பக்கம் -27-
அகபாவில் இரண்டாவது ஒப்பந்தம்
நபித்துவத்தின் 13 ஆம் ஆண்டு (கி.பி. 622 ஜூன் திங்கள்) ஹஜ்ஜுடைய காலத்தில்
ஹஜ்ஜுக்காக மதீனாவாசிகளில் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் கலந்து, எழுபதுக்கும்
அதிகமானோர் மக்கா வந்தனர். மதீனாவில் இருக்கும்போது அல்லது மக்காவிற்கு வரும் வழியில்
இந்த முஸ்லிம்கள் இவ்வாறு பேசிக் கொண்டனர். “மக்காவின் மலைப்பாதைகளில் சுற்றித் திரிந்து
கொண்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டு மக்களை அஞ்சிய நிலையில் வாழ்ந்து வர நபி (ஸல்)
அவர்களை நாம் எதுவரை விட்டு வைத்திருப்பது?” மதீனாவாசிகளின் இந்த உணர்ச்சிமிக்க பேச்சிலிருந்து
நபி (ஸல்) அவர்களை மதீனாவிற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற ஆசை அவர்களது உள்ளத்தில்
இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
இவர்கள் அனைவரும் மக்கா வந்து சேர்ந்தனர். பிறகு அதிலிருந்த முஸ்லிம்களுக்கும் நபி
(ஸல்) அவர்களுக்குமிடையில் இரகசியமான முறையில் சந்திப்புகள் பல நடந்து கொண்டிருந்தன.
இறுதியாக, ஹஜ்ஜுக் கடமைகளை முடித்து மினாவில் முதல் ஜம்ராவுக்கு அருகிலுள்ள அகபாவில்
பிறை 12ம் நாள் நள்ளிரவில் சந்திப்போமென்று நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் முடிவு
செய்தனர். சிலை வழிபாட்டிற்கும் இஸ்லாமிற்கும் நடந்த போராட்டத்தில் மாபெரும் திருப்புமுனையாக
அமைந்த வரலாற்று பிரசித்திமிக்க இந்த சந்திப்பைப் பற்றி அன்சாரிகளின் தலைவர்களில் ஒருவராக
விளங்கிய கஅப் இப்னு மாலிக் (ரழி) விவப்பதை நாம் பார்ப்போம்:
“நாங்கள் ஹஜ் செய்ய மக்காவிற்கு வந்திருந்தோம். ஹஜ் முடிந்த இரண்டாவது தினத்தில் அகபாவில்
சந்திக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் பேசி முடிவு செய்தோம். அதன்படி நபி (ஸல்)
அவர்களைச் சந்திக்க நாங்கள் தயாரானோம். அப்போது எங்களுடன் எங்களின் தலைவர்களில் சிறப்புமிக்க
ஒருவரான ‘அபூஜாபிர்’ எனப்படும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஹராம் என்பவரையும் உடன்
அழைத்துக் கொண்டோம். எங்களுடன் வந்தவர்களில், அதுவரை இஸ்லாமை ஏற்காமல் இருந்தவர்களுக்கு
நாங்கள் இதைப் பற்றி எதையும் கூறவில்லை. அபூஜாபிருக்கு நாங்கள் இஸ்லாமைப் பற்றி விளக்கம்
கொடுத்தோம். “அபூஜாபிரே! நீங்கள் எங்களின் தலைவர்களில் ஒருத்தர் எங்களில் மிகவும் மதிப்புமிக்கவர்களில்
நீங்களும் ஒருத்தர். நீங்கள் நாளை நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவதை நாங்கள் விரும்பவில்லை”
என்று கூறி இஸ்லாமை ஏற்க அழைப்பு கொடுத்தோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களை அகபாவில் சந்திக்க
இருக்கிறோம் என்பதையும் கூறினோம். அவர் எங்களின் அழைப்பை ஏற்று இஸ்லாமைத் தழுவி எங்களுடன்
அகபா ஒப்பந்தத்திலும் கலந்து கொண்டார். பிறகு நியமிக்கப்பட்ட 12 தலைவர்களில் இவரும்
ஒருவராவார்.
தொடர்ந்து கஅப் (ரழி) கூறுகிறார்: அன்றிரவு நாங்கள் எங்களது கூடாரங்களில் எங்களது கூட்டத்தினருடன்
தங்கியிருந்துவிட்டு இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிந்த பின் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காக
இரகசியமாக வெளியாகி அகபாவிற்கு அருகிலுள்ள கணவாயில் ஒன்று சேர்ந்தோம். நாங்கள் ஆண்களில்
73 பேரும், பெண்களில் மாஜின் குடும்பத்தைச் சேர்ந்த ‘உம்மு உமாரா’ என்ற நுஸைபா பின்த்
கஅப் என்பவரும், ஸலமா குடும்பத்தைச் சேர்ந்த ‘உம்மு மனீஃ’ என்ற அஸ்மா பின்த் அம்ர்
என்பவரும் கலந்துகொண்டனர்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்து அக்கணவாயில் கூடினோம். நபி (ஸல்) அவர்களுடன்
அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபும் வந்தார்கள். அந்நேரத்தில் அவர் முஸ்லிமாக இல்லை.
எனினும், தனது அண்ணன் மகனுடைய செயல்பாடு மற்றும் நடைமுறைகளை சரிவரத் தெரிந்து கொள்வதற்காகவும்
அவருக்காக அன்சாரிகளிடம் உறுதிமொழி வாங்குவதற்காகவும் அங்கு வந்திருந்தார். அவரே குழுமியிருந்தவர்களில்
முதலாவதாகப் பேசத் தொடங்கினார்.” (இப்னு ஹிஷாம்)
உரையாடலின் தொடக்கமும் அப்பாஸின் விளக்கமும்
அனைவரும் சபையில் ஒன்று கூடியபின் மார்க்க ரீதியான மற்றும் நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பது
தொடர்பான ஒப்பந்தங்களை உறுதிப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் தொடங்கின. முதலில்
நபி (ஸல்) அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் பேசினார். அவர்
தனது பேச்சில் இந்த நட்பு ஒப்பந்தத்தின் விளைவாக தங்களின் தோள்களில் சுமக்க இருக்கும்
பொறுப்பு எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு பெரிய பின்விளைவுகளைக் கொண்டது என்பதை மிகத் தெளிவாக
அன்சாரிகளுக்கு விவரித்தார். இதோ அப்பாஸ் அவர்களின் பேச்சின் சுருக்கம்:
“கஸ்ரஜ் கூட்டத்தினரே! நிச்சயமாக முஹம்மது எங்களிடம் எவ்வாறு இருக்கிறார் என்பது உங்களுக்கு
நன்றாகத் தெரியும். எங்கள் கூட்டத்தில் எங்களது (ஷிர்க்-இணைவைக்கும்) கொள்கையின் மீது
இருப்பவர்களிடமிருந்து நாம் அவரை இதுநாள் வரை பாதுகாத்து வந்திருக்கிறோம். அவர் எங்களது
கூட்டத்தில் கண்ணியமாக, அதே நேரத்தில் அவரது ஊரில் பாதுகாப்புடனும்தான் இருக்கின்றார்.
எனினும், அவர் உங்களுடன் இணைந்துவிடவும், உங்களுடன் ஒன்றிவிடவும் விரும்புகிறார். நீங்கள்
அவருக்கு தரும் வாக்கைக் காப்பாற்றி எதிரிகளிடமிருந்து அவரை பாதுகாப்பவர்களாக இருந்தால்
அவரை அழைத்துச் செல்லலாம். இல்லை, ‘நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள்.
இங்கிருந்து அழைத்துச் சென்றவுடன் கைவிட்டு விடுவீர்கள்’ என்றிருப்பின் இப்போதே அவரை
விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் தனது கூட்டத்தினருடன் தனது ஊரில் கண்ணியத்துடனும்,
பாதுகாப்புடனும் தான் இருக்கின்றார்.”
அப்பாஸின் இந்த உரையாடலுக்குப் பின் கஅப் “நீங்கள் கூறியதை நாங்கள் கேட்டு விட்டோம்
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பேசுங்கள். உங்களுக்கும் உங்களது இறைவனுக்கும் நீங்கள்
விரும்பியதையெல்லாம் எங்களிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். (இப்னு
ஹிஷாம்)
அன்சாரிகளின் உறுதியையும், வீரத்தையும், இந்த மகத்தான பொறுப்பையும், அதன் விபரீதமான
பின்விளைவுகளையும் தாங்கிக் கொள்வதில் அவர்களிடம் இருந்த உறுதியையும் மனத் தூய்மையையும்
இந்த பதில்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கஅப் கூறிய பிறகு நபி (ஸல்) அவர்களின் உரையும்
அதற்குப் பின் உறுதிமொழி வாங்குவதும் நடைபெற்றது.
ஒப்பந்தத்தின் அம்சங்கள்
ஜாபிர் (ரழி) இதைப்பற்றி மிக விரிவாக அறிவிக்கிறார்கள். “அல்லாஹ்வின் தூதரே! எந்த விஷயங்களுக்காக
நாங்கள் உங்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்ய வேண்டு”ம் என்று கேட்க அதற்கு விளக்கமாக
நபி (ஸல்) கூறினார்கள்
“இன்பத்திலும் துன்பத்திலும் (கட்டளைக்கு) செவிசாய்க்க வேண்டும் கட்டுப்பட வேண்டும்
வசதியிலும் வசதியின்மையிலும் செலவு செய்ய வேண்டும்
நன்மையை ஏவ வேண்டும் தீமையைத் தடுக்க வேண்டும்
அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்யத் தயாராக வேண்டும் அல்லாஹ்வின் விஷயத்தில்
பழிப்பவர்களின் பழிப்பு உங்களைப் பாதித்து விடக்கூடாது
ஆட்சி, அதிகாரத்தைப் பெறுவதற்காக சண்டையிடக்கூடாது
நான் உங்களிடம் வந்து விட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும் உங்களையும் உங்களது
மனைவியரையும் பிள்ளைகளையும் பாதுகாப்பதைப் போல் நீங்கள் என்னைப் பாதுகாக்க வேண்டும்
இதனை நீங்கள் பைஆ (இஸ்லாமிய ஒப்பந்தம்) செய்து கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சொர்க்கத்தைத்
தருவான்.” இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். (முஸ்னது அஹ்மது, பைஹகீ,
முஸ்தத்ரகுல் ஹாகிம், இப்னு ஹிஷாம்)
இந்நிகழ்ச்சியை கஅப் (ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அதில் அவர்கள் கூறுவதாவது:
“நபி (ஸல்) எங்களிடம் பேசினார்கள் குர்ஆனை ஓதிக் காண்பித்தார்கள் அல்லாஹ்வின் பக்கம்
எங்களை அழைத்தார்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்கு ஆர்வமூட்டினார்கள் பிறகு நீங்கள் உங்களது
மனைவிகளையும் பிள்ளைகளையும் பாதுகாப்பது போன்று என்னையும் பாதுகாக்க வேண்டும் என்று
நான் உங்களிடம் உறுதிமொழி கேட்கிறேன்” என்று கூறி முடித்தார்கள். அப்போது பராஆ இப்னு
மஅரூர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்து “சத்திய மார்க்கத்தைக் கொண்டு
உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களை நாங்கள் பாதுகாப்பது போன்றே
உங்களையும் நிச்சயம் நாங்கள் பாதுகாப்போம்! அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் வாக்குறுதியும்
ஒப்பந்தமும் பெற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் போரின் மைந்தர்கள்
கவச ஆடை அணிந்தவர்கள் பரம்பரைப் பரம்பரையாக போர் செய்து பழக்கப்பட்டவர்கள்” என்று வீர
முழக்கமிட்டார்கள்.
இவ்வாறு பராஆ (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது அபுல்
ஹைசம் இப்னு தைம்ஹான் (ரழி) அவர்கள் குறுக்கிட்டு “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும்
யூதர்களுக்குமிடையில் சில உடன்படிக்கை உறவுகள் இருக்கின்றன. நாங்கள் அதை துண்டித்து
உங்களுடன் சேர்ந்து கொள்கிறோம். பிறகு ஒரு காலத்தில் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைக்
கொடுத்துவிட்டால் நீங்கள் எங்களை விட்டுவிட்டு உங்களது கூட்டத்தனரிடம் சென்று விடுவீர்களா?”
என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக “அவ்வாறில்லை. உங்களது உயிர் எனது
உம்ராகும் உங்களது அழிவு எனது அழிவாகும் நான் உங்களைச் சேர்ந்தவன் நீங்கள் என்னைச்
சேர்ந்தவர்கள் நீங்கள் போர் புரிபவர்களுடன் நானும் போர் புவேன் நீங்கள் சமாதான உடன்படிக்கை
செய்பவர்களுடன் நானும் சமாதான உடன்படிக்கை செய்து கொள்வேன்” என்று கூறினார்கள். (இப்னு
ஹிஷாம்)
ஒப்பந்தத்தின் பின்விளைவை உணர்த்துதல்
மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைகள் முடிவுற்றது. நபித்துவத்தின் 11, 12
ஆம் ஆண்டுகளில் முதன்மையாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் இருவர், ஒருவர் பின் ஒருவராக
எழுந்து தாங்கள் சுமந்து கொள்ளப்போகும் இந்தப் பொறுப்பு எவ்வளவு விபரீதமானது என்பதைத்
தங்களது சமுதாயத்திற்கு மிக விளக்கமாக உணர்த்தினார்கள். ஏனெனில், மக்கள் இவ்விஷயத்தை
தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் தியாகத்திற்கு எவ்வளவு தூரம்
தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து உறுதிசெய்து கொள்வதற்காகவும் இவ்வாறு எடுத்துக்
கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய அனைவரும் ஒன்று சேர்ந்தபின் அப்பாஸ் இப்னு உபாதா
இப்னு நழ்லா (ரழி) அவர்கள் எழுந்து “மக்களே! இவரிடம் நீங்கள் எதற்கு வாக்குக் கொடுக்கிறீர்கள்
என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் ‘அது எங்களுக்கு
நன்கு தெரியும்’ என்றவுடன், தொடர்ந்து அவர் “மக்களே! நீங்கள் இவரிடம் வெள்ளையர், கருப்பர்
என அனைத்து மக்களுக்கு எதிராக போர் செய்யவும் தயார் என்று வாக்கு கொடுக்கின்றீர்கள்.
உங்களது செல்வங்கள் அழிந்து, உங்களில் சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப்படும் போது
நீங்கள் அவரை எதிரிகளிடம் ஒப்படைத்து விடுவீர்கள் என்று கருதினால் இப்போதே இவரை இங்கேயே
விட்டு விடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்தத் தவறை நீங்கள் செய்வது இம்மையிலும்
மறுமையிலும் மிகப்பெரிய இழிவை உங்களுக்குத் தரும். உங்களது செல்வங்கள் அழிந்தாலும்கூட
உங்களது சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப் பட்டாலும் கூட எந்த நிபந்தனைகளுடன் நீங்கள்
இவரை அழைத்துச் செல்ல இருக்கிறீர்களோ அந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றுவீர்கள்
என்ற உறுதி உங்களுக்கு இருப்பின் இவரை நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். அல்லாஹ்வின்
மீது ஆணையாக! இது இம்மை மறுமையின் மிகப்பெரிய நற்பாக்கியமாகும்” என்று கூறினார்.
அதற்கு அம்மக்கள் “செல்வங்கள் அழிந்தாலும் சிறப்பிற்குரியவர்கள் கொலை செய்யப் பட்டாலும்
நாங்கள் இவரை அரவணைத்துக் கொள்வோம் கைவிட்டுவிட மாட்டோம். இதே நிபந்தனைகளின் பேரில்தான்
இவரை அழைத்துச் செல்கிறோம். நாங்கள் இந்த நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றினால் எங்களுக்கு
என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சொர்க்கம் கிடைக்கும்”
என்று கூறினார்கள். உடனே அந்த மக்கள் உங்களது “கையை நீட்டுங்கள்” என்று கூற நபி (ஸல்)
அவர்கள் கையை நீட்டியவுடன் அனைவரும் இஸ்லாமிய ஒப்பந்தம் செய்து கொடுத்தார்கள். (இப்னு
ஹிஷாம்)
ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘பைஆ’ செய்ய எழுந்தபோது,
முதலாவதாக எங்களில் மிகக் குறைந்த வயதுடைய அஸ்அது இப்னு ஜுராரா நபி (ஸல்) அவர்களின்
கையைப் பிடித்துக்கொண்டு பின்வருமாறு கூறினார்:
“மதீனாவாசிகளே! சற்றுப் பொறுங்கள். இவர் அல்லாஹ்வின் தூதர். இவரை இவரது ஊரிலிருந்து
வெளியேற்றி அழைத்துச் செல்வதால் முழு அரபு இனத்தையும் பிரிய வேண்டும் நம்மிலுள்ள மேன்மக்கள்
கொலை செய்யப்படலாம் நம்மை எதிரிகளின் வாட்கள் வெட்டி வீழ்த்தலாம் இவை அனைத்தையும் தெரிந்து
கொண்டுதான் நாம் பயணம் செய்து வந்திருக்கிறோம் என்பது தெரிந்த விஷயமே. ஆனால், இப்போது
நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவெனில், இந்த சோதனைகளை உங்களால் சகித்துக்கொள்ள முடியுமென்றால்
இவரை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். அதற்குரிய கூலியை நிச்சயம் அல்லாஹ் உங்களுக்குக்
கொடுப்பான். ஒருவேளை உங்களது உயிரைப் பற்றிய பயம் உங்களுக்கு இருந்தால் இப்போது இவரை
இங்கேயே விட்டுவிடுங்கள். அல்லாஹ் உங்களை மன்னித்து விடலாம்.” இவ்வாறு அஸ்அத் கூறிமுடித்தவுடன்
மக்கள் “அஸ்அதே! உமது கையை அகற்றிவிடு. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்களிடம்
ஒப்பந்தம் செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்கவும் மாட்டோம் ஒருக்காலும் அதை முறிக்கவும்
மாட்டோம்” என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது, பைஹகீ)
இவ்வாறு அஸ்அத் செய்ததற்குக் காரணம் மதீனாவாசிகள் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்ய
எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகத்தான்.
இதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் முதன்மையாக ஒப்பந்தம் செய்து கொடுத்தது அஸ்அது
இப்னு ஜுராராதான். (இப்னு ஹிஷாம்)
ஏனெனில், இவர்தான் முஸ்அப் இப்னு உமைடம் சென்ற மாபெரும் மார்க்க அழைப்பாளராவார். இதற்குப்
பிறகு மக்கள் அனைவரும் பைஆ செய்தனர்.
ஜாபிர் (ரழி) கூறுவதாவது: நாங்கள் ஒவ்வொருவராக எழுந்து நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம்.
நபி (ஸல்) எங்களிடம் வாக்குறுதிப் பெற்றபின் அதற்கு பகரமாக எங்களுக்கு சொர்க்கத்தை
வாக்களித்தார்கள். (முஸ்னது அஹ்மது)
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் இருவரும் ஒப்பந்தம் செய்தனர். அவர்கள் நபி
(ஸல்) அவர்களின் கையைப் பிடிக்காமல் சொல்லால்தான் ஒப்பந்தம் செய்தனர். நபி (ஸல்) எந்த
ஒரு அந்நியப் பெண்ணிடமும் கை கொடுத்ததில்லை. (ஸஹீஹ் முஸ்லிம்)