பக்கம் - 521 -
இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு...

அது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை. நபி (ஸல்) உடல் நலனில் முன்னேற்றத்தை உணர்ந்தார்கள், இரண்டு பேர் உதவியுடன் தங்களது அறையிலிருந்து பள்ளிக்கு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) ளுஹ்ர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்களை அபூபக்ர் (ரழி) பார்த்தவுடன் நகர்ந்து கொள்ள முயன்றார்கள். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என சைகை செய்தார்கள். பிறகு, என்னை அபூபக்ர் அருகில் அமர வையுங்கள் என்று கூற, அவர்களை அபூபக்ரின் இடப்பக்கத்தில் உட்கார வைத்தார்கள். நபி (ஸல்) தொழ வைக்க அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூபக்ர் (ரழி) தொழது கொண்டு, நபியவர்களின் தக்பீரை மக்களுக்கு கேட்கும்படி சப்தமிட்டுக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஒரு நாள் முன்பு...

நபி (ஸல்) மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும், தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத் தர்மம் செய்தார்கள். தங்களுடைய ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அன்றிரவு நபி (ஸல்) அவர்களின் வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு பெண்ணிடம் கொடுத்தனுப்பி அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி ஆயிஷா (ரழி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் கவச ஆடை முப்பது ‘சாஃ’ கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅது, முஸ்னது அஹ்மது)

வாழ்வின் இறுதி நாள்

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் ‘உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்” என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மேலும், “அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா” என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)