ஆதம் அலைஹி வஸ்ஸலாம்
மக்காவிலிருந்து சிறிது தூரத்திலுள்ள அராஃபாவிலே ஜபலூர்ரஹ்மத் என்ற இந்த மலையில்தான் (படம் 1a ) ஆதம் அலைஹிவஸ்ஸலாமும் ஹவ்வா அலைஹிமுஸ்ஸலாமும் இவ்வுலகில் முதன் முறையாக சந்த்தித்து கொண்டார்கள் என்பது கருத்தாகும்.

Prophet Adam and Hawwa first meeting place.
படம் 1a

நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
இறைத்தூதர் நூஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது இராக்கில் உள்ளன. சிலைகளை வணங்கிக்கொண்டிருந்த சுமேரிய மக்களை உண்மையான நம்பிக்கையின் பக்கம் அழைத்தனர். நீண்ட நாட்கள் அழைப்பு பணி செய்தும் ஒரு சிலர்தான் அவருடைய பிராச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்சிகளை திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.

“நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.”

அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.
“அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்).

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.

இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.

அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.

பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. அல்குர்ஆன் 11:36 - 44

இராக்கில் ஹூபாவில் உள்ள இந்த இடத்தில்(படம் 2b) வைத்துதான் அந்த கப்பல் கட்டப்பட்டது என்பது பலமான கருத்தாகும்.

Idols of people of sumeria

சுமேரிய மக்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகள்.
படம் 2a

Hooba Mosque

வரலாற்று சிறப்புமிக்க ஹூபா பள்ளிவாசல்.
படம் 2b

நூஹ் நபியின் கப்பல் சென்று தங்கிய மலைப்பகுதி துருக்கி நாட்டில் குர்திஸ்தான் என்ற நகரத்தின் வடக்கு பகுதியிலிருந்து பார்க்கும் போது ஆறாயிரத்து எண்ணூறு அடி உயரத்தில் இருக்கிறது.