60. ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்)
மதனீ, வசனங்கள்: 13

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
60:1
60:1 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّىْ وَعَدُوَّكُمْ اَوْلِيَآءَ تُلْقُوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَآءَكُمْ مِّنَ الْحَـقِّ‌ ۚ يُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِيَّاكُمْ‌ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ اِنْ كُنْـتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِىْ سَبِيْلِىْ وَ ابْتِغَآءَ مَرْضَاتِىْ ‌ۖ  تُسِرُّوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ ‌ۖ  وَاَنَا اَعْلَمُ بِمَاۤ اَخْفَيْتُمْ وَمَاۤ اَعْلَنْتُمْ‌ؕ وَمَنْ يَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تَتَّخِذُوْا எடுத்துக் கொள்ளாதீர்கள் عَدُوِّىْ எனதுஎதிரிகளை(யும்) وَعَدُوَّكُمْ உங்கள் எதிரிகளையும் اَوْلِيَآءَ உற்ற நண்பர்களாக تُلْقُوْنَ வெளிப்படுத்துகின்ற اِلَيْهِمْ அவர்களிடம் بِالْمَوَدَّةِ அன்பை وَقَدْ திட்டமாக كَفَرُوْا நிராகரித்தனர் بِمَا جَآءَكُمْ உங்களிடம் வந்ததை مِّنَ الْحَـقِّ‌ ۚ சத்தியத்தை يُخْرِجُوْنَ வெளியேற்றுகின்றனர் الرَّسُوْلَ தூதரை(யும்) وَاِيَّاكُمْ‌ உங்களையும் اَنْ تُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொண்டதனால் بِاللّٰهِ அல்லாஹ்வை رَبِّكُمْ ؕ உங்கள் இறைவனாகிய اِنْ كُنْـتُمْ خَرَجْتُمْ நீங்கள் வெளியேறிஇருந்தால் جِهَادًا ஜிஹாது செய்வதற்காகவும் فِىْ سَبِيْلِىْ எனது பாதையில் وَ ابْتِغَآءَ தேடியும் مَرْضَاتِىْ என் பொருத்தத்தை ۖ  تُسِرُّوْنَ இரகசியமாக காட்டுகின்றீர்களா? اِلَيْهِمْ அவர்களிடம் بِالْمَوَدَّةِ அன்பை ۖ  وَاَنَا நான் اَعْلَمُ நன்கறிவேன் بِمَاۤ اَخْفَيْتُمْ நீங்கள் மறைப்பதையும் وَمَاۤ اَعْلَنْتُمْ‌ؕ நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் وَمَنْ யார் يَّفْعَلْهُ அதைச் செய்வாரோ مِنْكُمْ உங்களில் فَقَدْ திட்டமாக ضَلَّ வழி கெட்டுவிட்டார் سَوَآءَ السَّبِيْلِ‏ நேரான பாதையை
60:1. ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
60:1. நம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் விரோதமாக இருப்பவர்களை நீங்கள் நேசர்களாக எடுத்துக் கொண்டு, அன்பின் அடிப்படையில் (ரகசியமாகக் கடிதம் எழுதி) அவர்களிடம் உறவாட வேண்டாம். உங்களிடம் வந்த சத்திய (வேத)த்தை நிச்சயமாக அவர்கள் நிராகரித்துவிட்டனர். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டீர்கள் என்பதற்காக உங்களையும் (நம்) தூதரையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றினார்கள். (நம்பிக்கையாளர்களே! நீங்கள்)என் திருப்பொருத்தத்தை விரும்பி, என் பாதையில் போர் புரிய மெய்யாகவே நீங்கள் (உங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேறியிருந்தால், அவர்களுடன் நீங்கள் இரகசியமாக உறவாடிக் கொண்டிருப்பீர்களா? நீங்கள் மறைத்துக் கொள்வதையும், இன்னும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். (இவ்வாறு) உங்களில் எவரேனும் செய்தால், நிச்சயமாக அவர் நேரான பாதையிலிருந்து தவறிவிட்டார்.
60:1. இறைநம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் என் வழியில் அறப்போர் செய்வதற்காகவும், எனது உவப்பைப் பெறுவதற்காகவும் (தாயகத்தைத் துறந்து இல்லங்களை விட்டு) வெளியேறி இருந்தால், எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்களுடன் நட்புறவு வைக்கின்றீர்கள். ஆனால், அவர்களோ உங்களிடம் வந்துள்ள சத்தியத்தை ஏற்க மறுத்துவிட்டிருக்கிறார்கள். மேலும், அவர்களின் நடத்தை இதுவே: இறைத்தூதரையும் உங்களையும், நீங்கள் உங்கள் அதிபதியாகிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள் எனும் தவறுக்காக நாடுகடத்துகின்றார்கள். ஆனால் நீங்களோ அவர்களுக்கு இரகசியமாக நட்புத்தூதை அனுப்புகிறீர்கள். ஆயினும், நீங்கள் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் செய்யும் அனைத்தையும் நான் நன்கு அறிகின்றேன். உங்களில் யாரேனும் இவ்வாறு செய்தால், திண்ணமாக அவர் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்தவராவார்.
60:1. விசுவாசங்கொண்டோரே! என்னுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும்_அவர்கள்பால் (உங்கள்) நேசத்தைச் சேர்த்து வைக்கின்ற நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம், (ஏனென்றால்) சத்தியத்திலிருந்து உங்களிடம் வந்த (வேதத்)தை திட்டமாக அவர்கள் நிராகரித்தும் விட்டனர், உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வை நீங்கள் விசுவாசித்ததற்காக (நம்முடைய) தூதரையும் உங்களையும் உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றுகிறார்கள், (விசுவாசிகளே!) என் பாதையில் ஜிஹாது செய்வதற்காகவும், என் பொருத்தத்தைத் தேடியும் நீங்கள் வெளியேறி விடுவீர்களாயின்_(அவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்ளவேண்டாம், ஆனால் நீங்களோ) அவர்கள் பால் நேசத்தின் காரணமாக (செய்திகளை) மறைமுகமாகச் சேர்த்து வைக்கிறீர்கள், நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துவிட்டதையும், (அதற்கு மாறாக) நீங்கள் வெளிப்படுத்திவிட்டதையும் நானோ நன்கறிவேன். இன்னும் உங்களில் யார் இதைச் செய்கின்றாரோ அவர் நேரான பாதையைத் திட்டமாக தவறவிட்டுவிட்டார்.
60:2
60:2 اِنْ يَّثْقَفُوْكُمْ يَكُوْنُوْا لَـكُمْ اَعْدَآءً وَّيَبْسُطُوْۤا اِلَيْكُمْ اَيْدِيَهُمْ وَاَلْسِنَتَهُمْ بِالسُّوْٓءِ وَوَدُّوْا لَوْ تَكْفُرُوْنَؕ‏
اِنْ يَّثْقَفُوْكُمْ அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக் கொண்டால் يَكُوْنُوْا அவர்கள் ஆகிவிடுவார்கள் لَـكُمْ உங்களுக்கு اَعْدَآءً எதிரிகளாக وَّيَبْسُطُوْۤا இன்னும் நீட்டுவார்கள் اِلَيْكُمْ உங்கள் பக்கம் اَيْدِيَهُمْ தங்கள் கரங்களையும் وَاَلْسِنَتَهُمْ தங்கள் நாவுகளையும் بِالسُّوْٓءِ தீங்கிழைக்க وَوَدُّوْا இன்னும் விரும்புகிறார்கள் لَوْ تَكْفُرُوْنَؕ‏ நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை
60:2. அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள்; தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.
60:2. அவர்களுக்கு சமயம் கிடைத்தால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு எதிரியாகி, தங்கள் கைகளையும் உங்கள் மீது நீட்டி, தங்கள் நாவாலும் உங்களுக்குத் தீங்கிழைப்பார்கள். மேலும், நீங்களும் (நம்பிக்கையை விட்டு) நிராகரிப்பவர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.
60:2. (மேலும் அவர்கள் நடத்தை இதுவே:) உங்களை தங்களின் பிடியில் அவர்கள் கொண்டு வந்து விடுவார்களானால் உங்களுடன் பகைமை கொள்கின்றார்கள். மேலும், அவர்கள் தம்முடைய கையாலும், நாவாலும் உங்களுக்குத் தொல்லை தருகின்றார்கள். நீங்கள் எப்படியேனும் நிராகரிப்பாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள்.
60:2. அவர்கள் உங்களைக் கண்டால் (பகிரங்கமாகவே) அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகி விடுவார்கள், மேலும், (போர் செய்ய) உங்கள்பால் தங்கள் கைகளையும், தங்கள் நாவுகளையும் தீமையைக் கொண்டு நீட்டுவார்கள், அன்றியும், நீங்கள் (அவர்களைப் போன்று) நிராகரிப்போராகிவிட வேண்டுமென அவர்கள் ஆசைப்படுவார்கள்.
60:3
60:3 لَنْ تَـنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ يَوْمَ الْقِيٰمَةِ ۛۚ يَفْصِلُ بَيْنَكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
لَنْ تَـنْفَعَكُمْ உங்களுக்கு பலன் தரமாட்டார்கள் اَرْحَامُكُمْ உங்கள் இரத்த உறவுகளும் وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ உங்கள் பிள்ளைகளும் يَوْمَ الْقِيٰمَةِ ۛۚ மறுமை நாளில் يَفْصِلُ பிரித்து விடுவான் بَيْنَكُمْ‌ؕ உங்களுக்கு மத்தியில் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
60:3. உங்கள் உறவினரும்; உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான்; அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
60:3. (அவர்களுடன் இருக்கும்) உங்கள் சந்ததிகளும், உங்கள் பந்துத்துவமும் மறுமைநாளில் உங்களுக்கு ஒரு பயனுமளிக்காது. (அந்நாளில் அல்லாஹ்) உங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்திவிடுவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
60:3. மறுமைநாளில் உங்களுடைய இரத்த பந்த உறவினர்களோ, உங்களுடைய பிள்ளைகளோ உங்களுக்குப் பயனளிக்க மாட்டார்கள். (அந்நாளில்) அல்லாஹ் உங்களிடையே பிரிவை ஏற்படுத்தி விடுவான். மேலும், அல்லாஹ்தான் உங்கள் செயல்களைப் பார்ப்பவனாக இருக்கின்றான்.
60:3. உங்களுடைய உறவினர்களும், உங்களுடைய பிள்ளைகளும் மறுமை நாளில் உங்களுக்கு பலனளிக்கவேமாட்டார்கள், (அந்நாளில் அல்லாஹ்) உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான், மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்க்கிறவன்.
60:4
60:4 قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗ‌ۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ‌ؕ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
قَدْ திட்டமாக كَانَتْ இருக்கிறது لَـكُمْ உங்களுக்கு اُسْوَةٌ முன்மாதிரி حَسَنَةٌ அழகிய فِىْۤ اِبْرٰهِيْمَ இப்ராஹீமிடத்திலும் وَالَّذِيْنَ எவர்கள் مَعَهٗ‌ۚ அவர்களுடன் اِذْ قَالُوْا அவர்கள் கூறிய சமயத்தை لِقَوْمِهِمْ தங்கள் மக்களுக்கு اِنَّا நிச்சயமாக நாங்கள் بُرَءٰٓؤُا விலகியவர்கள் مِنْكُمْ உங்களை விட்டும் وَمِمَّا تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி كَفَرْنَا நாங்கள் மறுத்துவிட்டோம் بِكُمْ உங்களை وَبَدَا வெளிப்பட்டுவிட்டன بَيْنَنَا எங்களுக்கு மத்தியிலும் وَبَيْنَكُمُ உங்களுக்கு மத்தியிலும் الْعَدَاوَةُ பகைமையும் وَالْبَغْضَآءُ குரோதமும் اَبَدًا எப்போதும் حَتّٰى تُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொள்கின்ற வரை بِاللّٰهِ அல்லாஹ் وَحْدَهٗۤ ஒருவனை மட்டும் اِلَّا எனினும் قَوْلَ கூறியதை اِبْرٰهِيْمَ இப்ராஹீம் لِاَبِيْهِ தனது தந்தைக்கு لَاَسْتَغْفِرَنَّ நிச்சயமாக நான் பாவமன்னிப்பு கேட்பேன் لَـكَ உமக்காக وَمَاۤ اَمْلِكُ நான் உரிமை பெறமாட்டேன் لَـكَ உமக்கு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مِنْ شَىْءٍ ؕ எதையும் رَبَّنَا எங்கள் இறைவா! عَلَيْكَ உம்மீது تَوَكَّلْنَا நாங்கள் நம்பிக்கை வைத்தோம் وَاِلَيْكَ உன் பக்கமே اَنَـبْنَا பணிவுடன் திரும்பிவிட்டோம் وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ உன் பக்கமே மீளுமிடம்
60:4. இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
60:4. இப்ராஹீமிடத்திலும், அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் நிச்சயமாக இருக்கிறது. அவர்கள் தம் மக்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களில் இருந்தும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குகிறவற்றிலிருந்தும் விலகிவிட்டோம். உங்களையும் (அவற்றையும்) நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். மேலும் இப்ராஹீம் தன் (சொல்லைக் கேளாத) தந்தையை நோக்கி ‘‘அல்லாஹ்விடத்தில் உமக்காக (அவனுடைய வேதனையில்) எதையும் தடுக்க எனக்கு சக்தி கிடையாது. ஆயினும், உமக்காக அவனிடத்தில் பின்னர் நான் மன்னிப்பைக் கோருவேன்'' என்று கூறி, ‘‘எங்கள் இறைவனே! உன்னையே நாங்கள் நம்பினோம். உன்னையே நாங்கள் நோக்கினோம். உன்னிடமே (நாங்கள் அனைவரும்) வர வேண்டியதிருக்கிறது'' (என்றும்),
60:4. உங்களுக்கு இப்ராஹீமிடத்திலும் அவருடைய தோழர்களிடத்திலும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அதாவது, அவர்கள் தங்கள் சமூகத்தாரிடம் தெளிவாகக் கூறிவிட்டார்கள்: “உங்களை விட்டும், இறைவனை விடுத்து நீங்கள் வணங்குகின்ற கடவுளரை விட்டும் நாங்கள் திண்ணமாக விலகிவிட்டோம். நாங்கள் உங்களை நிராகரித்து விட்டோம். மேலும், உங்களுக்கும் எங்களுக்குமிடையே நிரந்தரப் பகைமையும், வெறுப்பும் ஏற்பட்டுவிட்டன; ஏக அல்லாஹ்வின் மீது மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில்!” ஆனால் இப்ராஹீம் தன் தந்தையிடம் இவ்வாறு கூறியது (விதிவிலக்கானது): “நான் உங்களுக்காக நிச்சயம் பாவமன்னிப்புக் கோருவேன். மேலும், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்காக எதையும் பெற்றுத்தருவது என் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல.” (இப்ராஹீமும் அவருடைய தோழர்களும் இவ்வாறு இறைஞ்சினார்கள்:) “எங்கள் அதிபதியே! உன்னையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். உன் பக்கமே நாங்கள் மீண்டுவிட்டோம். உனது திருச்சமூகத்திற்கே நாங்கள் திரும்பிவரவேண்டி இருக்கின்றது.
60:4. இப்றாஹீமிலும், அவருடன் இருந்தவர்களிலும் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கின்றது, அவர்கள் தம் சமூகத்தாரிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக்கொண்டிருப்பவற்றிலிருந்தும் நீங்கி, உங்களை நாங்கள் நிராகரித்து விட்டோம். இன்னும் அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசங்கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையில் விரோதமும் வெறுப்பும் என்றென்றும் வெளிப்பட்டுவிட்டது” என்று கூறியபொழுது இப்றாஹீம் தன் தந்தையிடம் “உமக்காக நிச்சயமாக நான் மன்னிப்புத் தேடுவேன், மேலும் அல்லாஹ்விடமிருந்து எதையும் நான் உமக்கு உடமையாக்கிக் கொள்ளமாட்டேன்” என்ற கூற்றைத் தவிர (மற்றதில் உங்களுக்கு முன்மாதிரி உண்டு மேலும் இப்றாஹீம்,) “எங்கள் இரட்சகனே! (எங்கள் காரியங்களை உன்னிடம் ஒப்படைத்து முழுமையாக) உன் மீது நம்பிக்கை வைத்தோம், இன்னும் உன் பக்கமே நாங்கள் மீண்டோம், அன்றியும் உன் பக்கமே திரும்புதல் இருக்கிறது (என்றும்).
60:5
60:5 رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا‌ ۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
رَبَّنَا எங்கள் இறைவா لَا تَجْعَلْنَا எங்களை ஆக்கிவிடாதே فِتْنَةً ஒரு சோதனையாக لِّلَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு وَاغْفِرْ மன்னிப்பாயாக! لَـنَا எங்களை رَبَّنَا‌ ۚ எங்கள் இறைவா اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
60:5. “எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்” (என்றும் வேண்டினார்).
60:5. ‘‘எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்'' (என்றும்) பிரார்த்தித்தார்.
60:5. எங்கள் அதிபதியே! நிராகரிப்பாளர்களுக்கு எங்களை ஒரு சோதனையாய் ஆக்கிவிடாதே! எங்கள் அதிபதியே!. எங்கள் பாவங்களைப் பொறுத்தருள்! ஐயமின்றி நீயே வல்லமை மிக்கவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றாய்.”
60:5. “எங்கள் இரட்சகனே! நீ எங்களை நிராகரிப்போருக்குச் சோதனையாக ஆக்கிவிடாதே! எங்கள் இரட்சகனே! எங்களை நீ மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீதான் (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்” (என்றும் பிரார்த்தித்தார்).
60:6
60:6 لَقَدْ كَانَ لَـكُمْ فِيْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ‌ ؕ وَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ‏
لَقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கிறது لَـكُمْ உங்களுக்கு فِيْهِمْ அவர்களிடம் اُسْوَةٌ முன்மாதிரி حَسَنَةٌ அழகிய لِّمَنْ كَانَ இருப்பவருக்கு يَرْجُوا ஆதரவு வைப்பவராக اللّٰهَ அல்லாஹ்வையும் وَالْيَوْمَ الْاٰخِرَ‌ ؕ மறுமை நாளையும் وَمَنْ யார் يَّتَوَلَّ விலகுவாரோ فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் هُوَ அவன் الْغَنِىُّ முற்றிலும் தேவையற்றவன் الْحَمِيْدُ‏ மகா புகழுக்குரியவன்
60:6. உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது; ஆனால், எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங்குகிறாரோ: (அது அவருக்கு இழப்புதான்; ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ் மிக்கவன்.  
60:6. நிச்சயமாக அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மெய்யாகவே நம்புகிற உங்களுக்கு இவர்களில் அழகான முன்னுதாரணம் இருக்கிறது. எவர் புறக்கணிக்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களின்) தேவையற்றவன், மிக புகழுடையவன் ஆவான்.
60:6. அதே மக்களுடைய நடத்தையில் உங்களுக்கும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்ற ஒவ்வொருவருக்கும் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. எவரேனும் இதனைப் புறக்கணித்தால், அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.
60:6. உங்களில் எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஆதரவுவைக்கின்றாரோ அவருக்கு, திட்டமாக அவர்களில் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கின்றது, இன்னும், எவர் (ஏற்காது) புறக்கணித்து விடுகிறாரோ, அப்பொழுது (அவரே இழப்பிற்குரியவர், ஏனெனில் அகிலத்தாரை விட்டும்) நிச்சயமாக அல்லாஹ்_ அவனே தேவையற்றவன், புகழ்மிக்கவன்.
60:7
60:7 عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِيْنَ عَادَيْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةً ؕ وَاللّٰهُ قَدِيْرٌ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَ அல்லாஹ் ஏற்படுத்தலாம் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியிலும் وَبَيْنَ மத்தியிலும் الَّذِيْنَ عَادَيْتُمْ நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு مِّنْهُمْ அவர்களில் مَّوَدَّةً ؕ وَاللّٰهُ அன்பை/அல்லாஹ் قَدِيْرٌ‌ؕ பேராற்றலுடையவன் وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
60:7. உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
60:7. உங்களுக்கும், அவர்களில் உள்ள உங்கள் எதிரிகளுக்கும் இடையில், அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்தி விடக்கூடும். (இதற்கும்) அல்லாஹ் ஆற்றலுடையவனே! அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
60:7. உங்களுக்கும், நீங்கள் (இன்று) யாருடன் பகைமை கொண்டிருக்கின்றீர்களோ அவர்களுக்குமிடையே அல்லாஹ் என்றைக்கேனும் அன்பை ஏற்படுத்தக்கூடும். அல்லாஹ் பேராற்றலுடையவன்; மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
60:7. உங்களுக்கும், அவர்களிலிருந்து நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அத்தகையோருக்குமிடையில் அல்லாஹ் நேசத்தை ஏற்படுத்திவிடக்கூடும், (இதற்கு) அல்லாஹ்வோ ஆற்றலுடையோன்! மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
60:8
60:8 لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏
لَا يَنْهٰٮكُمُ உங்களை தடுக்க மாட்டான் اللّٰهُ அல்லாஹ் عَنِ الَّذِيْنَ எவர்களை விட்டும் لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ உங்களுடன் போர் செய்யவில்லையோ/மார்க்கத்தில் وَلَمْ يُخْرِجُوْكُمْ உங்களை வெளியேற்றவில்லையோ مِّنْ دِيَارِكُمْ உங்கள் இல்லங்களில் இருந்து اَنْ تَبَرُّوْهُمْ அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்வதை விட்டும் وَ تُقْسِطُوْۤا இன்னும் நீங்கள் நீதமாக நடப்பதை اِلَيْهِمْ‌ؕ அவர்களுடன் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கின்றான் الْمُقْسِطِيْنَ‏ நீதவான்களை
60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
60:8. (நம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பான்.
60:8. தீன் (இறைமார்க்கம்) தொடர்பான விஷயத்தில் எவர்கள் உங்களுடன் போர் புரியவில்லையோ உங்களை உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றவில்லையோ அவர்களிடம் நீங்கள் நல்லவிதமாகவும், நீதியுடனும் நடப்பதிலிருந்து அல்லாஹ் உங்களைத் தடுப்பதில்லை. திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான்.
60:8. (விசுவாசிகளே!) மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் எதிர்த்துப்போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமல் இருந்தார்களே அத்தகையோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள்பால் நீங்கள் நீதமாக நடந்துகொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடுக்கவில்லை, நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்வோரை நேசிக்கிறான்.
60:9
60:9 اِنَّمَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
اِنَّمَا يَنْهٰٮكُمُ நிச்சயமாக உங்களை தடுப்பதெல்லாம் اللّٰهُ அல்லாஹ் عَنِ الَّذِيْنَ எவர்களை விட்டும் قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ உங்களிடம் போர் செய்தார்களோ/ மார்க்கத்தில் وَاَخْرَجُوْكُمْ இன்னும் உங்களை வெளியேற்றினார்களோ مِّنْ دِيَارِكُمْ உங்கள் இல்லங்களில் இருந்து وَظَاهَرُوْا இன்னும் உதவினார்களோ عَلٰٓى اِخْرَاجِكُمْ உங்களை வெளியேற்றுவதற்கு اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ அவர்களை நீங்கள் நேசிப்பதை وَمَنْ யார் يَّتَوَلَّهُمْ அவர்களை நேசிக்கின்றார்களோ فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.
60:9. அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போர் புரிந்தவர்களையும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியவர்களையும், வெளியேற்றுவதில் (எதிரிகளுக்கு) உதவி செய்தவர்களையும் நீங்கள் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான். (ஆகவே,) எவர்கள் அவர்களுடன் நட்பு பாராட்டுகிறார்களோ, அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
60:9. அவன் தடுப்பதெல்லாம் எவர்கள் தீன் தொடர்பாக உங்களுடன் போர் புரிந்தார்களோ, உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றினார்களோ மேலும், உங்களை வெளியேற்றுவதில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டார்களோ அவர்களுடன் நீங்கள் நட்பு கொள்வதைத்தான்! அவர்களுடன் எவரேனும் நட்பு கொண்டால் அவர்களே கொடுமையாளர்கள் ஆவர்.
60:9. அல்லாஹ் உங்களைத் தடுப்பதெல்லாம், மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் போர் புரிந்து, உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றி, உங்களை வெளியேற்றுவதில் (விரோதிகளுக்கு) உதவியும் செய்தார்களே அத்தகையோரை நீங்கள் சிநேகிதர்களாக ஆக்கிக்கொள்வதைத்தான், ஆகவே, எவர்கள் அவர்களை நேசர்களாக ஆக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்களாவர்.
60:10
60:10 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ‌ ؕ اَللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِهِنَّ‌ ۚ فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَى الْكُفَّارِ‌ ؕ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّوْنَ لَهُنَّ‌ ۚ وَاٰ تُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰ تَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ‌ ؕ وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـــٴَــلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَ لْیَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقُوْا‌ ؕ ذٰ لِكُمْ حُكْمُ اللّٰهِ‌ ؕ يَحْكُمُ بَيْنَكُمْ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا جَآءَكُمُ உங்களிடம் வந்தால் الْمُؤْمِنٰتُ முஃமினான பெண்கள் مُهٰجِرٰتٍ ஹிஜ்ரா செய்தவர்களாக فَامْتَحِنُوْ சோதியுங்கள்! هُنَّ‌ ؕ அவர்களை اَللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِاِيْمَانِهِنَّ‌ ۚ அவர்களின் ஈமானை فَاِنْ عَلِمْتُمُوْ நீங்கள் அறிந்தால் هُنَّ அவர்களை مُؤْمِنٰتٍ முஃமினான பெண்களாக فَلَا تَرْجِعُوْ திரும்ப அனுப்பாதீர்கள் هُنَّ அவர்களை اِلَى الْكُفَّارِ‌ ؕ நிராகரிப்பாளர்களிடம் لَا அல்ல هُنَّ அவர்கள் حِلٌّ ஆகுமானவர்கள் لَّهُمْ அவர்களுக்கு وَلَا هُمْ يَحِلُّوْنَ அவர்கள் ஆகுமாக மாட்டார்கள் لَهُنَّ‌ ۚ அவர்களுக்கு وَاٰ تُوْ கொடுத்துவிடுங்கள்! هُمْ அவர்களுக்கு مَّاۤ اَنْفَقُوْا‌ ؕ அவர்கள் செலவு செய்ததை وَلَا جُنَاحَ அறவே குற்றமில்லை عَلَيْكُمْ உங்கள் மீது اَنْ تَنْكِحُوْ நீங்கள் மணமுடிப்பது هُنَّ அவர்களை اِذَاۤ اٰ تَيْتُمُوْ நீங்கள் கொடுத்தால் هُنَّ அவர்களுக்கு اُجُوْرَهُنَّ‌ ؕ அவர்களின் மஹ்ர்களை وَلَا تُمْسِكُوْا வைத்துக் கொள்ளாதீர்கள் بِعِصَمِ திருமண உறவை الْكَوَافِرِ நிராகரிக்கின்ற பெண்களின் وَسْـــٴَــلُوْا கேளுங்கள்! مَاۤ اَنْفَقْتُمْ நீங்கள் செலவு செய்ததை وَ لْیَسْـَٔلُوْا அவர்கள் கேட்கட்டும் مَاۤ اَنْفَقُوْا‌ ؕ அவர்கள் செலவு செய்ததை ذٰ لِكُمْ இது حُكْمُ சட்டமாகும் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் يَحْكُمُ தீர்ப்பளிக்கின்றான் بَيْنَكُمْ‌ ؕ உங்களுக்கு மத்தியில் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ மகா ஞானவான்
60:10. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
60:10. நம்பிக்கையாளர்களே! (நிராகரிப்பவர்களில் உள்ள) பெண்கள் நம்பிக்கைகொண்டு (தம் கணவர்களை வெறுத்து) வெளியேறி உங்களிடம் வந்தால், அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய உண்மை நம்பிக்கையை அல்லாஹ்தான் நன்கறிவான். எனினும், (நீங்கள் சோதித்ததில்) அவர்கள் நம்பிக்கையாளர்கள்தான் என்று உங்களுக்குத் தெரிந்தால், அந்த பெண்களை (அவர்களின் கணவர்களாகிய) நிராகரிப்பவர்களிடம் திரும்ப அனுப்பிவிடாதீர்கள். (ஏனென்றால் முஸ்லிமான) இப்பெண்கள் அவர்களுக்கு (மனைவிகளாக இருப்பதும்) ஆகுமானதல்ல; அவர்கள் இவர்களுக்கு (கணவர்களாக இருப்பதும்) ஆகுமானதல்ல. (எனினும், இப்பெண்களுக்காக அவர்கள்) செலவு செய்திருந்த பொருளை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். நீங்கள் அந்தப் பெண்களுக்கு மஹரைக் கொடுத்து, அவர்களை திருமணம் செய்துகொள்வது உங்கள் மீது குற்றமாகாது. தவிர, (உங்கள் பெண்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாதிருந்தால்) நம்பிக்கை கொள்ளாத அந்தப் பெண்களின் திருமண உறவை (நீக்கிவிடாது) நீங்கள் பிடித்துக் கொண்டிருக்க வேண்டாம். (அவர்களை நீக்கி, அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததை (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்பவர்களிடம்) கேளுங்கள். (அவ்வாறே நம்பிக்கை கொண்டு உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவிகளுக்குத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் உங்களிடம் கேட்கலாம். இது அல்லாஹ்வுடைய கட்டளை. அவன் உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும், ஞானமுடையவனும் ஆவான்.
60:10. இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைநம்பிக்கையுடைய பெண்கள் நாடு துறந்து உங்களிடம் வந்தார்களாயின் (அவர்கள் நம்பிக்கையாளர்களா என்பதனைச்) சோதித்துப் பாருங்கள். அவர்களுடைய நம்பிக்கையின் உண்மைநிலையை அல்லாஹ்தான் நன்கறிவான். மேலும், அவர்கள் நம்பிக்கையாளர்கள்தாம் என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டால் நிராகரிப்பாளர்களிடம் அவர்களைத் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு (மனைவியாக இருக்க) ஆகுமானவர்களல்லர். நிராகரிப்பாளர்களும் அவர்களுக்கு ஆகுமானவர்கள் அல்லர். அவர்களுடைய (நிராகரிப்பாளர்களான) கணவன்மார்கள் அவர்களுக்கு அளித்திருந்த மஹ்ரை* அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். மேலும், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை, நீங்கள் அவர்களுக்குரிய மஹ்ரை அவர்களுக்குக் கொடுத்துவிட்டால்! மேலும், இறைவனை நிராகரித்துவிட்ட பெண்களை நீங்களும் திருமண உறவில் வைத்துக் கொள்ளாதீர்கள். நிராகரிப்பாளர்களான உங்கள் மனைவிமார்களுக்கு நீங்கள் கொடுத்திருந்த மஹ்ரை அவர்களிடம் திரும்பக்கேளுங்கள். மேலும், நிராகரிப்பாளர்கள் தங்களின் முஸ்லிமான மனைவிமார்களுக்குக் கொடுத்திருந்த மஹ்ரை அவர்களும் திரும்பக் கேட்கட்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் உங்களிடையே தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், அவன் மிக அறிந்தவனாகவும் நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான்.
60:10. விசுவாசங்கொண்டோரே! விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத்துச் செய்தவர்களாக உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப்பாருங்கள், அவர்களுடைய விசுவாசத்தை அல்லாஹ் மிக அறிந்தவன், ஆகவே, (நீங்கள் சோதித்ததில்) அவர்களை விசுவாசிகளான பெண்கள் தாம் என்று நீங்கள் அறிந்தால், அவர்களை நிராகரிப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள், (ஏனென்றால் இஸ்லாத்திற்கு வந்த பெண்களாகிய) அவர்கள், அவர்களுக்கு (மனைவியராக இருக்க) ஆகுமானவர்களல்லர், அவர்களும் இவர்களுக்கு(க் கணவர்களாக இருக்கவும்) ஆகுமானவர்களல்லர், (எனினும், இப்பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததையும் அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள், நீங்கள் அவர்களுக்கு அவர்களுடைய மஹர்களைக் கொடுத்துவிடுவீர்களானால் அவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்வதும் உங்கள் மீது குற்றமில்லை, மேலும், விசுவாசங்கொள்ளாத அவர்களின் விவாக பந்தங்களை நீங்கள் பற்றிப்பிடிக்கவேண்டாம், (அவர்களின் பந்தங்களை நீக்கி விவாகரத்துச் செய்து விடுங்கள், அவர்களுக்காக) நீங்கள் செலவு செய்ததையும் (அப்பெண்கள் சென்றிருக்கும் நிராகரிப்போரிடம்) கேளுங்கள், (உங்களிடம் வந்துவிட்ட அவர்களுடைய மனைவியருக்குத்) தாங்கள் செலவு செய்ததையும் அவர்கள் (உங்களிடம்) கேட்கட்டும், இது அல்லாஹ்வுடைய தீர்ப்பாகும், அவன் உங்களுக்கிடையில் (நீதமாகவே) தீர்ப்பளிக்கிறான், மேலும், அல்லாஹ் (யாவையும்) நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.
60:11
60:11 وَاِنْ فَاتَكُمْ شَىْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰ تُوا الَّذِيْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَاۤ اَنْفَقُوْا‌ ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اَنْـتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ‏
وَاِنْ فَاتَكُمْ தப்பிச் சென்று விட்டால் شَىْءٌ யாராவது مِّنْ اَزْوَاجِكُمْ உங்கள் மனைவிமார்களில் اِلَى الْكُفَّارِ நிராகரிப்பாளர்களிடம் فَعَاقَبْتُمْ நீங்கள் தண்டித்தால் فَاٰ تُوا கொடுத்து விடுங்கள் الَّذِيْنَ எவர்கள் ذَهَبَتْ சென்றுவிட்டார்களோ اَزْوَاجُهُمْ அவர்களுடைய மனைவிமார்கள் مِّثْلَ போன்று مَاۤ اَنْفَقُوْا‌ ؕ அவர்கள் செலவு செய்ததை وَاتَّقُوا அஞ்சிக் கொள்ளுங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْۤ எவன் اَنْـتُمْ நீங்கள் بِهٖ அவனை مُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கிறீர்கள்
60:11. மேலும் உங்கள் மனைவியரிலிருந்து எவரேனும் உங்களைவிட்டுத் தப்பி, காஃபிர்களிடம் சென்ற பின்னர், நீங்கள் போர்ப்பொருள்களை அடைந்தால், எவர்கள் மனைவியர் சென்று விட்டனரோ, அவர்களுக்கு அவர்கள் செலவு செய்தது போன்றதை நீங்கள் கொடுங்கள்; அன்றியும், நீங்கள் எவன் மீது நம்பிக்கை கொண்டு முஃமின்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
60:11. உங்கள் மனைவிகளில் எவளும் உங்களைவிட்டுப் பிரிந்து, நிராகரிப்பவர்களிடம் சென்று (அவளுக்குச் செலவு செய்த பொருள் அவர்களிடமிருந்து கிடைக்காமலும்) இருந்து அதற்காக (அவர்களுடைய நம்பிக்கைகொண்ட மனைவிகளுக்காகக் கொடுக்க வேண்டியதை) நீங்கள் நிறுத்திக் கொண்டுமிருந்தால் (அல்லது நிராகரிப்பவர்களுடன் போர் ஏற்பட்டு அவர்களுடைய பொருளை நீங்கள் அடைந்தாலும்) அதிலிருந்து (உங்களில்) எவருடைய மனைவி நிராகரிப்பவர்களிடம் சென்று விட்டாளோ அவளுக்காக, (அவளுடைய கணவன்) செலவு செய்தது போன்றதைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். அவனையே நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்.
60:11. மேலும், இறைநிராகரிப்பாளர்களான உங்களுடைய மனைவிமார்களின் மஹ்ரில் சிறிதளவு நிராகரிப்பாளர்களிடமிருந்து உங்களுக்குத் திரும்பக் கிடைக்கவில்லையாயின், பின்னர் உங்கள் முறை வரும்போது உங்களில் யாருடைய மனைவிமார்கள் அங்கே சென்று விட்டார்களோ, அந்தக் கணவன்மார்களுக்கு கொடுத்துவிடுங்கள் அவர்கள் வழங்கிய மஹ்ருக்குச் சமமான தொகையை! மேலும், எந்த இறைவன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ அவனுக்கு அஞ்சி வாழுங்கள்.
60:11. உங்கள் மனைவியரிலிருந்து (மதம்மாறி) எவரேனும் உங்களை விட்டும் நிராகரிப்பவர்கள் பால் தப்பிச்சென்றுவிட்டால், பின்னர் நீங்கள் (அவர்களுடன் போர்செய்து அவர்களிடமிருந்து) போர்ப் பொருள்களை அடைந்தால், எவர்களின் மனைவியர்கள் சென்றுவிட்டனரோ அவர்களுக்கு அவர்கள் செலவு செய்தது போன்றதைக் கொடுத்துவிடுங்கள், மேலும், எவனை நீங்கள் விசுவாசம் கொண்டுள்ளீர்களோ அத்தகைய அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்.
60:12
60:12 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ يُبَايِعْنَكَ عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ بِاللّٰهِ شَيْــٴًــا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا يَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا يَاْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَهٗ بَيْنَ اَيْدِيْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا يَعْصِيْنَكَ فِىْ مَعْرُوْفٍ‌ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! اِذَا جَآءَكَ உம்மிடம் வந்தால் الْمُؤْمِنٰتُ முஃமினான பெண்கள் يُبَايِعْنَكَ உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ அவர்கள் இணைவைக்க மாட்டார்கள் بِاللّٰهِ அல்லாஹ்விற்கு شَيْــٴًــا எதையும் وَّلَا يَسْرِقْنَ இன்னும் திருட மாட்டார்கள் وَلَا يَزْنِيْنَ இன்னும் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் وَلَا يَقْتُلْنَ இன்னும் கொலை செய்ய மாட்டார்கள் اَوْلَادَهُنَّ தங்கள் குழந்தைகளை وَلَا يَاْتِيْنَ இன்னும் கொண்டுவர மாட்டார்கள் بِبُهْتَانٍ ஒரு பொய்யை يَّفْتَرِيْنَهٗ அதை தாங்கள் இட்டுக்கட்டுகின்றனர் بَيْنَ முன்னர் اَيْدِيْهِنَّ தங்கள் கைகள் وَاَرْجُلِهِنَّ இன்னும் தங்கள் கால்களுக்கு وَلَا يَعْصِيْنَكَ இன்னும் உமக்கு அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள் فِىْ مَعْرُوْفٍ‌ நல்ல காரியங்களில் فَبَايِعْهُنَّ அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக! وَاسْتَغْفِرْ பாவமன்னிப்புக் கோருவீராக! لَهُنَّ அவர்களுக்காக اللّٰهَ‌ؕ அல்லாஹ்விடம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
60:12. நபியே! நம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, ‘‘அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை, திருடுவதில்லை, விபசாரம் செய்வதில்லை, தங்கள் (பெண்) சந்ததிகளைக் கொலை செய்வதில்லை, தங்கள் கை கால்கள் அறிய (அதாவது: பொய்யெனத் தெரிந்தே) கற்பனையாக அவதூறு கூறுவது இல்லை'' என்று உம்மிடம் (பைஅத்து கொடுத்து) வாக்குறுதி செய்தால், அவர்களுடைய வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, நீர் அவர்களுக்காக (முன்னர் அவர்கள் செய்துவிட்ட குற்றங்களை) அல்லாஹ்விடம் மன்னிக்கக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
60:12. நபியே! இறைநம்பிக்கைகொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணைவைக்கமாட்டார்கள் என்றும், திருடமாட்டார்கள் என்றும், விபச்சாரம் செய்ய மாட்டார்கள் என்றும், தம்முடைய குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள் என்றும் தங்களுடைய கைகால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்றும், எந்த ஒரு நல்ல காரியத்திலும் உமக்கு மாறு செய்யமாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிடமிருந்து விசுவாசப்பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். திண்ணமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கருணைபுரிபவனுமாய் இருக்கின்றான்.
60:12. நபியே! “அல்லாஹ்விற்கு எப்பொருளையும் அவர்கள் இணை வைப்பதில்லை என்றும், திருடுவதில்லை என்றும், விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் (பெண்) பிள்ளைகளைக் கொலை செய்வதில்லை என்றும், தங்களுடைய கைகளுக்கும் தங்கள் கால்களுக்குமிடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ அவ்வாறான அவதூறை இட்டுக்கட்டுவதில்லை என்றும், நன்மையானவற்றில் உமக்கு மாறு செய்வதுமில்லை என்றும் உம்மிடம் வாக்குறுதியை(பைஅத்து_) செய்ய விசுவாசிகளான பெண்கள் உம்மிடம் வந்தால், அவர்களுடன் நீர் வாக்குறுதி செய்து கொள்வீராக! இன்னும், நீர் அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக்கிருபையுடைவன்.
60:13
60:13 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ قَدْ يَــٮِٕـسُوْا مِنَ الْاٰخِرَةِ كَمَا يَــٮِٕـسَ الْكُفَّارُ مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تَتَوَلَّوْا நீங்கள் நேசிக்காதீர்கள் قَوْمًا மக்களை غَضِبَ கோபித்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது قَدْ يَــٮِٕـسُوْا திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள் مِنَ الْاٰخِرَةِ மறுமை விஷயத்தில் كَمَا يَــٮِٕـسَ நம்பிக்கை இழந்ததைப் போல் الْكُفَّارُ நிராகரிப்பாளர்கள் مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ‏ புதைக்குழிகளில் சென்றவர்கள்
60:13. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
60:13. நம்பிக்கையாளர்களே! எந்த மக்களின் மீது அல்லாஹ் கோபப்பட்டானோ அவர்களை நீங்கள் நேசிக்காதீர்கள். சமாதிகளில் இருப்பவர்களைப்பற்றி நிராகரிப்பவர்கள் (அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட மாட்டார்கள் என) நம்பிக்கை இழந்தபடியே, மறுமையைப் பற்றி நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
60:13. இறைநம்பிக்கைகொண்டவர்களே! எந்த மக்களின் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கின்றானோ அந்த மக்களுடன் நீங்கள் நட்புக்கொள்ளாதீர்கள். மறுமை குறித்து அவர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள்; மண்ணறைகளில் அடங்கி விட்டிருக்கும் நிராகரிப்பாளர்கள் நம்பிக்கை இழந்திருப்பது போலவே!
60:13. விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டுவிட்டானோ அந்த சமூகத்தாரை நீங்கள் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (ஏனெனில்) மண்ணறைவாசிகளைப் பற்றி (அவர்கள் திரும்பி வர மாட்டார்களென) நிராகரிப்போர் நம்பிக்கையிழந்தவாறே, மறுமையைப்பற்றி நிச்சயமாக இவர்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்.