1800. இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட அரை "ஸாஉ" (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு "ஸாஉ"வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்" என்று கூறினார்கள்.
Book : 12
பாடம் : 5 பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்கிடுமாறு வந்துள்ள கட்டளை.
1801. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
Book : 12
1802. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே நோன்புப் பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
Book : 12
பாடம் : 6 ஸகாத் வழங்க மறுப்பது குற்றம்.
1803. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித்தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் - தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்ற வில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த,கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித்தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலில் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன)?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்;இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்:
குதிரை பாவச்சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்துவந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச்சுமையாகும்.
குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்.
குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல் வெளியில் கட்டிவைத்துப் பராமரித்துவந்தவர் ஆவார். எந்த அளவிற்கு "அந்தப் பசும்புல் வெளியில்" அல்லது "அந்தத் தோட்டத்தில்" அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச்சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாமலிருப்பதில்லை. அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது "அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; "எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்" எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர" என்று சொன்னார்கள்.
Book : 12
1804. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாவிட்டால்" என்று இடம்பெற்றுள்ளது. "அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை" என்று இடம்பெறவிவ்லை.
மேலும், இந்த அறிவிப்பில் "அந்த ஒட்டகங்களின் பால்குடி மறந்த குட்டிகள்கூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. "அவருடைய இரு விலாப்புறங்களிலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும்" எனவும் இடம்பெற்றுள்ளது.
Book : 12
1805. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களைச் சேகரித்துவைத்திருக்கும் ஒருவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவற்றை நரக நெருப்பில் இட்டு, உருக்கி, உலோகப்பாளங்களாக மாற்றி,அவருடைய விலாப்புறங்களிலும், நெற்றியிலும் சூடு போடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.
ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின், (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அவ்வொட்டகங்கள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறிக் குதித்தோடும். அவ்வொட்டகங்களில் கடைசி ஒட்டகம் அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் தாம் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்.
ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையாயின் (மறுமை நாளில்) அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஆடுகள் முன்பிருந்ததைவிட மிகவும் கொழுத்தவையாக மாறி, அவர்மீது ஏறி,குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புகளால் அவரை முட்டும். அவற்றில் கொம்புகள் வளைந்தவையும் இருக்காது;கொம்புகளற்றவையும் இருக்காது. அவற்றில் இறுதி ஆடு அவரைத் தாக்கிவிட்டுச் சென்றதும் மீண்டும் முதலாவது ஆடு அவர்மீது ஏவிவிடப்படும். இறுதியில் அல்லாஹ் தன் அடியார்களிடையே ஒரு நாளில் -அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணிக் கணக்கிடும் நாட்களில் ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்- தீர்ப்பளிப்பான். பிறகு அவர் செல்லவேண்டிய சொர்க்கத்தின் பாதையை,அல்லது நரகத்தின் பாதையைக் காண்பார்
-இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த என் தந்தை அபூஸாலிஹ்-ரஹ்) அவர்கள் மாட்டைப் பற்றிக் குறிப்பிட்டார்களா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.-
அப்போது மக்கள் "குதிரைகள் (நிலை என்ன) அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குதிரைகளின் பிடரிகளில் மறுமை நாள்வரை நன்மைகள் பிணைக்கப்பட்டுள்ளன. குதிரை மூன்று வகையாகும்:
அது ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும். இன்னொரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்.
குதிரை நற்பலனைப் பெற்றுத் தரக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இறைவழியில் பயன்படுத்துவதற்காக முன்னேற்பாடாக அதை வைத்திருப்பவர் ஆவார். அதன் வயிற்றுக்குள் எந்தத் தீவணம் சென்றாலும் அதற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை எழுதாமல் இருப்பதில்லை. அதை அவர் ஒரு பசும்புல் வெளியில் மேயவிட்டால், அது எந்த ஒன்றைத் தின்றாலும் அதற்காக அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மையை எழுதாமலிருப்ப தில்லை. ஓர் ஆற்றிலிருந்து அதற்கு அவர் நீர் புகட்டினால், அதன் வயிற்றினுள் செல்லும் ஒவ்வொரு துளி நீருக்காகவும் அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். (அதன் சிறுநீர், சாணம் ஆகியவற்றுக்காகக்கூட அவருக்கு நன்மைகள் எழுதப்படும் என்றும் குறிப்பிட்டார்கள்.) அது ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அது எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் அவருக்கு ஒரு நன்மை உண்டு.
குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அதை அந்தஸ்திற்காகவும் அலங்காரத்திற்காகவும் வைத்திருப்பவர் ஆவார். ஆயினும், இன்பத்திலும் துன்பத்திலும் (அதனால் தாங்க இயலும் சுமையை மட்டுமே சுமத்துவதிலும், அதன் பசியைத் தணிப்பதிலும்) அதன் முதுகு மற்றும் வயிற்றின் உரிமையை அவர் மறக்காதவர் ஆவார்.
குதிரை பாவச்சுமையாக மாறும் மனிதன் யாரெனில், கர்வம், செருக்கு, அகம்பாவம், மக்களிடம் காட்டிக்கொள்ளல் ஆகிய (குறுகிய) நோக்கங்களுக்காக அதை வைத்திருக்கும் மனிதன் ஆவான். அவனுக்கே அது பாவச்சுமையாகும்" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே, கழுதையின் நிலை என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; "எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்" எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர" என்று சொன்னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "கொம்புகள் வளைந்தவை" (அக்ஸா) என்பதற்கு பதிலாக "காது கிழிக்கப்பட்டவை" (அள்பா) என்று இடம்பெற்றுள்ளது.
மேலும் "அவருடைய விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும்" என்று இடம் பெற்றுள்ளது. "அவருடைய நெற்றியிலும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் தம் ஒட்டகங்களில் "இறைவனுக்குரிய உரிமையை" அல்லது "தர்மத்தை" நிறவேற்றாவிடில்" என ஹதீஸ் தொடங்குகிறது.
Book : 12
1806. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை, முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த ஒட்டகங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும்.
மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால்களால் மிதிக்கும். அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால், அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்வார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும்; கால்குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது.
(பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களை உடையவர் அவற்றுக்கான கடமைகளைச் செய்யாமலிருந்தால், அவருடைய செல்வங்கள் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறி, தனது வாயைத் திறந்தநிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்ததும் அவர் அங்கிருந்து வெருண்டோடுவார். அப்போது "நீ சேமித்துவைத்த உனது கருவூலத்தை நீயே எடுத்துக்கொள். அது எனக்கு வேண்டாம்" என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் அறியும் போது, தமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இந்த ஹதீஸை உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன். பிறகு ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, அவர்களும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றே அறிவித்தார்கள்.
உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களுக்குரிய கடமை என்ன?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாக வழங்குவதும், பொலி ஒட்டகங்களை இரவல் தருவதும், அ(தன் பால், உரோமம் ஆகிய)வற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவற்றை அன்பளிப்பாக வழங்குவதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 12
1807. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் உட்காரவைக்கப்படுவார். அப்போது கால்குளம்புகள் உடையவை தம் கால்குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புடையவை தமது கொம்பால் அவரை முட்டித் தள்ளும். அன்றைய தினம் அவற்றுக்கிடையே கொம்புகளற்றவையும் இருக்காது; கொம்புகள் முறிந்தவையும் இராது" என்று கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவற்றுக்குரிய கடமைகள் என்ன?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "பொலி ஒட்டகங்களை இரவலாக வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாகக் கொடுப்பதும், அவற்றிலிருந்து பால் கறந்துகொள்வதற்கு(ம் உரோமத்தை எடுத்துக்கொள்வதற்கும்) அனபளிப்பாக வழங்குவதும், தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றிலிருந்து பால் கறந்து ஏழைகளுக்கு அளிப்பதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்" என்று கூறினார்கள்.
மேலும், "(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி தம்மவரை எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது "இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து)வந்த உனது செல்வம்" என்று கூறப்படும். அவர் அதனிடமிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க்குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும்.
Book : 12
பாடம் : 7 ஸகாத் வசூலிப்பவர்களிடம் பொருத்தமாக நடந்துகொள்ளல்.
1808. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில கிராமவாசிகள் வந்து, "எங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களில் சிலர் எங்களிடம் வரம்புமீறி நடந்துகொள்கிறார்கள்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களிடம் ஸகாத் வசூலிக்க வருபவர்களை (அவர்களது கடமையைச் செய்ய ஒத்துழைத்து) திருப்தியடையச் செய்யுங்கள்" என்று (மக்களிடம்) கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டதுமுதல், என்னிடம் ஸகாத் வசூலிக்க வந்த எவரும் என்னைக் குறித்து திருப்தி கொள்ளாமல் திரும்பிச் சென்றதில்லை.
- ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 12
பாடம் : 8 ஸகாத் வழங்காதவருக்குக் கிடைக்கும் கடுமையான தண்டனை.
1809. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்டதும் "கஅபாவின் அதிபதிமீது ஆணையாக! அவர்கள் நஷ்டவாளிகள்" என்று கூறினார்கள். நான் சென்று (அவர்கள் அருகில்) அமர்ந்தேன். என்னால் இருப்புக்கொள்ள முடியாததால் உடனே எழுந்து, "என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர்கள் அதிகமான செல்வம் படைத்தவர்கள். ஆனால், (நல்வழியில் செல்வத்தை ஈந்த) சிலரைத் தவிர" என்று கூறியபடி இவ்வாறு இவ்வாறு இவ்வாறு என்று (தம் முன் பக்கம், பின் பக்கம், வலப் பக்கம், இடப் பக்கம்) சைகை செய்து (நல்வழிகள் பல உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி)விட்டு, "ஆனால், அவர்கள் மிகக் குறைவானவர்களே. ஒருவருக்கு ஒட்டகமோ மாடோ ஆடோ இருந்து அவற்றுக்கான ஸகாத்தை அவர் நிறைவேற்றவில்லையாயின், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெரியனவாகவும் கொழுத்தவையாகவும் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால் குளம்புகளால் மிதிக்கும். அவரை இறுதிப் பிராணி மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் பிராணி அவரை மிதிக்கவரும். இந்நிலை மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீடிக்கும்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நபி (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் அமர்ந்திருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன்" என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
ஆயினும் அதில், "எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு மனிதர் ஒட்டகத்தையோ மாட்டையோ ஆட்டையோ அவற்றுக்குரிய ஸகாத்தை வழங்காத நிலையில் விட்டுவிட்டு இறந்துவிடுவாராயின்" என்று இடம்பெற்றுள்ளது.
Book : 12
1810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 12
பாடம் : 9 தர்மம் செய்யுமாறு வந்துள்ள ஆர்வமூட்டல்.
1811. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) "ஹர்ரா"ப் பகுதியில் (எதிரிலிருந்த) உஹுத் மலையைப் பார்த்தவாறே நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூதர்ரே!" என்று என்னை அழைத்தார்கள். நான் "இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். நபி (ஸல்) அவர்கள் "இந்த உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயோரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள்கூட கழிந்து செல்வதை நான் விரும்பவில்லை. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் பொற்காசைத் தவிர" என்று கூறி, வாரி இறைப்பதைப் போன்று தமது முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் சைகை செய்தார்கள்.
பிறகு (சிறிது தூரம்) நாங்கள் நடந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அபூதர்ரே!" என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான் "இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். நபி ஸல்) அவர்கள் "(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்" என்று கூறிவிட்டு, முன்பு செய்ததைப் போன்றே செய்து, "இப்படி இப்படி இப்படி (நல்வழியில்) செலவு செய்தவர்கள் தவிர" என்று கூறினார்கள்.
பிறகு (இன்னும் சிறிது தூரம்) நாங்கள் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "அபூதர்! நான் வரும்வரை இங்கேயே இருங்கள்!" என்று கூறிவிட்டு (இருளுக்குள் நடந்து) என்னை விட்டும் மறைந்துவிட்டார்கள். அப்போது ஏதோ மர்மமான உரத்த சப்தம் ஒன்றை நான் கேட்டு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதோ ஏற்பட்டுவிட்டது போலும்" என்று கூறிக்கொண்டு, அவர்களைப் பின்தொடர எண்ணினேன். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் "நான் வரும்வரை இங்கேயே இருங்கள்" என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர்கள் வந்ததும் நான் கேட்ட சப்தத்தைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் "அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் யார் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்" என்றார். நான் (ஜிப்ரீலிடம்) "அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?" என்று கேட்டேன். அவர் "(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (இறுதியில் அவர் சொர்க்கம் செல்வார்)" என்று பதிலளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 12
1812. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவு நேரத்தில் வெளியில் புறப்பட்டுச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்; அவர்களுடன் எந்த மனிதரும் இருக்க வில்லை. அவர்கள் தம்முடன் யாரும் வருவதை விரும்பவில்லை என்று நான் எண்ணிக் கொண்டேன். நிலா வெளிச்சம்படாத இடத்தில் நான் (அவர்களுக்குப் பின்னால்) நடக்கலானேன். அவர்கள் திரும்பி என்னைப் பார்த்துவிட்டு, "யார் இது?" என்று கேட்டார்கள். "(நான்) அபூதர், அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்" என்று பதிலளித்தேன். அவர்கள் "அபூதர்ரே, இங்கே வாருங்கள்" என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள், "(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர் ஆவர். அல்லாஹ் தந்த நல்லதை (செல்வத்தை) அள்ளித் தமது வலப்பக்கமும் இடப்பக்கமும் முன்பக்கமும் பின்பக்கமும் வாரி இறைத்து, நன்மை புரிந்தவரைத் தவிர" என்று கூறினார்கள். பிறகு இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் "இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்" என்று கூறினார்கள். பாறைகள் சூழ்ந்த ஒரு வெட்டவெளியில் "நான் திரும்பி வரும்வரையில் இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்" என்று கூறி என்னை உட்கார வைத்தார்கள். பின்னர் (பாறைகள் நிறைந்த அந்த) "ஹர்ரா"ப் பகுதியில் நடந்து சென்றார்கள்.
அவர்களை நான் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்று நீண்ட நேரம் இருந்துவிட்டு, என்னை நோக்கி வந்தார்கள். அப்போது "அவன் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலும் சரியே!" என்று கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். அவர்கள் (என் அருகில்) வந்ததும் என்னால் பொறுமையுடன் இருக்க முடியாமல், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! "ஹர்ரா"ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?" என்று கேட்டேன். அதற்கு "அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து "யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்" என்றார். உடனே நான் "ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளித்தார். நான் "அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் "ஆம்" என்றார். நான் "அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் "ஆம்;அவர் மது அருந்தினாலும் சரியே!" என்று கூறினார் என்றார்கள்.
Book : 12
பாடம் : 10 செல்வத்தைக் குவித்து வைத்(துக்கொண்டு அதற்கான கடமையை நிறைவேற்றா) தோர் குறித்து வந்துள்ள கண்டனம்.
1813. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவிற்குச் சென்றேன். அங்கு ஓர் அவையில் பங்கேற்றேன். அந்த அவையில் குறைஷிப் பிரமுகர்களும் இருந்தனர். அப்போது மிகவும் சொரசொரப்பான ஆடையும் முரட்டுத்தனமான தோற்றமும் முகமும் கொண்ட ஒரு மனிதர் (அங்கு) வந்து அவர்கள் முன் நின்று, "(ஸகாத் வழங்காமல்) செல்வத்தைக் குவித்து வைத்திருப்போருக்கு "நற்செய்தி" கூறுக: நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் அவருக்கு உண்டு. அந்தக் கல் அவர்களில் ஒருவரது மார்புக் காம்பின் மேல் வைக்கப்படும். உடனே அது அவரது தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அந்தக் கல் அவரது தோளின் மேற்பகுதியில் வைக்கப்படும். உடனே அது மார்புக்காம்பின் வழியாக ஊடுருவி வெளியேறும்" என்று கூறினார்.
(இதைக் கேட்டவுடன்) மக்கள் தங்கள் தலைகளைத் தாழ்த்திக்கொண்டனர். அவர்களில் ஒருவர்கூட அவருக்கு எந்தப் பதிலும் அளித்ததை நான் பார்க்கவில்லை.
பிறகு அந்த மனிதர் திரும்பிச்சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நான் சென்றேன். அவர் ஒரு தூணுக்கு அருகில் போய் உட்கார்ந்தார். அப்போது அவரிடம் நான், "தாங்கள் கூறியதைக் கேட்டு இம்மக்கள் வெறுப்படைந்ததையே நான் கண்டேன்" என்றேன். அதற்கு அவர், "இவர்கள் விவரமற்ற மக்கள். என் உற்ற தோழர் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னை அழைத்தார்கள். நான் அவர்களது அழைப்பிற்குப் பதிலளித்தேன். அப்போது அவர்கள் "உஹுத் மலையை நீர் பார்க்கிறீரா?" என்று கேட்டார்கள். தமது தேவை ஒன்றுக்காக அவர்கள் என்னை அங்கு அனுப்பப்போகிறார்கள் என எண்ணியவாறு (நேரத்தை அறிந்துகொள்ள) எனக்கு மேலே உள்ள சூரியனைப் பார்த்து விட்டு, "(ஆம்; உஹுத் மலையைப்) பார்க்கிறேன்" என்றேன். அப்போது "இந்த (உஹுத் மலை) அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும், அதில் அனைத்தையும் ஈந்து மகிழவே நான் விரும்புவேன். (அதில் எதையும் சேகரித்து வைக்கமாட்டேன். என் கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும்) மூன்று பொற்காசுகளைத் தவிர" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இந்த மக்களோ எதையுமே அறியாதவர்களாய் உலக ஆதாயங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.
நான், "உங்களுக்கும் உங்களுடைய குறைஷி சகோதர்களுக்கும் என்ன ஆயிற்று? நீங்கள் அவர்களை அணுகி அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லையே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "உம்முடைய இறைவன் மீதாணையாக! நான் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் சந்திக்கும்வரை இவர்களிடம் இவ்வுலகப் பொருட்கள் எதையும் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றிய எந்தத் தீர்ப்பையும் கோரவுமாட்டேன்" என்று கூறினார்.
Book : 12
1814. அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் குறைஷிக் குலத்தார் சிலருடன் (ஓர் அவையில்) இருந்தேன். அப்போது அவ்வழியாகச் சென்ற அபூதர் (ரலி) அவர்கள் "(ஸகாத் கொடுக்காமல்) செல்வத்தைக் குவித்து வைப்பவர்களுக்கு (பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியால்) அவர்களது முதுகில் சூடு போடப்படும். அது அவர்களது விலாவிலிருந்து வெளியேறும். அவர்களது பிடரிப் பகுதியில் ஒரு சூடு போடப்படும். அது அவர்களின் நெற்றியிலிருந்து வெளியேறும் என நற்செய்தி கூறுங்கள்" என்று கூறிவிட்டு, அங்கிருந்து விலகிப்போய் (ஓரிடத்தில்) அமர்ந்தார்கள். நான் "இவர் யார்?" என்று கேட்டேன். மக்கள் "இவர்தாம் அபூதர் (ரலி)" என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்று, "சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக் கொண்டிருந்தீர்களே அது என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியையே நான் கூறினேன்" என்றார்கள். நான், "(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும்) இந்த நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள், "அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், இன்று அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அது உங்களது மார்க்கத்திற்கான கூலியாக இருக்குமாயின், அதை விட்டுவிடுங்கள் (பெற்றுக்கொள்ளாதீர்கள்)" என்று பதிலளித்தார்கள்.
Book : 12
பாடம் : 11 தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும், தர்மம் செய்பவருக்கு (சிறந்த) பிரதிபலன் உண்டு என்ற நற்செய்தியும்.
1815. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், "ஆதமின் மகனே (மனிதா)! நீ (பிறருக்கு) ஈந்திடு. உனக்கு நான் ஈவேன்" என்று சொன்னான்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது; இரவிலும் பகலிலும் அது வாரி வழங்குகிறது. அதை எதுவும் குறைத்துவிடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 12
1816. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின் வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் அல்லாஹ், "நீர் (பிறருக்கு ஈந்திடுக. நான் உமக்கு ஈவேன்" என்று சொன்னான்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது. அது இரவிலும் பகலிலும் வாரி வழங்கிக் கொண்டேயிருக்கிறது. எதுவும் அதைக் குறைத்துவிடவில்லை. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் வழங்கியது எதுவும் அவனது வலக்கரத்திலுள்ள (செல்வத்)தை குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா? (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியாசனம் நீரின் மீ(து அமைந்)திருந்தது. அவனது மற்றொரு கரத்தில் மரணம் (உள்ளிட்ட தலைவிதியின் தராசு) உள்ளது. அவனே உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான்.
Book : 12
பாடம் : 12 குடும்பத்தார், அடிமைகள் (பணியாட்கள்) ஆகியோருக்குச் செலவழிப்பதன் சிறப்பும் அவர்களை (ஆதரிக்காமல்) வீணாக்கிவிடுபவன், அல்லது அவர்களுக்கு வழங்க வேண்டிய வாழ்க்கைப்படியை வழங்க மறுப்பவன் அடையும் பாவமும்.
1817. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் குடும்பத்தாருக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும் (தீனார்), அல்லாஹ்வின் பாதையில் தமது வாகனத்திற்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசும், அல்லாஹ்வின் பாதையில் தம் நண்பர்களுக்காகச் செலவிடுகின்ற ஒரு பொற்காசுமே அவர் செலவிடுகின்ற பொற்காசுகளிலேயே சிறந்ததாகும்.
இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ கிலாபா (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தாருக்குச் செலவிடுவதையே ஆரம்பமாகக் கூறினார்கள்" என்று கூறிவிட்டு, "தம் சின்னஞ்சிறிய பிள்ளைகளுக்குச் செலவிடுகின்றவரைவிட அதிக நற்பலன் அடைந்துகொள்ளும் மனிதர் யார்? (ஏனெனில்) அவர்தம் பிள்ளைகளைச் சுய மரியாதையோடு வாழச்செய்கிறார். அல்லது அவர் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி, அவர்களைத் தன்னிறைவுடன் வாழச்செய்கிறான்" என்றும் கூறினார்கள்.
Book : 12
1818. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடுதலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு - இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே அதிக நற்பலனை உடையதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 12
1819. கைஸமா பின் அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக்காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் "அடிமைகளுக்கு உணவு கொடுத்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். அவர், "இல்லை" என்றார். "உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடு" என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
Book : 12