பக்கம் - 64 -
தெளிவான சான்றுகளை ஆராயும்போது அது ரமழான் 21வது பிறை திங்கட்கிழமை என்ற முடிவுக்கு வரலாம். (கி.பி. 610 ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி) அந்நாளில் அவர்களது வயது பிறை கணக்குப்படி மிகச் சரியாக 40 ஆண்டுகள், 6 மாதங்கள், 12 நாள்களாகும். சூரிய கணக்குப்படி 39 ஆண்டுகள், 3 மாதங்கள் 20 நாள்களாகும்.

இறை நிராகரிப்பு, வழிகேடு போன்ற அனைத்து இருள்களையும் அழித்து வாழ்க்கைக்கு ஒளிமிக்க பாதையை அமைத்துத் தந்த நபித்துவத்தின் இந்த முக்கிய நிகழ்ச்சியைப் பற்றி அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறக் கேட்போம்:

“நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹி (இறைச்செய்தி) தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இருந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அதிகாலையின் விடியலைப் போன்று அவை தெளிவாக அப்படியே நடக்கும். பின்னர் தனிமையை விரும்பினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். பிறகு தனது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார்கள். இதற்காக உணவையும் தம்மோடு எடுத்துச் செல்வார்கள். உணவு தீர்ந்தவுடன் கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து மீண்டும் உணவை எடுத்துச் செல்வார்கள். இந்த நிலையில்தான் ஹிரா குகையில் அவர்களுக்கு வஹி வந்தது. வானவர் நபியவர்களிடம் வந்து, “ஓதுவீராக!” என்றார். அதற்கவர்கள் “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்நிலையைப் பற்றி பின்வருமாறு விவரித்தார்கள்: பிறகு அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவுக்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். மீண்டும் என்னை இறுகக் கட்டியணைத்துவிட்டு “ஓதுவீராக!” என்றார். (அப்போதும்) “நான் ஓதத் தெரிந்தவனில்லையே!” என்றேன். அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டியணைத்துவிட்டு,

(நபியே! அனைத்தையும்) படைத்த உங்களது இறைவனின் பெயரால் (எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை) நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். (நபியே! பின்னும்) நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும் கொடையாளி! (அல்குர்ஆன் 96 : 1-6) என்ற வசனங்களை ஓதிக் காட்டினார்.

பிறகு அந்த வசனங்களுடன் இதயம் நடுங்க (தமது துணைவியார்) கதீஜா (ரழி) அவர்களிடம் வந்து “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்றார்கள். கதீஜா (ரழி) நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜாவிடம் நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள். அதற்கு கதீஜா (ரழி) “அவ்வாறு கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உங்களை ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளை சுமந்து கொள்கிறீர்கள். வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (சிக்குண்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்” என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தமது தந்தையின் உடன் பிறந்தவரான ‘நவ்ஃபல்’ என்பவரின் மகன் ‘வரகா“விடம் அழைத்துச் சென்றார்கள்.