4419. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுக்காக ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டுவந்தார்கள்.
Book : 39
4420. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஓதிப்பார்த்தல் குறித்துக் கூறியதாவது:
விஷக்கடி, சின்னம்மை, கண்ணேறு ஆகியவற்றுக்காக (ஓதிப்பார்ப்பதற்கு) அனுமதியளிக்கப் பட்டுள்ளது.
Book : 39
4421. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறு, விஷக்கடி, சின்னம்மை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4422. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த ஒரு சிறுமியின் முகத்தில் படர்தாமரை இருப்பதைப் பார்த்துவிட்டு, "இவளுக்குக் கண்ணேறுபட்டிருக்கிறது. எனவே, இவளுக்கு ஓதிப்பாருங்கள்" என்று சொன்னார்கள். அதாவது அவள் முகத்தில் மஞ்சள் நிறத்தில் படர்தாமரை இருப்பதைக் கண்டார்கள்.
Book : 39
4423. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்த்துக்கொள்ள "ஹஸ்ம்" குடும்பத்தாருக்கு அனுமதியளித்தார்கள். மேலும்,அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களிடம், "என் சகோதரர் (ஜஅஃபரின்) மக்களுடைய உடல்களை நான் மெலிந்திருக்கக் காண்கிறேனே ஏன்? அவர்கள் வறுமையில் வாடுகின்றனரா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், "இல்லை; கண்ணேறு அவர்களை வேகமாகப் பாதிக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக" என்று கூறினார்கள். நான் அவர்களிடம் (ஒரு துஆவை) எடுத்துரைத்தேன். நபி (ஸல்) அவர்கள் "(அதையே) அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக" என்று கூறினார்கள்.
Book : 39
4424. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்ப்பதற்கு "பனூ அம்ர்" குலத்தாருக்கு அனுமதியளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மேலும் ஜாபிர் (ரலி) அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது எங்களில் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஓதிப்பார்க்கட்டுமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடிந்தால் அவ்வாறே செய்யட்டும்" என்றார்கள் என்றும் கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மக்களில் ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா (அர்கீஹி)?" என்று கேட்டார்"என்று இடம்பெற்றுள்ளது. "நான் ஓதிப்பார்க்கட்டுமா (அர்கீ)" எனும் வாசகம் இல்லை.
Book : 39
4425. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாய் மாமன் ஒருவர் தேள்கடிக்காக ஓதிப்பார்த்துவந்தார். இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்ப்பதற்குத் தடை விதித்துவிட்டார்கள். எனவே, அவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை செய்தீர்கள். நான் தேள்கடிக்காக ஓதிப்பார்த்துவருகிறேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவரால் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடிந்தால் அவ்வாறே செய்யட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
4426. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அப்போது அம்ர் பின் ஹஸ்ம் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தேள்கடிக்காக ஓதிப்பார்க்கும் வழக்கம் எங்களிடம் இருந்தது. (ஆனால்,) தாங்களோ ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை விதித்துவிட்டீர்கள்!" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அ(வர்கள் ஓதிப்பார்த்துவ)ந்த வாசகத்தைக் கூறுமாறு கேட்டார்கள். அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் (இதில்) குறையெதையும் காணவில்லை. உங்களில் ஒருவரால் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடியுமானால் அவ்வாறே பயனளிக்கட்டும்!"என்று கூறினார்கள்.
Book : 39
பாடம் : 22 (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லாத வரை ஓதிப்பார்ப்பதில் குற்றமில்லை.
4427. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிக்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை" என்று கூறினார்கள்.
Book : 39
பாடம் : 23 குர்ஆன், அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்கள் ஆகியவற்றால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம்.
4428. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் ஒரு பயணத்தின் போது ஓர் அரபுக் குலத்தாரைக் கடந்துசென்றார்கள். அவர்கள் அக்குலத்தாரிடம் விருந்தளிக்குமாறு கோரியும் அவர்கள் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் (அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது). அப்போது அவர்கள் (நபித்தோழர்களிடம்) "உங்களிடையே ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா? ஏனெனில், (எங்கள்) குலத்தின் தலைவர் தேள்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்" என்று கூறினர்.
அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "ஆம்" என்று கூறிவிட்டு, அவரிடம் சென்று அவருக்கு "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தின் மூலம் ஓதிப்பார்த்தார். உடனே அவர் குணமடையவும் செய்தார். (ஓதிப்பார்த்த நபித்தோழருக்கு) ஓர் ஆட்டு மந்தை (சன்மானமாகக்) கொடுக்கப்பட்டது. அத்தோழர் அதை ஏற்க மறுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூ(றி அனுமதிபெ)றாத வரை (நான் ஏற்கமாட்டேன்)" என்று கூறிவிட்டார்.
அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார். "அல்லாஹவின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! "அல்ஃபாத்திஹா" மூலமாகத்தான் நான் ஓதிப்பார்த்தேன்" என்று கூறினார்.
அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். மேலும், "அது (அந்த அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தகுந்தது என்பது உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டுவிட்டு, "அவர்களிடமிருந்து அ(ந்தச் சன்மானத்)தைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடன் எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அந்த நபித்தோழர் "குர்ஆனின் அன்னை" எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஊதித் தமது எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அந்த மனிதர் வலி நீங்கி குணமடைந்தார்" என்று அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
Book : 39
4429. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஒரு பெண் எங்களிடம் வந்து, "எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. அவர் உடல் நலிவுற்றுள்ளார். ஓதிப் பார்ப்பவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறாரா?" என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒரு மனிதர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்துக்கூட ("நழுன்னுஹு") பார்த்ததில்லை. அவர் "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்க்க, அந்தத் தலைவர் குணமடைந்து விட்டார். ஆகவே, அவருக்குச் சில ஆடுகளை வழங்கியதோடு எங்களுக்குப் பருகுவதற்குப் பாலும் கொடுத்தனர்.
(அந்த நண்பர் திரும்பி வந்தபோது) அவரிடம், "உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?" என்று கேட்டோம். அவர், "அவருக்கு நான் "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தைத்தான் ஓதிப் பார்த்தேன்" என்று சொன்னார். அவரிடம் நான், "நபி (ஸல்) அவர்களிடம் செல்லும்வரை இதை அசைத்துவிடாதீர்கள்" என்று சொன்னேன்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அதைப் பற்றி அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள் "அது (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்; அதில் ஒரு பங்கை எனக்கும் ஒதுக்குங்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "அவளுடன் எங்களில் ஒரு மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததுகூட ("நஃபின்ஹு") இல்லை" என இடம் பெற்றுள்ளது.
Book : 39
பாடம் : 24 (நோய்க்காகப்) பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது விரும்பத்தக்கதாகும்.
4430. நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து, "பிஸ்மில்லாஹ்" என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு" என்று சொல்வீராக" என்றார்கள்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
பாடம் : 25 தொழுகையில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தக்கூடிய ஷைத்தானிடமிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரல்.
4431. அபுல்அலாஉ அல்ஆமிரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! (நான் தொழுது கொண்டிருக்கும்போது) எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன்தான் "கின்ஸப்" எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தபோது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்திவிட்டான்.
- மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் "மூன்று தடவை" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
பாடம் : 26 ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு என்பதும் மருத்துவ சிகிச்சை செய்துகொள்வது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
4432. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4433. ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் முகன்னஉ பின் சினான் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு "நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாத வரை நான் விடமாட்டேன். ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதில் நிவாரணம் உள்ளது" என்று சொல்வதை நான் கேட்டுள்ளேன்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4434. ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டாரிடம் வந்தார்கள். அப்போது (எங்கள் வீட்டில்) ஒருவருக்குக் கொப்புளம் அல்லது காயம் ஏற்பட்டிருந்தது. ஜாபிர் (ரலி) அவர்கள், "உமது உடம்புக்கு என்ன?" என்று கேட்டார்கள். அவர், "கொப்புளம் ஏற்பட்டு எனக்குக் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
உடனே அவர்கள், "இளைஞரே! குருதி உறிஞ்சி எடுப்பவரை அழைத்துவருவீராக" என்றார்கள். அதற்கு அவர், "அபூஅப்தில்லாஹ் அவர்களே! குருதி உறிஞ்சி எடுப்பவரை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் "குருதி உறிஞ்சும் கருவியை இ(ந்தக் கொப்புளத்)தில் பொருத்தப்போகிறேன்"என்றார்கள்.
அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! ஈக்கள் என்னைத் துன்புறுத்துகின்றன; அல்லது ஆடை அதில் பட்டு என்னை வேதனைப்படுத்துகிறது. அதுவே என்னைச் சிரமப்படுத்துகிறது. (இந்நிலையில் குருதி உறிஞ்சும் கருவியைப் பொருத்தினால் என்னால் தாங்க முடியாது)" என்றார்.
அவர் சடைந்துபோவதைக் கண்ட ஜாபிர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் இருக்கிறதென்றால், (நோயின் தன்மைக்கு ஏற்றபடி) குருதி உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில்தான் அது உள்ளது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(ஆயினும்) சூடிடுவதை நான் விரும்பவில்லை"என்று கூறினார்கள் என்றார்கள்.
அவ்வாறே குருதி உறிஞ்சி எடுப்பவர் வந்து காயத்தைக் கீறி குருதி உறிஞ்சி எடுத்தார். அந்த இளைஞருக்கு ஏற்பட்டிருந்த வலி நீங்கியது.
Book : 39
4435. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் குருதி உறிஞ்சி எடுக்குமாறு அபூதைபாவுக்குக் கட்டளையிட்டார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூதைபா, உம்மு சலமா (ரலி) அவர்களுக்குப் பால்குடிச் சகோதரராக, அல்லது பருவ வயதை அடையாத இளவலாக இருந்தார் என்றும் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4436. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் மருத்துவர் ஒருவரை அனுப்பிவைத்தார்கள். அவர் உபை பின் கஅப் (ரலி) அவர்களின் நரம்பு ஒன்றைத் துண்டித்து (குருதியை வடியச் செய்து,பின்னர்) அதன்மீது சூடிட்டார்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவர், உபை பின் கஅப் (ரலி) அவர்களின் நரம்பு ஒன்றைத் துண்டித்தார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
Book : 39
4437. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப்போரின்போது உபை பின் கஅப் (ரலி) அவர்களின் நாடி நரம்பில் அம்பு பாய்ந்து விட்டது. (இரத்தம் நிற்பதற்காகக் காயத்தின்மீது) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூடிட்(டுக் கொள்ளுமாறு உத்தரவிட்)டார்கள்.
Book : 39
4438. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அகழ்ப்போரின்போது) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் நாடி நரம்பில் அம்பு பாய்ந்து விட்டது. (இரத்தம் நிற்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் தமது கையிலிருந்த கத்தியால் அதன்மீது சூடிட்டார்கள். பிறகு அந்தக் காயம் வீங்கிவிட்டது. எனவே, மீண்டும் அதன்மீது சூடிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39