பாடம் : 15 (மூவர் உள்ள இடத்தில் அவர்களில்) ஒருவரை விட்டுவிட்டு, அவரது சம்மதமின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசுவது தடை செய்யப்பட்டதாகும்.
4399. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவர் இருக்கும்போது ஒருவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
4400. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்;நீங்கள் (மூவரும்) மக்களுடன் கலக்கும்வரை. (அவ்வாறு மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் பேசுவது) அ(ந்த மூன்றாம)வரை வருத்தமடையச் செய்யும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4401. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது உங்கள் நண்ப(ர் ஒருவ)ரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். அ(வ்வாறு பேசுவ)து அவரை வருத்தமடையச் செய்யும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
பாடம் : 16 மருத்துவமும் நோயும் ஓதிப்பார்த்தலும்.
4402. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், "பிஸ்மில்லாஹி யுப்ரீக்க, வ மின் குல்லி தாயின் யஷ்ஃபீக்க, வ மின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத, வ ஷர்ரி குல்லி தீ அய்னின்" என்று ஓதிப்பார்ப்பார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு குணமளிப்பானாக! அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக!).
Book : 39
4403. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்(கள் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்)களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "முஹம்மதே! உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். அப்போது, "பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க" என்று ஓதிப்பார்த்தார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப்பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன்.)
Book : 39
4404. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின் வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணேறு உண்மையாகும்.
Book : 39
4405. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக்கொள்ளுங்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
பாடம் : 17 சூனியம்.
4406. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அல்அஃஸம் எனப்படும் யூதன் ஒருவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்துவிட்டான். இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் அல்லது ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள்.
பிறகு கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர்.
என் தலைமாட்டில் இருந்தவர் என் கால்மாட்டில் இருந்தவரிடம், அல்லது கால்மாட்டில் இருந்தவர் என் தலைமாட்டில் இருந்தவரிடம் "இந்த மனிதருக்கு என்ன நோய்?" என்று கேட்டார். மற்றவர், "சூனியம் செய்யப்பட்டுள்ளார்" என்று சொன்னார். அதற்கு அவர், "யார் அவருக்குச் சூனியம் வைத்தார்?" என்று கேட்டார். மற்றவர், "லபீத் பின் அல்அஃஸம்" என்று பதிலளித்தார். அவர், "எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?" என்று கேட்க, மற்றவர், "சீப்பிலும் சிக்கு முடியிலும்" என்று பதிலளித்தார். மேலும், ஆண் பேரீச்சம்பாளையின் உறையில் என்றும் கூறினார்.
அவர், "எங்கே அ(ந்தச் சூனியம் வைக்கப்பட்டுள்ள)து?" என்று கேட்க, மற்றவர், "தூ அர்வான்" குலத்தாரின் கிணற்றி(லுள்ள கல் ஒன்றின் அடியி)ல் என்று பதிலளித்தார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அங்கு சென்றார்கள்.
பிறகு (என்னிடம்), "ஆயிஷா! அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தன" என்று சொன்னார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே? அதைத் தாங்கள் (வெளியில் எடுத்துக்காட்டி) எரித்திருக்கக் கூடாதா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "இல்லை; அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். மக்களிடையே தீமையைப் பரப்ப நான் விரும்பவில்லை. எனவே, அதை நான் புதைத்துவிடும் படி கட்டளையிட்டுவிட்டேன். அவ்வாறே புதைக்கப்பட்டுவிட்டது" என்று பதிலளித்தார்கள்.
Book : 39
4407. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று அந்தக் கிணற்றைப் பார்த்தார்கள். கிணற்றருகில் பேரீச்ச மரங்கள் இருந்தன" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் நான், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கட்டைத் தாங்கள் பிரித்துக் காட்டுங்கள்" எனக் கேட்டேன் என்றே காணப்படுகிறது. "அதைத் தாங்கள் எரித்திருக்கக் கூடாதா?" என்று கேட்டதாகவோ, "அதை நான் புதைத்துவிடும்படி கட்டளையிட்டேன். அவ்வாறே அது புதைக்கப்பட்டு விட்டது" என்று கூறியதாகவோ இடம்பெறவில்லை.
Book : 39
பாடம் : 18 விஷம்.
4408. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதப் பெண் ஒருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டுவந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். பிறகு அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தர்கள்.
அப்போது அவள், "நான் உங்களைக் கொல்ல விரும்பினேன்" என்றாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்க வில்லை" என்று கூறினார்கள். மக்கள், "அவளை நாங்கள் கொன்றுவிடலாமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யூதப் பெண் ஒருத்தி இறைச்சியில் விஷத்தை வைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தாள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
Book : 39
பாடம் : 19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத்தக்கதாகும்.
4409. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒரு மனிதர் நோய்வாய்ப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு, "அத்ஹிபில் பாஸ ரப்பந் நாஸ். வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்" (மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை) என்று பிரார்த்திப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது உடல் கனத்து விட்டபோது, அவர்கள் செய்துவந்ததைப் போன்றே செய்வதற்காக அவர்களது கையை நான் பிடித்தேன். உடனே அவர்கள் எனது கையிலிருந்து தமது கையை உருவிக்கொண்டு விட்டுப் பிறகு, "இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக! மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக" என்று கூறினார்கள். நான் அவர்களை உற்றுப் பார்த்தபோது அவர்களது உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹுஷைம், ஷுஅபா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், (அவர்களது "வலக் கரத்தால்" தடவினார்கள் என்பதற்குப் பதிலாக) "அவர்கள் தமது கரத்தால் தடவினார்கள்" என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் தமது வலக் கரத்தால் தடவினார்கள்" என்று காணப்படுகிறது.
Book : 39
4410. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், "அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ். இஷ்ஃபிஹி. அன்த்ததஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்" என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)
Book : 39
4411. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயாளி ஒருவரிடம் சென்றால், "அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ், வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்" என்று அவருக்காகப் பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அதில் ("அன்த்தஷ் ஷாஃபீ" என்பதற்குப் பதிலாக) "வ அன்த்தஷ் ஷாஃபீ" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
4412. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ். பி யதிகஷ் ஷிஃபாஉ. லா காஷிஃப லஹு இல்லா அன்த்த" (மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்குவாயாக. உன் கரத்திலேயே நிவாரணம் உள்ளது. உன்னைத் தவிர நோயை நீக்குபவர் வேறெவரும் இல்லை) என்று ஓதிப்பார்ப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
பாடம் : 20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பதும் ஓதி ஊதுவதும்.
4413. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ("அல்முஅவ்விதாத்") ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள்மீது ஊதி அவர்களது கையாலேயே அவர்கள்மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4414. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ஓதித் தம்மீது ஊதிக்கொள்வார்கள். அவர்களது (இறப்புக்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல்மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள்ள வளத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் எந்த அறிவிப்பிலும் "அவர்களது கரத்திற்குள்ள வளத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே அவ்வாறு இடம்பெற்றுள்ளது.
யூனுஸ், ஸியாத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களைத் தமது கையில் ஓதி ஊதி, அதைத் தம்மீது தடவிக்கொள்வார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
Book : 39
பாடம் : 21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத்தக்கதாகும்.
4415. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஓதிப்பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு ஒவ்வொரு விஷக்கடிக்கும் ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
Book : 39
4416. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக்கடிக்கு (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்.
Book : 39
4417. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப் பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி, "அல்லாஹ்வின் பெயரால்! எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("குணப்படுத்தும்" என்பதைக் குறிக்க) "யுஷ்ஃபா" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "லி யுஷ்ஃபா சகீமுனா" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
Book : 39
4418. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுக்காக ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39