முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்
அரேபியாவில் உள்ள மக்காவில் கி.பி. 571 ல் ஆமினா, அப்துல்லாஹ் அவர்களுக்கும் மகனாய் பிறந்து, பெற்றோரை இழந்து பாட்டனார் அப்துல் முத்தலிபு ஆதரவில் வளர்ந்து தீய செயல்கள் அனைத்திலிருந்தும் சிறு வயதிலேயே விலகியும் அல்அமீன் என்ற சிறப்பு பெயர் பெற்றவர்தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள்.

அவர் நாற்பது வயதை அடைந்ததும் மக்காவிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜபலுன்நூர் என்ற இந்த மலையின் உச்சியிலுள்ள ஹிரா குகைக்கு சென்று தனிமையில் இருப்பது வழக்கம். சிலை வணக்கம், விபச்சாரம், மது அருந்துதல், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், கோத்திரங்களுக்கிடையே இருந்த பகைமை போன்ற தமது மக்களின் தீயச் செயல்கள் நிறைந்த வாழ்க்கை முறைகள் அவரை பெரிதும் கவலைப்படச்செய்தன. ஹிரா குகையில் பல நாட்கள் தொடர்ந்து தியானம் செய்வது அவரது வழக்கம். ஒரு நாள் அவர் ஹிரா குகையில் இருந்த போது அல்லாஹ்வின் கட்டளைப்படி வானத்திலிருந்து இந்த மலைக்கு இறங்கி வந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்ற வானவர் அவரிடம் ஓதுவீராக என்றார். அதனைக்கேட்டு பயந்து நடுங்கி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் எனக்கு ஓத தெரியாது என்று கூறினார். வானவர் அவரை இறுக அணைத்து மீண்டும் ஓதுவீராக என்றார். அதற்க்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நான் அறியேன் என்றார். மூன்றாவது முறையும் இவ்வாறே நடந்தது. பிறகு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை வானவர் ஓதிக் காட்டினார்.

Hira Cave

ஹிரா குகை

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். அல்குர்அன் 96:1-5


இதற்க்கு பின் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்றுவிட்டார். இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

மக்காவில் வாழ்ந்த 13-வருடங்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுக்கு கடுமையான துன்பங்கள் ஏற்ப்பட்டன. மக்காவில் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது. மக்காவிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மதினாவிற்க்கு ஹிஜ்ரத் செய்யும்படி நபிகள் தமது தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். ஜம்பத்து மூன்றாவது வயதில் மக்காவில் உள்ள தன் வீட்டிலிருந்து எதிரிகளுக்கு தெரியாமல் வெளியேறினார். அவரது உற்ற தோழரான அபுபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஜபலுஸவ்ரின் என்ற இந்த மலை உச்சிக்கு சென்றார். எதிரிகளின் கண்களில் படாமலிருக்க இந்த குகையில் மூன்று நாட்கள் மறைந்திருந்தனர். குகை வாயில் வரை வந்த எதிரிகளை கண்டு பயந்த அபுபக்கரின் காதில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கவலைப்படவேண்டாம் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்று கூறினார்கள்.

Jablusawr Cave

ஜபலுஸவ்ரின் குகை

எதிரிகள் சென்றவுடன் இருவரும் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் ஒட்டகத்தில் மதினாவிற்க்கு சென்றார்கள். மதினாவிற்க்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள குபாவிற்க்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் வந்த ஒட்டகம் அங்கே மண்டியிட்டது.


ஜபலுஸவ்ரின் குகை உட்புறம்

அந்த இடத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி நான்கு நாள்களில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தலைமையில் குபா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இந்த குபா பள்ளியை பிற்காலத்தில் சவுதி அரசாங்கம் புதிப்பித்தது.

Kuba Mosque

குபா பள்ளிவாசல்

அதன்பின் மதினாவுக்கு செல்லும் வழியில் வாதிசாலிமில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் முதலாவதாக ஜுமா தொழுகை நடத்தியது இந்த பள்ளியில்தான். இதற்க்கு மஜிதில் ஜுமா என்று பெயர். இந்த பள்ளியை பிற்காலத்தில் சவுதி அரசாங்கம் புதிப்பித்தது.

Juma Mosque

ஜுமா பள்ளிவாசல்

மதினாவிற்க்கு வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் முதலில் செய்த பணி முஸ்லிம்களின் கலாச்சார மையமாக ஒரு பள்ளியை கட்டியதுதான். அன்று கட்டப்பட்ட அந்த சிறிய பள்ளி பிறகு புதுபித்துக் கட்டப்பட்டது. இப்பொழுது இந்த மஜிதில் நபவி லட்சக்கணக்கானோர் தொழுகை நடத்தக் கூடிய விசாலமான இடமாக உள்ளது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் குர்ஆன் வகுப்புகளும், நீதி மன்றமும், அலுலகமும், பாரளுமன்றமும் இந்த பள்ளியில்தான் செயல்படுத்தப் பட்டது.