4459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த (கொள்ளை) நோய் ஒரு தண்டனையாகும். அதன்மூலம் உங்களுக்கு முன்னிருந்த சில சமுதாயத்தார் வேதனை செய்யப்பட்டனர். பின்னர் அதில் சிறிதளவு பூமியில் எஞ்சிவிட்டது. எனவே, அது ஒருமுறை வரும். ஒருமுறை போகும். ஆகவே, அது ஓர் ஊரில் இருப்பதாகக் கேள்விப்படுபவர், அங்கு செல்லவே வேண்டாம். அது ஏற்பட்டிருக்கும் ஊரில் வசிப்பவர், அதிலிருந்து தப்பிப்பதற்காக (அங்கிருந்து) வெளியேறவே வேண்டாம்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
4460. ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மதீனாவில் இருந்தபோது கூஃபாவில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது. அப்போது அதாஉ பின் யசார் (ரஹ்) உள்ளிட்டோர் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டுவிட்டால் அங்கிருந்து நீ வெளியேறாதே! அது ஓர் ஊரில் ஏற்பட்டிருப்பதாக உனக்குச் செய்தி கிடைத்தால், அங்கு நீ செல்லாதே" எனக் கூறினார்கள்" என்றனர்.
நான், "யாரிடமிருந்து (இதை நீங்கள் செவியுற்றீர்கள்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆமிர் பின் சஅத் பின் அபீவக் காஸ் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்" என்று பதிலளித்தார்கள். உடனே நான் ஆமிர் (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர் வெளியூர் சென்றிருப்பதாகக் கூறினர்.
ஆகவே, நான் ஆமிரின் சகோதரர் இப்ராஹீம் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களைச் சந்தித்து அது குறித்துக் கேட்டேன். அப்போது இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள். அங்கு நானுமிருந்தேன். உசாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த (கொள்ளை)நோய் ஒரு தண்டனை, அல்லது வேதனை, அல்லது வேதனையின் மிச்சமாகும். அதன்மூலம் உங்களுக்கு முன்னிருந்த சிலர் வேதனை செய்யப்பட்டனர். நீங்கள் ஓர் ஊரில் இருக்க, அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டு விட்டால், அங்கிருந்து நீங்கள் வெளியேறிச் செல்லாதீர்கள். அது ஓர் ஊரில் ஏற்பட்டிருப்பதாக உங்களுக்குச் செய்தி கிடைத்தால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள்" என்று கூறினார்கள்.
தொடர்ந்து அறிவிப்பாளர் ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உடனே நான் இப்ராஹீம் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களிடம், "உசாமா (ரலி) அவர்கள் (உங்கள் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் இதை அறிவித்தபோது நீங்கள் கேட்டீர்களா? சஅத் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லையா?" என்று கேட்டேன்.
அதற்கு இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், "ஆம் (சஅத் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லை)" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அதில் ஹதீஸின் ஆரம்பத்தில் உள்ள அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் மாலிக் (ரலி), குஸைமா பின் ஸாபித் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி) ஆகிய மூன்று நபித்தோழர்கள் வழியாகவும் (மூன்று அறிவிப்பாளர் தொடர்களில்) வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களும் சஅத் (ரலி) அவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதை) அறிவித்தனர்" என்று இப்ராஹீம் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்ராஹீம் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
4461. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மக்களின் நிலையை ஆராய்வதற்காக) ஷாம் (சிரியா) நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். "சர்ஃக்" எனும் இடத்தை அடைந்த போது, (மாகாண) படைத்தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது எனறு தெரிவித்தனர்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "ஆரம்பக்கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று சொல்ல,அவர்களை நான் (உமர் (ரலி) அவர்களிடம்) அழைத்துவந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள்.
இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர், "தாங்கள் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டீர்கள். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் உசிதமாகக் கருதவில்லை" என்று சொன்னார்கள்.
வேறுசிலர், "உங்களுடன் (மற்ற) மக்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயை நோக்கிக் கொண்டுசெல்வதை நாங்கள் சரியென்று கருதவில்லை" என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள் "நீங்கள் போகலாம்" என்று சொல்லிவிட்டுப் பிறகு, "என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வாருங்கள்" என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துவந்தேன். அவர்களிடமும் உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கேட்டார்கள். அவர்களும் முஹாஜிர்களைப் போன்றே கருத்துத் தெரிவித்துக் கருத்து வேறுபாடு கொண்டனர். உமர் (ரலி) அவர்கள் "நீங்களும் போகலாம்" என்று கூறினார்கள்.
பிறகு, "மக்கா வெற்றி ஆண்டில் (மதீனாவுக்குப்) புலம்பெயர்ந்துவந்த குறைஷிப் பெரியவர்களில் யார் இங்கு உள்ளனரோ அவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்" என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துவந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்) மக்களுடன் நீங்கள் (மதீனாவுக்குத்) திரும்பிவிட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடாது என நாங்கள் கருதுகிறோம்" என்று கூறினர்.
ஆகவே, உமர் (ரலி) அவர்கள் மக்களிடையே "நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படப்போகிறேன்;நீங்களும் காலையில் பயணத்திற்குத் தயாராகுங்கள்" என்று அறிவிப்புச் செய்தார்கள்.
அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?" என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், "அபூ உபைதா! உங்களைத் தவிர வேறு எவரேனும் இவ்வாறு கூறியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். (உமர் (ரலி) அவர்கள், தமக்கு மாறாகக் கருத்துக் கூறுவதை வெறுப்பார்கள்.) ஆம். நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறு பக்கம் வறண்டதாகவும் உள்ள இருகரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?" என்று கேட்டார்கள்.
அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு) வந்து, "இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்த ஊருக்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து தப்புவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்" என்று சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தமது முடிவை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப அமையச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு (மதீனாவுக்கு)த் திரும்பிச் சென்றார்கள்.
Book : 39
4462. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேலும், உமர் (ரலி) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களிடம் "ஒருவர் செழிப்பான கரையை விட்டுவிட்டு வறண்ட கரையில் தமது ஒட்டகத்தை மேயவிட்டால் அவரைக் கையாலாகாதவர் என்று நீங்கள் கருதுவீர்களா, சொல்லுங்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூஉபைதா (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் "அவ்வாறாயின் செல்லுங்கள்" என்று கூறிய அவர்கள்,பயணம் மேற்கொண்டு மதீனா வந்தடைந்தார்கள். பிறகு "அல்லாஹ் நாடினால் இதுதான் நமது தங்குமிடம்" என்று சொன்னார்கள்" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
4463. அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். "சர்ஃக்" எனுமிடத்தை அவர்கள் அடைந்த போது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால்,அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளை நோய் பரவிவிட்டால், அதிலிருந்து தப்புவதற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறாதீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "சர்ஃக்" எனுமிடத்திலிருந்து திரும்பினார்கள்.
இந்த ஹதீஸ், சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில் "அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற நபிமொழியின் காரணத்தாலேயே உமர் (ரலி) அவர்கள் மக்களுடன் (மதீனாவுக்குத்) திரும்பிச் சென்றார்கள்" என்று சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
Book : 39
பாடம் : 33 தொற்றுநோய், பறவை சகுனம், ஆந்தை பற்றிய நம்பிக்கை, "ஸஃபர்" எனும் வயிற்று நோய் (தொற்று நோய் என்பது) பற்றிய எண்ணம், நட்சத்திர இயக்கத்தால்தான் மழை பொழிகிறது எனும் நம்பிக்கை, வர்ணஜாலம் காட்டும் சாத்தான் பற்றிய நம்பிக்கை ஆகியன கிடையாது என்பதும், நோய் கண்ட ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டுசெல்லக் கூடாது என்பதும்.
4464. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொற்றுநோய் கிடையாது; ஸஃபர் (தொற்று நோய்) என்பது கிடையாது;ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது" என்று சொன்னார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்திரியும்) ஒட்டகங்களிடம், சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து, அவற்றுக்கிடையே கலந்து அவை அனைத்தையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச்செய்தது யார்?" என்று திருப்பிக் கேட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4465. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பது கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறினார்கள். அப்போது ஒரு கிராமவாசி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கேட்டார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
Book : 39
4466. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நபி (ஸல்) அவர்கள், "தொற்றுநோய் கிடையாது" என்று சொன்னார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளபடி கேட்டார்" என்று இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபி (ஸல்) அவர்கள் தொற்று நோய் கிடையாது; ஸஃபர் (தொற்று நோய்) என்பது கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறினார்கள்" என இடம் பெற்றுள்ளது.
Book : 39
4467. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொற்றுநோய் கிடையாது" என்று கூறினார்கள் என்றும், "நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது" என்றும் கூறினார்கள்" என்றார்கள்.
இவ்விரு ஹதீஸ்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். பிறகு "தொற்றுநோய் கிடையாது" எனும் ஹதீஸை அறிவிப்பதை நிறுத்திவிட்டு, "நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது" என்பதை மட்டும் அறிவிக்கலானார்கள்.
அப்போது (அபூஹுரைரா (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரரின் புதல்வர்) ஹாரிஸ் பின் அபீதுபாப் (ரஹ்) அவர்கள், "அபூஹுரைரா! இந்த ஹதீஸுடன் மற்றொரு ஹதீஸையும் நீங்கள் அறிவிப்பதை நான் கேட்டிருக்கிறேனே! ஆனால், அதை நீங்கள் அறிவிக்காமல் அமைதியாகிவிடுகிறீர்களே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொற்றுநோய் கிடையாது" என்று கூறினார்கள் என நீங்கள் அறிவித்து வந்தீர்களே?" என்று கேட்டார்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அது பற்றி தமக்குத் தெரியாது என்று மறுத்தார்கள். "நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது" என்பதை மட்டுமே கூறினார்கள்.
ஹாரிஸ், தாம் கூறுவதை ஏற்காததைக் கண்ட அபூஹுரைரா (ரலி) அவர்கள் கோபமுற்று அபிசீனிய மொழியில் ஏதோ சொன்னார்கள். "நான் என்ன சொன்னேன் என்று நீ அறிவாயா?" என்று கேட்டார்கள். அதற்கு ஹாரிஸ் "இல்லை"என்றார். அபூஹுரைரா (ரலி) அவர்கள் "நான் (அதை) மறுக்கிறேன்" என்றார்கள்.
அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! (முன்னர்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொற்றுநோய் கிடையாது என்று கூறினார்கள்" என அறிவித்துவந்தார்கள். (அதை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் மறந்து விட்டார்களா? அல்லது நபிகளாரின் ஒரு ஹதீஸ் மற்றொரு ஹதீஸை மாற்றிவிட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4468. மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அபூஹுரைரா (ரலி) அவர்கள் "தொற்றுநோய் கிடையாது" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்துவிட்டு, "நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book : 39
4469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட)நம்பிக்கையும் (உண்மை) இல்லை; நட்சத்திர இயக்கத்தால்தான் மழை பொழிகிறது என்பதும் (உண்மை) இல்லை; ஸஃபர் (தொற்று நோய்) என்பதும் கிடையாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4470. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4471. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பதும் கிடையாது.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 39
4472. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பதும் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள் "ஸஃபர் கிடையாது" என்பதற்கு விளக்கமளிக்கையில், "ஸஃபர் என்பது வயிறாகும்" என்று கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடம், "(அது) எப்படி?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "வயிற்றில் உருவாகும் ஒரு புழுவாகும் என்று சொல்லப் படுவதுண்டு" என்றார்கள்.
ஆனால், ஜாபிர் (ரலி) அவர்கள், ("வர்ண ஜாலம் காட்டும் சாத்தான்" என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) "ஃகூல்" என்பதற்கு விளக்கமளிக்கவில்லை. ஆயினும், பல வண்ணம் காட்டுவதே இந்த "ஃகூல்" என்பதாகும்.
இதை அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 39
பாடம் : 34 பறவை சகுனமும் நற்குறியும் அபசகுனம் எதில் உள்ளது என்பதும்.
4473. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்" என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது, "நற்குறி என்பது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நீங்கள் செவியுறுகின்ற நல்ல (மங்கலகரமான) சொல்தான்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "செவியுற்றேன்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை. ஷுஐப் பின் அல்லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றேன்" என இடம்பெற்றுள்ளது.
Book : 39
4474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது; நற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. (மங்கலகரமான) நல்ல, அழகான சொல்லே நற்குறி ஆகும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 39
4475. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்று சொன்னார்கள். அப்போது "நற்குறி என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "(மங்கலகரமான) நல்ல சொல்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39
4476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது; (ஆனால்) நற்குறியை நான் விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 39
4477. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட)நம்பிக்கை (உண்மை) இல்லை; பறவை சகுனம் ஏதும் கிடையாது. (ஆனால்,) நான் நற்குறியை விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 39
4478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபசகுனம் (இருப்பதென்றால்) மனை, மனைவி, புரவி (குதிரை) ஆகிய மூன்றில்தான் இருக்கும். - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 39