்பட்ட போது இவரும் இஸ்லாமில் உறுதியாக இருந்து, தமது கூட்டத்தாருக்கு இவர் வழங்கிய அறிவுரையால் அவர்களும் இஸ்லாமில் நிலையாக இருந்தனர். இவர் தனது கூட்டத்தாரிலேயே மிக அதிகமாக போதுமென்ற குணம் கொண்டிருந்தார். இக்குழுவினர் ஹஜ்ஜத்துல் விதாவில் (ஹிஜ்ரி பத்து) நபியவர்களின் இறுதி ஹஜ்ஜில் இரண்டாம் முறையாக நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தனர்.