Tamilil Quran - நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு மக்கா வெற்றி Prophet Mohammed, Mecca victory, Makka victory

மக்கா வெற்றி
சுமார் பத்தாயிரம் முஸ்லீம் தோழர்களுடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் பாலைவனங்கள் வழியாக முன்னறிவிப்பின்றி மக்காவை நோக்கி சென்றார்கள். தம்மையும் தங்கள் தோழர்களையும் வீட்டைவிட்டு வெளியேற்றி ஏராளமான கொடுமைகளுக்கு ஆளாக்கி துன்புறுத்திய மக்கா குரைசிகளும் அவர்களது தலைவர்களும் நிர்பந்த சூழ்நிலையில் பெருமானாரிடம் சரணடைந்தார்கள். அப்பொழுது கருணையின் சிகரமான பெருமானார் அவர்கள் மன்னித்துவிட்டதாக அறிவித்தார்கள். அவர்களது மதத்திற்க்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறு வாழ அவர்களுக்கு சுதந்திரம் அளித்தார்கள். வாளால்தான் இஸ்லாம் பரப்பப்பட்டது என்பது பொய்யான கருத்தாகும் என்பதை நிரூபித்த ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இது. மதத்தின் பெயரால் போரிடாத முஸ்லீமல்லாத அனைவருக்கும் நன்மையே செய்ய வேண்டும் நீதம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள். அல்குர்ஆன் 60:8-9

அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்து பிரார்திப்பவர்களை நீங்கள் ஏசக்கூடாது என்பதை அல்லாஹ் முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறான்.

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்குர்ஆன் 6:108

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு
கிருத்துவ ஆண்டு 632 ஜுன் மாதம் 8ஆம் நாள் தமது 63ம் வயதில் அல்லாஹ்வின் இறைத்தூதர் அவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்து சென்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் வைத்துதான் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் வஃபாத்தானார்கள். அதே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். மதினாவில் மஸ்ஜிது நபவி பள்ளியை ஒட்டியுள்ள இந்த இடத்தில்தான் பெருமானார் அடக்கஸ்தலம் இருக்கிறது. அபுபக்கர் சித்தீக், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மண்ணறைகள் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் மண்ணறைக்கு பக்கத்தில் தான் இருக்கிறது.


 

பெருமானாரின் காலம் முதல் இன்று வரையிலும் மதீனாவில் உள்ள ஒரு பொது அடக்கஸ்தலம்தான் இது. இதில்தான் பெருமானாரின் மனைவியரும், நபிதோழர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

கிருத்துவ ஆண்டு 570ல் ஏப்ரல் மாதத்தில் மக்காவில் அப்துல்லாஹ் ஆமினாவிற்க்கு மகனாக பிறந்து சிறுவயதிலேயே அனாதையாக வளர்ந்து எழுதப் படிக்க அறியாமலும் உண்மையாளன் என்று எதிரிகளாலும் போற்றப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது நாற்பது வயது வரையிலும் இவ்வுலகத்திற்க்கு எவ்வித அற்புதத்தையும் எடுத்துக் கூறவில்லை. நாற்பது வயதிற்க்கு பிறகு தனக்கு அல்லாஹ்விடமிருந்து தமக்கு கிடைத்தாக எடுத்தறிவித்த வாசகங்களின் வரலாற்று சம்பந்தமான உண்மை ஆதாரங்களைத்தான் நாம் இதுவரையிலும் பார்த்தோம்.

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.