பக்கம் - 506 -
16) தய் குழுவினர்

இக்குழுவில் ஜைது அல்கைல் என்பவரும் இருந்தார். இக்குழுவினர் வந்த போது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை அழகிய முறையில் எடுத்துக் கூற, அனைவரும் முஸ்லிமானார்கள். “ஒருவரைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்படும். ஆனால், அவர் என்னை நேரடியாகக் காணும் போது பேசப்பட்டதை விட குறைவாகவே அவரைப் பார்த்திருக்கிறேன். எனினும், ஜைதைப் பற்றி என்னிடம் உயர்வாகப் பேசப்பட்டது. என்றாலும் ஜைதை நேரடியாகக் காணும் போது அவரைப் பற்றி கூறப்பட்டது எனக்குக் குறைவாகவே பட்டது. எனவே, “ஜைது அல் கைர் - சிறந்த ஜைது என நான் பெயரிடுகிறேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இவ்வாறு பல குழுக்கள் மதீனா வந்து நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துச் சென்றுள்ளனர். வரலாற்றாசிரியர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த பல குழுக்களை குறிப்பிட்டுள்ளனர். அக்குழுக்களின் பெயர்களை மட்டும் இங்குக் குறிப்பிடுவோம்.

1) யமன் நாட்டு குழுக்கள், 2) அஜ்து, 3) பனூ ஸஅத் ஹுதைம், 4) பனூ ஆமிர், 5) பனூ அஸத், 6) பஹ்ரா, 7) கவ்லான், 8) முஹாப், 9) பனூ ஹாரிஸ் இப்னு கஅப், 10) காமித் 11) பனூல் முன்தஃபிக், 12) சலாமான், 13) பனூ அப்ஸ், 14) முஜைனா, 15) முராத், 16) ஜுபைத், 17) கிந்தா, 18) தூ முர்ரா, 19) கஸ்ஸான், 20) பனூ ஈஷ், 21) நகஃ. இந்த குழுவினர் ஜி 11ல் முஹர்ரம் மாதம் நடுவில் வந்தனர். இக்குழுவில் 200 நபர்கள் இருந்தனர். இதுவே நபி (ஸல்) அவர்களைச் சந்தித்த குழுக்களில் இறுதியானக் குழுவாகும்.

மேற்கூறிய குழுக்களில் பெரும்பாலானவை ஹிஜ்ரி 9,10-ல் வந்தவை. சில குழுக்கள் மட்டும் 11ல் வந்தன. இவ்வாறு பல குழுக்கள் அதிகமதிகம் மதீனா நோக்கி வருகை தந்தது, இஸ்லாமிய அழைப்புப் பணி பெற்ற வெற்றியையும் இஸ்லாம் அரபியத் தீப கற்பத்தில் முழுமையான முறையில் வேரூன்றி விட்டதையும் அரபிகள் மதீனாவை உயர்ந்த பார்வையில் பார்த்தனர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இஸ்லாமுக்கு முன் பணிந்து போவதைத் தவிர வேறு வழி இல்லை என்று அவர்கள் அறிந்து கொண்டனர். சுருக்கமாகச் சொன்னால் முழு அரபியத் தீபகற்பத்திற்கும் மதீனாவே தலைநகராக மாறியது. அதனைப் புறக்கணிக்க முடியாத சூழ்நிலை உண்டானது. இவ்வாறெல்லாம் இருந்தும் புதிதாக இஸ்லாமை ஏற்ற அனைவரின் உள்ளங்களிலும் மார்க்கம் உறுதி பெற்றிருந்தது என நாம் கூற முடியாது. காரணம், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களில் பெரும்பாலோர் முரட்டுக் குணங்கொண்ட கிராமவாசிகளாக இருந்தனர். இவர்கள் இஸ்லாமை ஏற்றது தங்களது தலைவர்கள் முஸ்லிமாகி விட்டார்கள் என்ற காரணத்தினால்தான். இவர்கள் முஸ்லிமாக மாறிய பின்பும் கொள்ளையடிப்பது போன்ற குற்றச் செயல்களிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இஸ்லாமிய அறிவுரைகள் மூலம் சீராக வேண்டிய அளவு அவர்கள் தங்களைச் சீர்செய்து கொள்ளவில்லை.

எனவே, இவர்களில் சிலரைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

நிராகரிப்பிலும் வஞ்சகத்திலும் கிராமத்து அரபிகள் மிகக் கொடியவர்கள். அன்றி அல்லாஹ் தன் தூதர் மீது அருளியிருக்கும் (வேத) வரம்புகளை அறிந்து கொள்ளவும் வசதியற்றவர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

(கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத் திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை) மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அல்லாஹ் செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:97, 98)