பக்கம் -80-
2) மிஸ்ரு நாட்டு மன்னருக்குக் கடிதம்
மிஸ்ரு (எகிப்து) மற்றும் இஸ்கந்தய்யா (அலெக்ஸாண்டியா)வின் மன்னரான ‘முகவ்கிஸ்’ என்றழைக்கப்படும்
ஜுரைஜ் இப்னு மத்தாவிற்கு நபி (ஸல்) கடிதம் அனுப்பினார்கள்.
(ரஹ்மத்துல் லில் ஆலமீன்)
அக்கடிதத்தில்:
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின்
அடிமையும், அவனது தூதருமான முஹம்மது, கிப்திகளின் மன்னருக்கு எழுதுவது. நேர்வழியைப்
பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.
நான் உங்களுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுக்கிறேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்க. ஈடேற்றம் அடைவீர்.
இஸ்லாமை ஏற்றுக்கொள்க. அல்லாஹ் உங்களுக்கு இருமுறை நற்கூலி வழங்குவான். நீங்கள் புறக்கணித்து
விட்டால் கிப்தி இனத்தவர்களின் குற்றமும் உங்களையே சாரும்.
(“வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக!
(அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும்
இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள
மாட்டோம்” (என்று கூறுங்கள். நம்பிக்கை யாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால்
(அவர்களை நோக்கி) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள்
சாட்சி கூறுங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.) (அல்குர்ஆன் 3:64) (ஜாதுல் மஆது)
இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு நபியவர்கள் ஹாதிப் இப்னு அபூ பல்தஆவை தேர்வு
செய்தார்கள். ஹாதிப் (ரழி) அங்கு சென்றவுடன் அம்மன்னரைப் பார்த்து இவ்வாறு கூறினார்:
“நிச்சயமாக உமக்கு முன் தன்னை மிக உயர்ந்த இறைவன் என்று சொல்லி வந்த ஒருவன் இங்கு இருந்தான்.
அல்லாஹ் அவனை நிரந்தரத் தண்டனையைக் கொண்டு தண்டித்தான். அல்லாஹ் அவனைக் கொண்டு பிறரையும்,
பின்பு அவனையும் தண்டித்தான். எனவே, நீ பிறரைக் கொண்டு படிப்பினை பெற்றுக் கொள். பிறர்
உன்னைக் கொண்டு படிப்பினை பெறும்படி நடந்து கொள்ளாதே!”
இதைக் கேட்ட முகவ்கிஸ் “நிச்சயமாக எங்களுக்கென்று ஒரு மார்க்கம் இருக்கிறது. நாங்கள்
அம்மார்க்கத்தை விடமாட்டோம். ஆனால், அதைவிட சிறந்த ஒரு மார்க்கம் கிடைத்தால் விட்டு
விடுவோம்” என்று கூறினார். அப்போது ஹாதிப் (ரழி) அதற்கு பின்வரும் பதிலை கூறினார்:
நாங்கள் உம்மை இஸ்லாமிய மார்க்கத்தின் பக்கம் அழைக்கிறோம். இதைத் தவிர மற்ற மார்க்கங்களின்
தேவை இனி அறவே இருக்காது. இதுவே அனைத்திற்கும் போதுமான, பரிபூரணமான மார்க்கமாகும்.
நிச்சயமாக இந்த நபி மக்களுக்கு அழைப்பு கொடுத்தார்கள். அம்மக்களில் குறைஷிகள் அவருடன்
மிகக் கடுமையாக நடந்து கொண்டனர். யூதர்கள் அவரைப் பகைத்தனர். கிறிஸ்துவர்கள் அவருடன்
நட்பு கொண்டனர்.
சத்தியமிட்டுக் கூறுகிறேன்! நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி நபி மூஸா (அலை) அவர்கள்
நற்செய்தி அறிவித்தார்கள். அவ்வாறே நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி நபி ஈஸா (அலை)
அவர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். உம்மை நாங்கள் குர்ஆனின் பக்கம் அழைப்பது நீங்கள்
தவ்றாத் வேதமுடையவர்களை இன்ஜீலின் பக்கம் அழைப்பதைப் போன்றுதான். ஒவ்வொரு நபி அனுப்பப்படும்
போதும் அவரது காலத்திலுள்ள மக்களெல்லாம் அந்த நபியின் சமுதாயமாகக் கருதப்படுவார்கள்.
எனவே, அம்மக்கள் அந்த நபிக்கு கீழ்ப்படிந்து நடப்பது கடமையாகும். நீங்கள் இந்த நபி
அனுப்பப்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். (எனவே நீர் அவரை பின்பற்றியாக வேண்டும்) ஈஸாவின்
மார்க்கத்தைப் பின்பற்றுவதிலிருந்து நாங்கள் உம்மைத் தடுக்கவில்லை. மாறாக, நாங்களும்
உமக்கு அதைத்தான் ஏவுகிறோம்.”
இந்தப் பதிலைக் கேட்ட முகவ்கிஸ், “இந்த நபியின் விஷயத்தில் நான் சிந்தித்து விட்டேன்.
அவர் வெறுப்பானவற்றை ஏவவில்லை, அல்லது விருப்பமான ஒன்றை தடுக்கவுமில்லை. வழிகெட்ட சூனியக்காரராகவோ,
பொய் சொல்லும் குறிகாரராகவோ நான் அவரைக் கருதவில்லை. மறைவாக பேசப்படும் இரகசியங்களை
வெளிப்படுத்தும் நபித்துவத்தின் அடையாளம் அவரிடம் இருக்கக் கண்டேன். இருந்தாலும் நான்
மேலும் யோசித்துக் கொள்கிறேன்” என்று ஹாத்திபுக்கு பதில் கூறினார். பின்பு, நபி (ஸல்)
அவர்களின் கடிதத்தை யானை தந்தத்தில் வைத்து மூடி முத்திரையிட்டு தனது அடிமை பெண்களிடம்
கொடுத்து பாதுகாத்து வைக்கச் சொன்னார். பின்பு அரபியில் எழுதும் தனது எழுத்தாளரை அழைத்து
நபியவர்களுக்கு கடிதம் ஒன்று எழுதுமாறு கூறினார்.
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் எழுதுகிறேன்.
அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுக்கு கிப்திகளின் அரசர் முகவ்கிஸ் எழுதுவது. உங்களுக்கு
ஈடேற்றம் உண்டாகட்டுமாக! நான் உங்களது கடிதத்தைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியிருப்பதையும்,
நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீரோ அதையும் நான் புரிந்து கொண்டேன். ஒரு நபி மீதமிருக்கிறார்
என்பது எனக்கு நன்கு தெரியும். அவர் ஷாம் தேசத்திலிருந்து வருவார் என்றுதான் எண்ணியிருந்தேன்.
நான் உங்களது தூதரைக் கண்ணியப்படுத்தினேன். மதிப்பும் மரியாதையுமிக்க இரண்டு அடிமைப்
பெண்களையும் சில ஆடைகளையும் நான் உங்களுக்கு அனுப்பியுள்ளேன். நீங்கள் வாகனிப்பதற்காக
ஒரு கோவேறு கழுதையையும் அன்பளிப்பாக அளிக்கிறேன். உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக.”
இக்கடிதத்தில் இவர் வேறு எதையும் குறிப்பிடவில்லை. இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
இரண்டு அடிமைப் பெண்களில் ஒருவர் ‘மாயா“, மற்றொருவர் ‘சீரீன்“. கோவேறு கழுதையின் பெயர்
‘துல்துல்’ ஆகும். பிற்காலத்தில் வந்த மன்னர் முஆவியா (ரழி) அவர்களின் காலம் வரை துல்துல்
உயிருடனிருந்தது. (ஜாதுல் மஆது)
மாயாவை நபி (ஸல்) தனக்காக வைத்துக் கொண்டார்கள். இவர் மூலம் நபியவர்களுக்கு ‘இப்றாஹீம்’
என்ற குழந்தை பிறந்தது. சீரீனை நபி (ஸல்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழி) என்ற அன்சாரி
தோழருக்கு வழங்கினார்கள்.
3) பாரசீக மன்னருக்குக் கடிதம்
நபி (ஸல்) அவர்கள் பாரசீக மன்னர் ‘கிஸ்ரா“விற்கும் கடிதம் எழுதினார்கள். அந்த கடிதமாவது:
“அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... அல்லாஹ்வின்
தூதர் முஹம்மது, பாரசீகர்களின் மன்னர் கிஸ்ராவிற்கு எழுதும் கடிதம். நேர்வழியைப் பின்பற்றி,
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டு, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத்
தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை யாருமில்லை அவன் தனக்கென எவரையும்
மனைவியாகவோ பிள்ளையாகவோ எடுத்துக் கொள்ளவில்லை நிச்சயமாக முஹம்மது அவனது அடிமையாகவும்
தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்!
நான் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்ட தூதராவேன். உயிருள்ளவர்களை
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, இறைநிராகரிப் பாளர்களுக்கு அவனது தண்டனையின் வாக்கு
உறுதி ஆவதற்காக என்னை அவன் தூதராக அனுப்பியிருக்கிறான். நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள்
ஈடேற்றம் பெறுவீர்கள் நீங்கள் மறுத்துவிட்டால் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குபவர்களின்)
குற்றமெல்லாம் உங்களையே சாரும்.”
இக்கடிதத்தை எடுத்துச் செல்வதற்கு ‘அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மி’ என்ற தோழரைத்
தேர்வு செய்தார்கள். இவர் பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்து, அவர்
அக்கடிதத்தை தனது ஆள் மூலமாக கிஸ்ராவிடம் அனுப்பினாரா அல்லது அப்துல்லாஹ்வே நேரடியாக
கிஸ்ராவிடம் கொடுத்தாரா என்ற விபரம் அறியப்படவில்லை. எதுவாக இருப்பினும், முடிவில்
அக்கடிதம் கிஸ்ராவிடம் சென்று அதை அவன் படித்து விட்டு கிழித்தெறிந்தான். பின்பு பெருமையுடன்
“எனது குடிமக்களில் ஒரு கேவலமான அடிமை எனது பெயருக்கு முன் அவரது பெயரை எழுதுவதா?”
என்று கூறினான்.
இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்த போது “அல்லாஹ் அவனது ஆட்சியை கிழித்தெறியட்டும்”
என்று கூறினார்கள். அவ்வாறே நடக்கவும் செய்தது. இதற்குப் பின் கிஸ்ரா யமன் தேசத்திலுள்ள
தனது கவர்னருக்குக் கடிதம் எழுதினான். அதில் “ஜாஸில் உள்ள இவரிடம் நல்ல துணிச்சலான
இரு வீரர்களை அனுப்பி வை. அவர்கள் அவரை என்னிடம் கொண்டு வரட்டும்” என்று குறிப்பிட்டான்.
இக்கடிதம் கிடைத்தவுடன் கவர்னர் பாதான் தன்னிடமுள்ள வீரர்களிலிருந்து இருவரைத் தேர்ந்தெடுத்து
நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தான். மேலும் அவ்விருவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.
அதில் “இக்கடிதம் கிடைத்தவுடன் நபியவர்கள் இந்த இருவருடன் உடனே புறப்பட்டு கிஸ்ராவிடம்
செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தான்.
வந்த இருவரில் ஒருவன் பெயர் கஹ்ர்மானா பானவய். இவன் கணக்கு மற்றும் ஃபார்சி மொழியை
அறிந்தவன். இரண்டாமவன் பெயர் குர்குஸ்ரு.
இவ்விருவரும் மதீனா வந்து நபியவர்களைச் சந்தித்தார்கள். அவ்விருவல் ஒருவன் நபியவர்களிடம்
“அரசர்களுக்கெல்லாம் அரசரான கிஸ்ரா தனது கவர்னர் பாதானுக்கு கடிதம் எழுதினார். அதில்
உம்மை அழைத்து வருவதற்காக ஆட்களை உம்மிடம் அனுப்பும்படி ஆணையிட, பாதான் என்னை உம்மிடம்
அனுப்பியுள்ளார். நீர் என்னுடன் புறப்பட வேண்டும்” என்று கூறியதுடன் நபியவர்களை எச்சரிக்கும்படி
பல வார்த்தைகளையும் கூறினான். நபி (ஸல்) அவற்றைப் பொறுமையாக கேட்டு விட்டு, தன்னை நாளை
சந்திக்குமாறு அவ்விருவரிடமும் கூறினார்கள்.
இக்காலக் கட்டத்தில் மன்னர் கைசன் படையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த கிஸ்ராவின் படையினர்
கடும் தோல்வியடைந்தனர். இதற்குப் பின் கிஸ்ராவுக்கு எதிராக அவனது குடும்பத்திலிருந்தே
பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. கிஸ்ராவின் மகன் ஷீர்வை தகப்பனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிக்
கொண்டான். இச்சம்பவம் ஹிஜ்ரி 7, ஜுமாதா அல் ஊலா பிறை 10, செவ்வாய் இரவு நடந்தது. அச்சம்பவம்
நடந்த அதே நேரத்தில் அதை வஹியின் வாயிலாக நபி (ஸல்) அறிந்து கொண்டார்கள். (ஃபத்ஹுல்
பாரி, தாக் இப்னு கல்தூன்)
மறுநாள் இரு தூதர்களும் வந்தபோது நபி (ஸல்) அச்செய்தியை அவர்களுக்குக் கூறினார்கள்.
அதற்கு அவ்விருவரும் “நீர் என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? இதற்கு
முன் மிக இலகுவான தண்டனையைத்தான் நாம் உம்மிடம் கூறியுள்ளோம். நீர் சொன்ன இச்செய்தியை
நாங்கள் எழுதி கவர்னருக்கு அனுப்பலாமா?” என்று கூறினர். அதற்கு நபியவர்கள் “ஆம்! அவருக்கு
இச்செய்தியை என் சார்பாக அனுப்பி வையுங்கள்.” என்றும் “எனது மார்க்கமும், ஆட்சியும்
கிஸ்ராவின் ஆட்சி எதுவரை இருக்கிறதோ அதுவரை வந்தடையும். எதுவரை குதிரையும் ஒட்டகமும்
செல்ல முடியுமோ அதுவரை சென்றடையும். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரது கட்டுப்பாட்டில்
உள்ளதை அவருக்கே சொந்தமாக்கி விடுவேன், அவரது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரையே அரசனாக்கி
விடுவேன்” என்றும் சொல்லுங்கள் என்றார்கள்.
அந்த இருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து புறப்பட்டு தங்களது கவர்னர் பாதானிடம் வந்தனர்.
பிறகு நபி (ஸல்) கூறி அனுப்பிய செய்தியைக் கூறினார்கள். சிறிது நேரத்திற்குள் ஷீர்வையின்
கடிதம் ஒன்று அவரிடம் வந்தது. அதில்: “நான் எனது தந்தையைக் கொன்று விட்டேன். எனது தந்தை
தனது கடிதத்தில் குறிப்பிட்ட மனிதர் விஷயத்தில் சற்று பொறு. எனது அடுத்த கட்டளை வரும்
வரை அவரை பழித்துப் பேசிவிடாதே” என்று எழுதப்பட்டிருந்தது. (தாரீகுல் உமமில் இஸ்லாமிய்யா,
ஃபத்ஹுல் பாரி)