பக்கம் - 73 -
இரண்டாவது முறையாகவும் ஹாஷிம் கிளையாரை அழைத்து “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே புகழ்கிறேன். அவனிடமே உதவி தேடுகிறேன். அவன்மீது நம்பிக்கை வைக்கிறேன். அவனிடமே பொறுப்பு ஒப்படைக்கிறேன். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு எவனுமில்லை. அவனுக்கு இணை யாருமில்லை என்று சாட்சி சொல்கிறேன்” எனக் கூறித் தொடர்ந்தார்கள்; “நிச்சயமாக “ராம்த்’ (போருக்கு செல்லும் வீரர்கள் தங்குவதற்கு ஏற்ற இடங்களையும், நீர்நிலைகளையும் அறிந்து வருவதற்காக அனுப்பப்படும் தூதர்) பொய்யுரைக்கமாட்டார். எந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லையோ அவன் மீது ஆணையாக! நிச்சயமாக நான் குறிப்பாக உங்களுக்கும், பொதுவாக ஏனைய மக்களுக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் உறங்குவது போன்றே மரணிப்பீர்கள். நீங்கள் விழிப்பது போன்றே எழுப்பப்படுவீர்கள். உங்களது செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படுவீர்கள். நிச்சயமாக அது நிரந்தர சொர்க்கமாக அல்லது நிரந்தர நரகமாக இருக்கும்” என்று உரையாற்றி முடித்தார்கள்.

அப்போது அபூ தாலிப் கூறினார்: “உனக்கு உதவி செய்வது எங்களுக்கு மிகவும் விருப்பமானதே, உனது உபதேசத்தை ஏற்பதும் எங்களுக்குப் பிரியமானதே, உனது பேச்சை மிக உறுதியாக உண்மைப்படுத்துகிறோம். இதோ! உனது பாட்டனாரின் குடும்பத்தார்! நானும் அவர்களில் ஒருவன்தான். எனினும், நீ விரும்புவதை அவர்களைவிட நான் விரைவாக ஏற்றுக் கொள்வேன். எனவே, உனக்கிடப்பட்ட கட்டளையை நீ நிறைவேற்றுவதில் நீ உறுதியாக இரு. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உன்னைச் சூழ்ந்து நின்று பாதுகாப்பேன். எனினும், எனது மனம் அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை விட்டுப் பிரிய விரும்பவில்லை” என்றார்.

அப்போது அபூ லஹப் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது (இந்த அழைப்பு) மிக இழிவானது. இவரை மற்றவர்கள் தண்டிக்கும் முன் நீங்களே தடுத்துவிடுங்கள்” என்றான். அதற்கு அபூதாலிப் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் இருக்கும்வரை அவரைப் பாதுகாப்போம்” என்று கூறிவிட்டார். (அல்காமில்)

ஸஃபா மலை மீது...

அபூதாலிப் தனக்கு பாதுகாப்பளிப்பார் என்று நபி (ஸல்) உறுதியாக அறிந்தபின் இறை மார்க்கத்தை எடுத்துரைப்பதற்காக ஸஃபா மலை உச்சியில் ஏறி நின்று “யா ஸபாஹா! யா ஸபாஹா!!” என்று சப்தமிட்டார்கள். (பெரும் படையொன்று சூழ்ந்துகொண்டதை அல்லது ஏதேனும் பேராபத்து வந்துவிட்டதை அறிவிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.)

பிறகு குறைஷி வமிசத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்தார்கள்: ஃபஹ்ர் குடும்பத்தாரே! அதீ குடும்பத்தாரே! அப்து முனாஃபின் குடும்பத்தாரே! அப்துல் முத்தலிபின் குடும்பத்தாரே! என்று அழைத்தார்கள்.

அவர்களது அழைப்பைச் செவியேற்று இவ்வாறு அழைப்பவர் யார்? என வினவ சிலர் “முஹம்மது” என்று கூறினர். உடனே குறைஷியர்களில், அபூலஹப் மற்றும் பலரும் அங்கு குழுமினர். வர இயலாதவர்கள் தங்கள் சார்பாக ஒருவரை அவர் சொல்வதைக் கேட்டு வருமாறு கூறியனுப்பினார்கள்.