பக்கம் - 508 -
இந்த இடையூறுகள் நிறைந்த எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் அழைப்பை எட்டச் செய்வதற்காக நபி (ஸல்) நின்றார்கள். தொடர்ந்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாய்... கோணங்கள் மாறுபட்ட பல போர்களை எதிர்கொள்ள நபி (ஸல்) நின்றார்கள். தங்களை நோக்கி வந்த உலகைக் கடைக் கண்ணாலும் பாராமல் சிரமத்திலும் துன்பத்திலும், நெருக்கடியான நிலையிலும் நிலைகுலையாது நின்றார்கள்... நின்ற நபியின் நிழலிலே... விசுவாசிகள் சுகத்தையும் நிம்மதியையும் சுவாசித்தார்கள்... முடிவுபெறா சிரமங்கள் தொடர்ந்தாலும்... அழகிய பொறுமையுடன் இரவில் நின்று... ஏக இறைவனை வணங்குவதுடன்... அருள்மறை குர்ஆனை ஓதுவதுடன்... அல்லாஹ் ஒருவனையே சார்ந்திருந்து... இறை ஆணையை நிறைவேற்ற நின்றார்கள்... (ழிலாலுல் குர்ஆன்)

இருபது ஆண்டுகளுக்கு மேலாக இறைப் பணியில் கவனம் சிதறாமல் தொடர் போராட்டத்தில் எதிர் நீச்சல் போட்டு, இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு வெற்றி தேடித் தந்தார்கள்... அந்த வெற்றிக்கு அரபுலகம் பணிந்தது! அறியாமை இருள் அகன்றது! பிணிகொண்ட அறிவுகள் சீர்பெற்றன! இதனால் சிலைகளை விட்டு விலகியது மட்டுமல்ல அதனை உடைத்து தவிடு பொடியாக்கினார்கள். அவர்களின் ஏகத்துவ முழக்கம் விண்ணுலகை எட்டியது. இறை வணக்கத்திற்கான பாங்கொலி விண்ணின் செவிகளைப் பிளந்தன. புதிய நம்பிக்கையால் உயிர்பெற்று எழுந்த அழைப்புப் பணி (ஏகத்துவ முழக்கம்) வறண்ட பாலைவனங்களை ஊடுருவிச் சென்றன.

நாலாத் திசைகளிலும் குர்ஆனை கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் பரவிச் சென்று இறைவேதத்தை ஓதிக் காண்பித்து, அவனது சட்டங்களை நிலை நிறுத்தினார்கள். பிரிந்து கிடந்த வம்சங்களும் சமூகங்களும் ஒன்றாயின. மனிதன் மனிதனை வணங்குவதிலிருந்து விடுபட்டு... அல்லாஹ்வை வணங்க முற்பட்டான். அநியாயக்காரன்-அநீதியிழைக்கப்பட்டவன், அரசன்-ஆண்டி, எஜமான்-அடிமை என்ற பாகுபாடுகள் நீங்கின. மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே அனைவரும் தங்களுக்குள் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ள வேண்டும் இறைக் கட்டளைக்கு ஒவ்வொருவரும் அடிபணிய வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. அறியாமைக் கால கர்வம், முன்னோர்களைக் கூறி பெருமையடிப்பது, இனவெறி கொள்வது அனைத்தையும் விட்டு அல்லாஹ் இவர்களை தூரமாக்கினான்.

இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகைளிலும் ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விட, ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லாமல் போனது. மக்கள் எல்லோரும் ஆதமின் மக்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர் என்ற உண்மை உள்ளத்தில் பதிய வைக்கப்பட்டது. இறுதியாக இந்த அழைப்புப் பணியின் சிறப்பால் முழு மனித சமுதாயம், சமூகம் அரசியல் என அனைத்தாலும் ஒன்றுபட்டது. இம்மை மறுமை பிரச்சனைகளில் மானுடம் ஈடேற்றம் கண்டது. காலங்கள் மாறி புதிய உலகம் தோன்றிது. புதிய வரலாறு உருவானது. புதிய சிந்தனை எழுந்தது.