1159. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணி(த் தொழுது)வரட்டும். ஏனெனில்,அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுதுகொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுதுவருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள்.
யார் "அங்கத் தூய்மை" (உளூ) செய்து அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்;அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு.
Book : 5
பாடம் : 46 தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்த பிறகு பள்ளிவாசலை விட்டு வெளியேறலாகாது.
1160. அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்தார். உடனே (அங்கிருந்த) ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்து எழுந்து சென்றார். அந்த மனிதர் பள்ளிவாசலைவிட்டு வெளியேறும்வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, "கவனியுங்கள்: இவர், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்" என்று கூறினார்கள்.
Book : 5
1161. அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்ட பின் பள்ளிவாசலை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த ஒரு மனிதரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள், "கவனியுங்கள்: இந்த மனிதர், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறு $செய்துவிட்டார்" என்று கூறினார்கள்.
Book : 5
பாடம் : 47 இஷாவையும் சுப்ஹையும் ஜமாஅத்துடன் தொழுவதன் சிறப்பு.
1162. அப்துர் ரஹ்மான் பின் அபீஅம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று நானும் அமர்ந்தேன். அப்போது அவர்கள், "என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவுவரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 5
1163. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹுத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றின் விஷயத்தில் (நீங்கள் வரம்பு மீறி நடந்து, அது குறித்து) அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்து, அதை உங்களிடம் கண்டுகொண்டதால் உங்களை நரக நெருப்பில் குப்புறத் தள்ளும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 5
1164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சுப்ஹுத் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரணை செய்(யும் நிலையை நீங்கள் ஏற்படுத்)திட வேண்டாம். ஏனெனில், அவன் தன் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து ஒருவரிடம் விசாரிக்கத் தொடங்கினால், அதைக் கண்டுபிடித்தே தீருவான். பின்னர் (வரம்பு மீறி நடந்துகொண்ட) அவனை நரக நெருப்பில் அல்லாஹ் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்.
இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் அல்கஸ்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நரக நெருப்பில் குப்புறத் தள்ளிவிடுவான்" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
Book : 5
பாடம் : 48 தகுந்த காரணமிருப்பின் கூட்டுத் தொழுகை (ஜமாஅத்து)க்குச் செல்லாமல் இருக்க அனுமதியுண்டு.
1165. பத்ருப் போரில் கலந்துகொண்ட அன்சாரி நபித்தோழர்களில் ஒருவரான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் (பனூசாலிம்) சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கின்றேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் (என் சமூகத்தாரான) அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளநீர் வழிந்தோடும். இந்நிலையில் அவர்களுடைய பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு என்னால் தொழவைக்க இயலவில்லை. ஆகவே,அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வந்து (எனது வீட்டில்) ஓரிடத்தில் தொழுகை நடத்த வேண்டுமென்றும், (தாங்கள் நின்று தொழும்) அந்த இடத்தை நான் (என்) தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறேன்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நான் (அவ்வாறே) செய்வேன்" என்று சொன்னார்கள்.
தொடர்ந்து இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களும் நண்பகல் நேரத்தில் என்னிடம் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் நுழைய) அனுமதி கேட்டார்கள். நான் அனுமதியளித்தேன். உள்ளே வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே உட்காரவில்லை. பிறகு என்னிடம் "(இத்பான்!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான் வீட்டின் ஒரு மூலையைக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்று "தக்பீர் (தஹ்ரீம்)" சொன்னார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னே (அணிவகுத்து) நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுது, சலாம் கொடுத்தார்கள். நாங்கள் அவர்களுக்காகச் சமைத்திருந்த "கஸீர்" எனும் (கஞ்சி) உணவி(னை விருந்தளிப்பத)ற்காக அவர்களை நாங்கள் இருக்கவைத்தோம்.
)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட) அந்தப் பகுதி மக்கள் எங்களைச் சுற்றிக் குழுமிவிட்டனர். கணிசமான பேர் (சிறுகச் சிறுக) வந்து (என்) வீட்டில் திரண்டுவிட்டனர். அவர்களில் ஒருவர், "மாலிக் பின் துக்ஷுன் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவர்களில் மற்றொருவர், "அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர் (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க அவர் வரவில்லை)" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைப் பற்றி அவ்வாறு சொல்லாதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினார்கள். அ(வ்வாறு நயவஞ்சகர் என விமரிசித்த)வர், "(அல்லாஹ்வின் தூதரே!) அவர் (மாலிக் பின் துக்ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் அவர்கள்மீது அபிமானம் கொண்டிருப்பதையுமே நாங்கள் காண்கிறோம்" என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் திருப்தியை நாடி "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொன்னவரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி)விட்டான்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பனூசாலிம் குலத்தைச் சேர்ந்தவரும் அவர்களில் முக்கியப் பிரமுகருமான ஹுஸைன் பின் முஹம்மத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களிடம் மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவர்கள் அதை "உண்மைதான்" என உறுதிப்படுத்தினார்கள்.
Book : 5
1166. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "(அம்மக்களில்) ஒருவர் "மாலிக் பின் "துக்ஷுன்" அல்லது "துகைஷின்" எங்கே?" என்று கேட்டார்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அறிவிப்பாளர் மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகவும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
நான் இந்த ஹதீஸைச் சிலரிடம் அறிவித்த போது அவர்களிடையே அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள், "நீங்கள் சொன்னதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்று நான் எண்ணுகிறேன்" என்றார்கள். உடனே நான் "இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் திரும்பச் சென்றால் அவர்களிடம் இது குறித்து (மீண்டும்) கேட்பேன்" என்று சத்தியம் செய்தேன். அவ்வாறே நான் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றேன். இத்பான் (ரலி) அவர்கள் பார்வையை இழந்த முதியவராக இருந்தார்கள்; தம் சமூகத்தாருக்கு இமாமாக (தொழுகை நடத்துபவராக) இருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்து இந்த ஹதீஸ் தொடர்பாகக் கேட்டேன். அப்போது அவர்கள் முன்பு அறிவித்ததைப் போன்றே எனக்கு அறிவித்தார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே கடமைகளும் இன்ன பிற விதிகளும் அருளப்பெற்றன. இவை அருளப்பெற்றதோடு இந்த விஷயம் முற்றுப்பெற்றுவிட்டது. எனவே, ஏமாந்துவிடாமலிருக்க முடிந்தவர் ஏமாந்துவிடாதிருக்கட்டும்.
Book : 5
1167. மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
)நான் சிறுவனாக இருந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த (கிணறு ஒன்றிலிருந்து) வாளியில் (தண்ணீர் எடுத்துத் தமது வாயில் ஊற்றி என் முகத்தில்) ஒரு முறை (செல்லமாக) உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்.
என்னிடம் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் "அல்லாஹ்வின் தூதரே! என் பார்வை கெட்டுவிட்டது..." என்று தொடங்கி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தயாரித்திருந்த கோதுமை மாவுக் கஞ்சி(யை அவர்கள் பருக வேண்டும் என்ற ஆசை)க்காக அவர்களை இருக்கவைத்தோம்" என்று ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பின்புள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
Book : 5
பாடம் : 49 கூடுதலான தொழுகைகளையும் (நஃபில்) ஜமாஅத்தாகத் தொழலாம்; சுத்தமான பாய், தொழுகை விரிப்பு, துணி போன்றவற்றின் மீது தொழலாம்.
1168. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் (தாய் வழிப்)பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு, "எழுங்கள், உங்களுக்காக நான் (நஃபில் தொழுகை) தொழுவிக்கிறேன்" என்று கூறினார்கள். நான் எங்கள் பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரிக்கப்பட்டிருந்ததால் கறுப்பாகிவிட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீர் தெளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) அதில் நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் (ளுமைர் பின் சஅத்) அவர்களுக்குப் பின்னால் அணியில் நின்றோம். அந்த மூதாட்டி (உம்மு சுலைம்) எங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து விட்டுத் திரும்பிச்சென்றார்கள்.
Book : 5
1169. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது சில வேளைகளில் தொழுகை(யின் நேரம்) வந்துவிடும். உடனே, தாம் அமரும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு பணிப்பார்கள். அவ்வாறே அது பெருக்கி(த் துடைத்து)ச் சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே நிற்க, நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள். (அன்று) மக்களுடைய விரிப்பு பேரீச்ச மட்டையால் செய்யப்பட்டதாகவே இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 5
1170. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். அப்போது (வீட்டில்) நான், என் தாயார் மற்றும் என் சிறிய தாயார் உம்முஹராம் (ரலி) ஆகியோர் மட்டுமே இருந்தோம். நபி (ஸல்) அவர்கள், "எழுங்கள்! உங்களுக்காக நான் (நஃபில்) தொழுவிக்கப் போகிறேன்" என்று கூறிவிட்டு எங்களுக்கு (தலைமை தாங்கித்) தொழுவித்தார்கள். (அது கடமையான தொழுகையின் நேரமல்ல.(
-இதன் அறிவிப்பாளரான ஸாபித் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், "நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு (அருகில்) எந்தப் பக்கத்தில் நிறுத்தினார்கள்?" என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரஹ்) அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்" என்று பதிலளித்தார்கள்.-
பின்னர், நபி (ஸல்) அவர்கள் எங்கள் குடும்பத்தாருக்காக எல்லா விதமான இம்மை மறுமை நன்மை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போது என் தாயார், "அல்லாஹ்வின் தூதரே! (அனஸ்,) உங்களுடைய சிறு சேவகர். அவருக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள்!" என்றார். நபி (ஸல்) அவர்கள் "எனக்கு எல்லா விதமான நன்மையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எனக்காகச் செய்த பிரார்த்தனையின் இறுதியில், "இறைவா! அனஸுக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அதில் அவருக்கு வளம் பாலிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
Book : 5
1171. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் என் தாயாருக்கும், அல்லது என் சிறிய தாயாருக்கும் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது என்னைத் தமக்கு வலப் பக்கத்திலும் பெண்ணை எங்களுக்குப் பின்னாலும் நிறுத்தினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 5
1172. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு அருகில் நான் (உறங்கிக்கொண்டு) இருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது சில நேரங்களில் அவர்களது ஆடை என்மீது படும். நபி (ஸல்) அவர்கள் (சிறியதொரு) தொழுகை விரிப்பில் தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 5
1173. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் பாய் ஒன்றில் சஜ்தாச் செய்து தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 5
பாடம் : 50 கூட்டாகத் தொழுவது மற்றும் தொழுகையை எதிர்பார்த்திருப்பது ஆகியவற்றின் சிறப்பு.
1174. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத்தெருவில் தொழுவதைவிடவும் அவர் ஜமாஅத்துடன் தொழுவது இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகவும் செய்து, தொழ வேண்டும் என்ற ஆர்வத்தில், தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு தகுதி அவருக்கு உயர்த்தப்படுகிறது; ஒரு தவறு அவருக்காக மன்னிக்கப்படுகிறது. அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்துவிட்டால், தொழுகையை எதிர்பார்த்து அவர் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள். "இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக! இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவரது பாவமன்னிப்பை ஏற்பாயாக!" என்று அவர்கள் கூறுகின்றனர். அவர் சிறு துடக்கின் மூலம் தொல்லை தராதவரை (இது நீடிக்கும்(.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 5
1175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்."இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!" என்று அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவருக்குச் சிறு துடக்கு ஏற்படாமல் இருந்தால். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துத் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்வரை அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்.
Book : 5
1176. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியார் தொழுகையை எதிர்பார்த்துத் தொழுமிடத்தில் வீற்றிருக்கும்வரை அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறார். அப்போது வானவர்கள், "இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்திக்கின்றனர். அவர் திரும்பிச் செல்லும்வரை அல்லது அவருக்குச் சிறு துடக்கு ஏற்படும்வரை (இது நீடிக்கும்.(
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் "சிறு துடக்கு எது?" என்று கேட்டேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் "சப்தமின்றியோ அல்லது சப்தத்துடனோ காற்று பிரிவதாகும்" என்று பதிலளித்தார்கள்.
Book : 5
1177. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துத் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டதுடன், அவர் தம் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவிடாமல் தொழுகை அவரைத் தடுத்து வைத்திருக்குமானால், அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 5
1178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து வீற்றிருக்கும்வரை அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்; அவருக்குச் சிறு துடக்கு ஏற்படாமல் இருந்தால். அப்போது அவருக்காக வானவர்கள், "இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 5