பக்கம் - 529 -
இரண்டாவது அடிமை: ரைஹானா பின்த் ஜைது. இவர் பனூ நளீர் அல்லது பனூ குறைளா சமூகத்தைச் சேர்ந்தவர். பனூ குறைளாவுடன் போரில் கைது செய்யப்பட்ட இப்பெண்ணை நபி (ஸல்) தனது பங்கில் எடுத்துக் கொண்டார்கள். இவரை உரிமையிட்ட பிறகு நபி (ஸல்) மணமுடித்தார்கள், எனவே, இவர் நபி (ஸல்) அவர்களின் மனைவியாகி விடுகிறார் என்று வேறு சிலர் கூறுகின்றனர். அறிஞர் இப்னுல் கய்” (ர) ‘முந்திய கூற்றே ஏற்றமானது’ என்கின்றார். அபூ உபைதா (ரஹ்) என்ற அறிஞர் “மேலும் இரண்டு அடிமைப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தார்கள் ஒருவர் ஜமீலா, இவர் போர்க் கைதியாக கிடைத்தவர். மற்றொருவர் பெயர் தெரியவில்லை, அவரை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்” என்கின்றார். (ஜாதுல் மஆது)

பலதார மணம் புரிந்தது ஏன்?

நபி (ஸல்) நல்ல உடல் வலிமையும் திடகாத்திரமும் கொண்ட வாலிபக் காலத்தில் தன்னை விட 15 வயது அதிகமான கதீஜா (ரழி) அவர்களுடனே ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள். கதீஜா (ரழி) மரணமான பின்பே ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவரும் வயதில் நபி (ஸல்) அவர்களை விட மூத்தவராக இருந்தார். அதற்குப் பின் தனது வயோதிக காலத்தில்தான் பல திருமணங்களைச் செய்தார்கள். இதை நன்கு சிந்திப்பவர் “நபி (ஸல்) பல திருமணங்களை செய்தது, அதிக ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான்” என்று அறவே கூற முடியாது. மாறாக, அதற்குப் பல உயர்ந்த உன்னத நோக்கங்கள் இருந்திருக்க வேண்டும் என அறியலாம்.

அபூபக்ர் (ரழி) அவர்களின் மகள் ஆயிஷாவையும், உமர் (ரழி) அவர்களின் மகள் ஹஃப்ஸாவையும் நபி (ஸல்) மணமுடித்து அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) ஆகிய இருவருடனும் உறவை பலப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு அலீ (ரழி) அவர்களுக்குத் தனது மகள் ஃபாத்திமாவையும், உஸ்மான் (ரழி) அவர்களுக்குத் தங்களது மகள்கள் ருகைய்யா பின்னர் உம்மு குல்சூமையும் மணமுடித்துக் கொடுத்து உறவை செம்மைப்படுத்திக் கொண்டார்கள். இந்த நால்வரும் இஸ்லாமுடைய வளர்ச்சிக்காக பல இக்கட்டான நேரங்களில் உடல், பொருள் தியாகங்கள் புரிந்து இஸ்லாமுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர்கள். எனவே, இந்த நால்வருடன் மக்கள் அனைவரும் நல்லுறவுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இத்திருமணங்கள் மூலம் நபி (ஸல்) முஸ்லிம்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அரபியர்கள் பண்டைக் கால வழக்கப்படி மாமனார் வீட்டு உறவைப் பெரிதும் மதித்தனர். இவ்வுறவு பல மாறுபட்ட குடும்பங்களுக்கிடையில் நெருக்கத்தை உண்டு பண்ணுவதற்குரிய வழிகளில் ஒன்றாக இருந்தது. மாமனார் வீட்டு உறவுகளுடன் சண்டையிடுவதையும், போர் புரிவதையும் தங்களுக்கு மகா கேவலமாகவும் இழுக்காகவும் கருதினர். பல மாறுபட்ட வமிசங்களிலிருந்து நபி (ஸல்) தங்களது திருமணங்களைச் செய்து அந்த வமிசங்களுக்கிடையே உள்ள பகைமையையும் கோபத்தையும் தணிக்க முயற்சித்தார்கள்.

எடுத்துக்காட்டாக, உம்மு ஸலமா (ரழி) - இவர் மக்ஜூம் கிளையைச் சேர்ந்தவர். அபூ ஜஹ்லும், காலித் இப்னு வலீதும் இதே கிளையைச் சேர்ந்தவர்கள்தான். (அபூஜஹ்ல் பத்ரு போரில் கொல்லப்பட்டான்) நபி (ஸல்) அவர்களைப் பல போர்களில் எதிர்த்து வந்த காலித் இப்னு வலீத் (ரழி) தனது கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) மணமுடித்துக் கொண்டதால் தனது எதிர்ப்பைக் கைவிட்டு குறுகிய காலத்திற்குள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாமை ஏற்றார்.