பக்கம் - 85 -
3) முன்னோர்களின் கட்டுக்கதைகளைக் கூறி திருமறையை செவியேற்காதவாறு மக்களைத் தடுப்பது

நிராகரிப்பவர்கள் மேற்கண்ட சந்தேகங்களுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. மக்கள் குர்ஆனை செவியேற்கவோ இஸ்லாமிய அழைப்புக்கு பதில் தரவோ இயலாதவாறு அவர்களிடையே புகுந்து தங்களால் இயன்றவரை தடைகளை ஏற்படுத்தினார்கள். இஸ்லாமிய அழைப்பைக் கேட்கும் மக்களிடையே நுழைந்து கூச்சல், குழப்பங்களையும், சலசலப்பையும் ஏற்படுத்தி அவர்கள் குழுமியுள்ள அந்த இடங்களிலிருந்து அவர்களை மிரண்டு ஓடவைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அழைப்பு விடுப்பதற்கு அல்லது தொழுவதற்கு அல்லது குர்ஆன் ஓதுவதற்கு தயாரானால் பாட்டுப்பாடி ஆட்டம் போடுவார்கள். இது குறித்து அடுத்து வரும் வசனம் அருளப்பட்டது:

நிராகரிப்பவர்கள் (மற்றவர்களை நோக்கி) “நீங்கள் இந்த குர்ஆனை செவிமடுக்காதீர்கள். (எவர்கள் அதனை ஓதினாலும்) நீங்கள் அச்சமயம் சப்தமிட்டு அதில் கூச்சல், குழப்பம் உண்டுபண்ணுங்கள். அதனால் நீங்கள் (முஸ்லிம்களை) வென்றுவிடலாம்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 41:26)

இத்தகைய இடையூறுகளால் நபி (ஸல்) அவர்களுக்கு மக்கள் மன்றங்களிலும் பொதுச் சபைகளிலும் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதும் குர்ஆனை ஓதிக் காண்பிப்பதும் மிகச் சிரமமாக இருந்தது. எனவே, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மக்கள் முன்னிலையில் தோன்றி சொல்லவேண்டிய விஷயத்தை எடுத்துச்சொல்லி, ஓதிக்காட்ட வேண்டியதை ஓதிக்காட்டி விடுவார்கள். கடினமான இந்நிலை நபித்துவம் பெற்ற ஐந்தாம் ஆண்டு இறுதிவரை நீடித்தது.

குறைஷியர்களில் ஒருவனான “நள்ரு இப்னு ஹாரிஸ்’ ஒரு முறை “ஹீரா’ சென்றிருந்தபோது அங்கிருந்து பாரசீக அரசர்கள் மற்றும் ருஸ்தும், இஸ்ஃபுந்தியார் ஆகியோரின் கதைகளை கற்று வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு சபையில் உபதேசம் செய்யவோ, அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவோ தொடங்கினால், அவர்களுக்குப் பின் “நழ்ரு’ நின்று கொண்டு “குறைஷியரே! முஹம்மதை விட நான் அழகாகப் பேசுவேன்” என்று கூறி, தான் கற்று வந்த கதைகளைக் கூறி முடித்தபின் “என்னை விட முஹம்மது அழகாகப் பேசிட முடியுமா?” என்று கேட்பான். (இப்னு ஹிஷாம்)

இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: இனிமையாக பாட்டுப் பாடும் ஓர் அடிமைப் பெண்ணை நழ்ரு விலைக்கு வாங்கியிருந்தான். இஸ்லாமை ஏற்க எவரேனும் விரும்பினால் அவரிடம் தனது பாடகியை அழைத்துச் சென்று “இவருக்கு உணவளித்து, மதுவைப் புகட்டி, இனிமையாக பாட்டுப் பாடு” என்று அவளிடம் கூறுவான். பிறகு, அம்மனிதரிடம் “முஹம்மது உன்னை அழைக்கும் காரியத்தைவிட இது மிகச் சிறந்தது” என்று கூறுவான். இது குறித்து பின்வரும் வசனம் அருளப்பட்டது. (துர்ருல் மன்ஸுர்)

(இவர்களைத் தவிர) மனிதர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் மற்றும்) வீணான விஷயங்களை விலைக்கு வாங்கி (அவற்றை மக்களுக்கு ஓதிக் காண்பித்து) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து ஞானமின்றி மக்களை வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையவர்களுக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு. (அல்குர்ஆன் 31:6)