1840. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில்,அந்நாளில் பொருளின் உரிமையாளருக்கு, அவரிடமிருந்து தர்மத்தைப் பெற்றுக்கொள்பவர் குறித்த கவலை ஏற்படும். தர்மத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஒருவர் அழைக்கப்படுவார். ஆனால், அவரோ "இது எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிடுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 12
1841. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமி தனது வயிற்றிலுள்ள புதையல்களான தங்கக் கட்டி, வெள்ளிக் கட்டி ஆகியவற்றைத் தூண்களைப் போன்று வாந்தியெடுக்கும். அப்போது கொலை செய்தவன் வந்து, "இதற்காகவே நான் கொலை செய்தேன்" என்று கூறுவான். உறவுகளை அரவணைக்காதவன் வந்து, "இதற்காகவே நான் என் இரத்த உறவுகளைத் துண்டித்தேன்" என்று கூறுவான். திருடன் வந்து, "இதற்காகவே எனது கரம் துண்டிக்கப்பட்டது" என்று கூறுவான். பிறகு அதை (அப்படியே) விட்டுவிடுவார்கள்; அதிலிருந்து எதையும் எடுக்கமாட்டார்கள் (அந்த அளவிற்கு அவர்கள் ஏற்கெனவே வசதியுடனிருப்பார்கள்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 12
பாடம் : 19 முறையான சம்பாத்தியத்திலிருந்து செய்யும் தர்மம் (இறைவனிடம்) ஏற்கப் படுவதும் அது வளர்ச்சியடைவதும்.
1842. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தூய்மையானதை மட்டுமே ஏற்பான். யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் "தமது குதிரைக் குட்டியை" அல்லது "தமது ஒட்டகக் குட்டியை" வளர்ப்பதைப் போன்று.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 12
1843. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்திலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தைத் தர்மம் செய்தாரோ அதை அல்லாஹ் தனது கரத்தால் வாங்கி, உங்களில் ஒருவர் "தமது குதிரைக் குட்டியை" அல்லது "தமது ஒட்டகக் குட்டியை" வளர்ப்பதைப் போன்று வளர்ச்சியடையச் செய்கிறான். இறுதியில் அது மலையைப் போன்று, அல்லது அதைவிட மிகப்பெரியதாக மாறிவிடுகின்றது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ரவ்ஹ் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முறையான சம்பாத்தியத்திலிருந்து அவர் உரிய முறையில் தர்மம் செய்தால்" என்று இடம்பெற்றுள்ளது.
சுலைமான் பின் பிலால் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் உரிய இடங்களில் (தர்மம் செய்தால்)" என்று காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 12
1844. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்: தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). "நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். "அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவா, என் இறைவா" என்று பிரார்த்திக்கிறார். ஆனால்,அவர் உண்ணும் உணவு தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடைசெய்யப்பட்டதாக இருக்கிறது; தடைசெய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?" என்று கூறினார்கள்.
Book : 12
பாடம் : 20 பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும், அல்லது (இன்)சொல்லையேனும் தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டலும் அது நரக நெருப்பிலிருந்து காக்கும் திரையாக அமையும் என்பதும்.
1845. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரக நெருப்பிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள இயன்றவராக இருக்கிறாரோ அவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்!
இதை அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 12
1846. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் தமது வலப்பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கெனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கு அவர் காணமாட்டார். பின்னர் அவர் தமது இடப்பக்கம் பார்ப்பார். தாம் ஏற்கெனவே செய்த(பாவத்)தைத் தவிர வேறெதையும் அங்கும் அவர் காணமாட்டார். மேலும், அவர் தமக்கு முன்னால் பார்ப்பார். தமது முகத்துக்கெதிரே நரக நெருப்பையே அவர் காண்பார். ஆகவே, முடிந்தால் பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
இதை அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்)" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
Book : 12
1847. அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பின்னர் "நரகத்திலிருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். பிறகு (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தை (மீண்டும்) திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்கள் போலும் என்று நாங்கள் எண்ணினோம். பின்னர் "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "(பார்க்கிறார்கள்) போலும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. ("அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணினோம்" என்றே இடம்பெற்றுள்ளது.)
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். மேலும், (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இவ்வாறு மூன்றுமுறை செய்தார்கள். பின்னர் "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (நரகத்திலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளட்டும்)" என்று கூறினார்கள்.
Book : 12
1848. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த "கம்பளி ஆடை" அல்லது "நீளங்கி" அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் "முளர்"குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே "முளர்" குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது "மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள்" எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், "அல்ஹஷ்ர்" அத்தியாயத்திலுள்ள "நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது "(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு "ஸாஉ" கோதுமை, ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்" என்று கூறி, "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்" என்று வலியுறுத்தினார்கள்.
உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு "ஸாஉ" கோதுமையிலிருந்தும் ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது;ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "(ஒரு நாள்) முற்பகல் நேரத்தில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம்"என்றே ஹதீஸ் தொடங்குகிறது.
உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகை தொழுவித்துவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள்" என்று சற்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
Book : 12
1849. மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் வட்டமாய் கிழிந்த கம்பளிஆடை அணிந்த ஒரு கூட்டத்தார் வந்தார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
மேலும் இவ்வறிவிப்புகளில் பின்வரும் தகவல்களும் இடம்பெற்றுள்ளன:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுவித்தார்கள். பிறகு சிறிய சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது ஏறி அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்னர் "அம்மா பஅத்" ("இறை வாழ்த்துக்குப் பின்...) என்று கூறிவிட்டு, "அல்லாஹ் தனது வேதத்தில் "மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள்..." (4:1)என்று கூறியுள்ளான்" என்றார்கள்.
Book : 12
1850. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "கிராமவாசிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்மீது கம்பளியாடைகள் காணப்பட்டன. அவர்களது வறிய நிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டிருந்தது..." என்று ஜரீர் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
Book : 12
பாடம் : 21 தர்மம் செய்வதற்காகக் கூலிக்குச் சுமை தூக்குவதும், சிறிதளவு தர்மம் செய்தவ(ராயினும் அவ)ரைக் குறைகூறுவது குறித்து வந்துள்ள கடுமையான தடையுத்தரவும்.
1851. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, நாங்கள் (சுமைதூக்கி) கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) அரை "ஸாஉ" பேரீச்சம் பழம் (கொண்டு வந்து) தர்மம் செய்தார். மற்றொரு மனிதர் அதைவிடச் சிறிது அதிகமாகக் கொண்டுவந்(து தர்மம் செய்)தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை "ஸாஉ" கொண்டுவந்த) இவரது தர்மமெல்லாம் அல்லாஹ்விற்குத் தேவையில்லை; (அதைவிட அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே (தர்மம்) செய்தார்" என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான் "(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்கள் என்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின்றார்கள். (இறைவழியில் ஈவதற்காகச்) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும்,அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு" எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் பிஷ்ர் பின் காலித் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் "மனமுவந்து வாரி வழங்குவோர்" எனும் சொல்லைக் குறிப்பிடவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சயீத் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாங்கள் எங்களுடைய முதுகுகளில் (சுமை)தூக்கி கூலிவேலை செய்யலானோம்" என்று (அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
Book : 12
பாடம் : 22 பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு.
1852. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் மாலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் தருகின்ற ஓர் ஒட்டகத்தை ஒரு வீட்டாருக்கு இரவலாகத் தரக்கூடிய மனிதர் எவரேனும் (உங்களில்) உண்டா? இதற்குரிய நற்பலன் நிச்சயமாக மிகப் பெரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 12
1853. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல விஷயங்களுக்குத் தடைவிதித்தார்கள். மேலும், அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
ஒருவர் ஒரு கால்நடையை (பால் கறந்து கொள்வதற்காக) இரவலாக வழங்கினால், அது காலையில் ஒரு தர்மத்தின் நன்மையையும், மாலையில் ஒரு தர்மத்தின் நன்மையையும் பெற்றுத்தருவதாக அமையும்; காலையில் கறக்கப்பட்ட பாலுக்காகவும் மாலையில் கறக்கப்பட்ட பாலுக்காகவும் (இந்த நன்மைகள் கிடைக்கும்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 12
பாடம் : 23 (தாராள மனத்துடன்) செலவு செய்கின்றவருக்கும் கஞ்சனுக்கும் உள்ள உதாரணம்.
1854. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கஞ்சனின் நிலையோடு ஒப்பிடுகையில் தாராள மனத்துடன்)செலவு செய்கின்ற தர்மசீலரின் நிலையானது, மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை (இரும்பாலான) "இரு நீளங்கிகள்" அல்லது "இரு கவசஆடைகள்" அணிந்துள்ள (இரு) மனிதரின் நிலையைப் போன்றதாகும். "(தாராள மனத்துடன்) செலவு செய்கின்றவர்" அல்லது "தர்மம் செய்கின்றவர்" தர்மம் செய்ய எண்ணும் போது அவரது கவசம் "விரிவடைந்து" அல்லது "(நீண்டு) சென்று" அவரது விரல் நுனிகளை மறைத்து (அதற்கப்பால்) அவரது பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்து விடுகிறது. (ஆனால்,) கஞ்சன் செலவு செய்ய எண்ணும்போது அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுகப்) பிடித்துவிடுகிறது. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஞ்சனுக்கும் தர்மம் செய்கின்றவனுக்கும் பின்வருமாறு உதாரணம் கூறினார்கள்: அவ்விருவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்துள்ள இரு மனிதர்களின் நிலையை ஒத்திருக்கிறது. அவர்களின் கைகள் அவர்களுடைய மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்கின்றவர் ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது கவசம் விரிந்து, அவரது விரல்நுனிகளை மறைத்து, பாதச்சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழிக்கத் தொடங்குகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கிப்) பிடிக்கத் துவங்குகிறது. அவன் தனது கவசத்தை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்புத்தான் ஏற்படும்; ஏனெனில்,) அது விரியாது.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இதைக் கூறியபோது) அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி), (இவ்வாறு) சுட்டிக் காட்டினார்கள்.
Book : 12
1855. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஞ்சன் மற்றும் தர்மம் செய்கின்றவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்த இரு மனிதர்களின் நிலைக்கு ஒத்திருக்கிறது. தர்மம் செய்பவர் ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவரது கவசம் விரிவடைந்து, அவரது பாதச்சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவனது கவசம் அவனை அழுத்தி, அவனுடைய கைகள் கழுத்தெலும்புவரை சென்று ஒட்டிக்கொள்கின்றன. கவசத்தின் ஒவ்வொரு வளையமும் மற்றதன் இடத்தை இறுக்கிப் பிடிக்கிறது. அதை விரிவுபடுத்த அவன் முனைவான். ஆனால், அவனால் இயலாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 12
பாடம் : 24 தர்மம் செய்தவருக்கு நிச்சயம் நற்பலன் உண்டு; உரியவரின் கைக்கு தர்மம் போய்ச் சேராவிட்டாலும் சரியே!
1856. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒருவர் "நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்" எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், "இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார்.
மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், "ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக்கேட்ட) அவர், "இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார்.
(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப் பட்டுள்ளது" என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், "இறைவா! விபச்சாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது" எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது: உமது தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 12
பாடம் : 25 நேர்மையான ஒரு காசாளர் தம் முதலாளியின், அல்லது ஒரு மனைவி தன் கணவனின் நேரடியான அனுமதியின் பேரில்,அல்லது அவரது அனுமதியை குறிப்பால் அறிந்து வீட்டிலுள்ள (பொருளிலிருந்து) எதையும் வீணாக்காமல் தர்மம் செய்தால் அந்தக் காசாளருக்கும் அந்த மனைவிக்கும்கூட நன்மை கிடைக்கும்.
1857. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அந்தக் காரியத்திற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவராவார். அவர் முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் அக்காரியத்திற்கு வழங்குகிறார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 12
1858. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை முறையோடு தர்மம் செய்தால், (அறவழியில்) செலவழித்தற்காக அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. இவர்களில் யாரும் யாருடைய நற்பலனிலும் சிறிதும் குறைத்துவிடமாட்டார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("தனது வீட்டிலுள்ள உணவை" என்பதற்குப் பதிலாக) "அவளுடைய கணவனின் உணவிலிருந்து" என்று இடம்பெற்றுள்ளது.
Book : 12
1859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவனின் வீட்டிலுள்ளவற்றை முறையோடு (அறவழியில்) செலவழித்தால் அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. அவர்களுடைய நற்பலன்களில் சிறிதும் குறைந்துவிடாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 12