61. ஸூரத்துஸ் ஸஃப்ஃபு (அணிவகுப்பு)
மதனீ, வசனங்கள்: 14

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
61:1
61:1 سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
سَبَّحَ துதிக்கின்றார்கள் لِلّٰهِ அல்லாஹ்வை مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவர்களும் وَمَا فِى الْاَرْضِ‌ۚ பூமியில் உள்ளவர்களும் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
61:1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருக்கின்றன; அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
61:1. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
61:1. வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் அல்லாஹ்வைத் துதிக்கின்றது. மேலும், அவன் யாவற்றையும் மிகைத்தோன்; நுண்ணறிவாளன்!
61:1. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவனே (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
61:2
61:2 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لِمَ تَقُوْلُوْنَ ஏன் கூறுகிறீர்கள்? مَا لَا تَفْعَلُوْنَ‏ நீங்கள் செய்யாதவற்றை
61:2. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
61:2. நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களை (செய்ததாக பிறரிடம்) ஏன் கூறுகிறீர்கள்?
61:2. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கின்றீர்கள்?
61:2. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் கூறுகின்றீர்கள்.
61:3
61:3 كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ‏
كَبُرَ مَقْتًا பெரும் கோபத்திற்குரியது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் اَنْ تَقُوْلُوْا நீங்கள் கூறுவது مَا لَا تَفْعَلُوْنَ‏ நீங்கள் செய்யாதவற்றை
61:3. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
61:3. நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும் பாவமாக இருக்கிறது.
61:3. நீங்கள் செய்யாதவற்றைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரிய செயலாகும்.
61:3. நீங்கள் செய்யாததை(ப்பிறருக்குச் செய்ய)க் கூறுவது அல்லாஹ்விடத்தில் வெறுப்பால் மிகப்பெரிதாகிவிட்டது.
61:4
61:4 اِنَّ اللّٰهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِهٖ صَفًّا كَاَنَّهُمْ بُنْيَانٌ مَّرْصُوْصٌ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُحِبُّ விரும்புகின்றான் الَّذِيْنَ يُقَاتِلُوْنَ போர் புரிபவர்களை فِىْ سَبِيْلِهٖ அவனுடைய பாதையில் صَفًّا வரிசையாக நின்று كَاَنَّهُمْ بُنْيَانٌ அவர்களோ கட்டிடத்தைப் போல் مَّرْصُوْصٌ‏ உறுதியான(து)
61:4. எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
61:4. (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட பலமான அரணைப்போல அணியில் (இருந்து பின்வாங்காது) நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்.
61:4. எவர்கள் அல்லாஹ்வுடைய வழியில் ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று உறுதியாக அணிவகுத்து நின்று போர்புரிகின்றார்களோ அவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
61:4. (விசுவாசிகளே!) நிச்சயமாக அல்லாஹ் ஒன்றோடொன்று இணைந்(து அசையா)திருக்கும் கட்டிடத்தைப் போன்று அணியில் (இருந்து புறமுதுகிடாது) நின்றவர்களாக அவனுடைய பாதையில் யுத்தம் புரிகிறார்களே அத்தகையோரை நேசிக்கின்றான்.
61:5
61:5 وَاِذْ قَالَ مُوْسٰى لِقَوْمِهٖ يٰقَوْمِ لِمَ تُؤْذُوْنَنِىْ وَقَدْ تَّعْلَمُوْنَ اَنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْؕ فَلَمَّا زَاغُوْۤا اَزَاغَ اللّٰهُ قُلُوْبَهُمْ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! مُوْسٰى மூஸா لِقَوْمِهٖ தனது மக்களுக்கு يٰقَوْمِ என் மக்களே! لِمَ تُؤْذُوْنَنِىْ எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்? وَقَدْ திட்டமாக تَّعْلَمُوْنَ நீங்கள் அறிவீர்கள் اَنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَيْكُمْؕ உங்களுக்கு فَلَمَّا زَاغُوْۤا அவர்கள் சருகிய போது اَزَاغَ திருப்பிவிட்டான் اللّٰهُ அல்லாஹ்(வும்) قُلُوْبَهُمْ‌ؕ அவர்களின் உள்ளங்களை وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الْفٰسِقِيْنَ‏ பாவிகளான
61:5. மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: “என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.
61:5. மூஸா தன் மக்களை நோக்கி ‘‘என் மக்களே! என்னை ஏன் நீங்கள் துன்புறுத்துகிறீர்கள். மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதர் என்பதை நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்களே'' என்று கூறியதை (நபியே! நீர்) நினைத்துப் பார்ப்பீராக. (நேரான பாதையிலிருந்து) அவர்கள் விலகவே, அல்லாஹ்வும் அவர்களுடைய உள்ளங்களை (நேரான பாதையிலிருந்து) திருப்பிவிட்டான். பாவம் செய்யும் மக்களை அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துவதில்லை.
61:5. மேலும், மூஸா தன் சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “என் சமூக மக்களே! எனக்கு ஏன் துன்பம் அளிக்கின்றீர்கள்? நான் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்காக அனுப்பப்பட்ட தூதராவேன் என்பதை நீங்கள் நன்கு அறிந்திருக்கின்றீர்கள்.” பின்னர் அவர்கள் கோணல் வழியை மேற்கொண்டபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களைக் கோணலாக்கிவிட்டான். மேலும், பாவிகளுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
61:5. மேலும், மூஸா தன் சமூகத்தாரிடம், “என்னுடைய சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்கள்பால் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய தூதனாக இருக்கிறேன் என்பதை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்தவர்களாக இருக்க, என்னை ஏன் நீங்கள் துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறியதை_(நபியே! நீர் நினைவு கூர்வீராக! பின்னர், (நேர்வழியிலிருந்து) அவர்கள் சறுகிய பொழுது அல்லாஹ்வும் அவர்களுடைய இதயங்களை (நேர் வழியிலிருந்து) சறுகச் செய்துவிட்டான், அன்றியும் பாவிகளான சமூகத்தாரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்தமாட்டான்.
61:6
61:6 وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ‌ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‏
وَاِذْ قَالَ கூறியதை நினைவு கூர்வீராக! عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களே! اِنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَيْكُمْ உங்களுக்கு مُّصَدِّقًا நான் உண்மைப்படுத்துகின்றேன் لِّمَا بَيْنَ يَدَىَّ எனக்கு முன்னுள்ளதை مِنَ التَّوْرٰٮةِ தவ்றாத்தை وَمُبَشِّرًۢا இன்னும் நற்செய்தி கூறுகின்றேன் بِرَسُوْلٍ ஒரு தூதரை يَّاْتِىْ வருகின்றார் مِنْۢ بَعْدِى எனக்குப் பின் اسْمُهٗۤ அவரது பெயர் اَحْمَدُ‌ؕ அஹ்மத் فَلَمَّا جَآءَ அவர் வந்த போது هُمْ அவர்களிடம் بِالْبَيِّنٰتِ அத்தாட்சிகளுடன் قَالُوْا கூறினார்கள் هٰذَا இது سِحْرٌ சூனியமாகும் مُّبِيْنٌ‏ தெளிவான
61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
61:6. மர்யமுடைய மகன் ஈஸா (இஸ்ராயீலின் சந்ததிகளை நோக்கி) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! மெய்யாகவே நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வுடைய ஒரு தூதர் ஆவேன். நான் எனக்கு முன்னுள்ள தவ்றாத்தையும் உண்மைப் படுத்துகிறேன். எனக்குப் பின்னர் ‘அஹ்மது' என்னும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும் நான் உங்களுக்கு நற்செய்தி கூறுகிறேன்'' என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அவர் அறிவித்தவாறு அத்தூதர்) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்த (இச்)சமயத்தில் (அவரை நம்பிக்கை கொள்ளாது,) இது தெளிவான சூனியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
61:6. மர்யத்தின் குமாரர் ஈஸா இவ்வாறு கூறியதையும் நினைவு கூருங்கள்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் அல்லாஹ்வினால் உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கும் தூதராவேன். நான், எனக்கு முன்பே வந்துள்ள ‘தவ்ராத்’ வேதத்தை மெய்ப்படுத்தக்கூடியவனாய் இருக்கின்றேன். மேலும், எனக்குப் பிறகு அஹமத் எனும் பெயருடைய ஒரு தூதர் வருவார் என்று நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கின்றேன்.” எனினும் அவர் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது, இது வெளிப்படையான மோசடி என்று அவர்கள் கூறினார்கள்.
61:6. மேலும், மர்யமின் புதல்வர் ஈஸா, “இஸ்ராயீலின் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தியவனாகவும், எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயருள்ள ஒரு தூதர் வருவார் என நன்மாராயம் கூறுபவனாகவும் நிச்சயமாக உங்கள்பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராக நான் இருக்கிறேன்” என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக) பின்னர், (அவர் கூறியவாறு) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் (அத்தூதராகிய) அவர் வந்தபொழுது, இது தெளிவான சூனியம்” என்று அவர்கள் கூறினர்.
61:7
61:7 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ وَهُوَ يُدْعٰٓى اِلَى الْاِسْلَامِ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
وَمَنْ யார்? اَظْلَمُ அநியாயக்காரர் مِمَّنِ افْتَـرٰى இட்டுக் கட்டுபவரை விட عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது الْكَذِبَ பொய்யை وَهُوَ அவரோ يُدْعٰٓى அழைக்கப்படுகிறார் اِلَى الْاِسْلَامِ‌ ؕ அல்லாஹ்வின் பக்கம் وَاللّٰهُ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார(ர்கள்)
61:7. மேலும், எவன் இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்? அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
61:7. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் சொல்பவனைவிட அநியாயக்காரன் யார்? அவன் (நபி இப்ராஹீமின் மார்க்கமாகிய) இஸ்லாமின் பக்கம் அழைக்கப்ப(ட்)டு(ம் அவன் அதை நிராகரிக்)கிறான். இத்தகைய அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்.
61:7. அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைப்பவனைவிட கொடுமைக்காரன் வேறு யார்? அதுவும் இஸ்லாத்தின் பக்கம் (முற்றிலும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதின் பக்கம்) வருமாறு அவனுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில்! இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
61:7. மேலும் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட மிக அநியாயக்காரன் யார்? அவனோ இஸ்லாத்தின்பால் (அதில் இணைந்துகொள்ள) அழைக்கப்படுகிறான், மேலும், (அதனை நிராகரித்த) அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர் வழியில் செலுத்தமாட்டான்.
61:8
61:8 يُرِيْدُوْنَ لِيُطْفِـــٴُــوْا نُوْرَ اللّٰهِ بِاَ فْوَاهِهِمْ وَاللّٰهُ مُتِمُّ نُوْرِهٖ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ‏
يُرِيْدُوْنَ அவர்கள் நாடுகின்றனர் لِيُطْفِـــٴُــوْا அவர்கள் அணைத்துவிட نُوْرَ ஒளியை اللّٰهِ அல்லாஹ்வின் بِاَ فْوَاهِهِمْ தங்களது வாய்களினால் وَاللّٰهُ அல்லாஹ் مُتِمُّ முழுமைப்படுத்துவான் نُوْرِهٖ தனது ஒளியை وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் சரியே! الْكٰفِرُوْنَ‏ நிராகரிப்பாளர்கள்
61:8. அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
61:8. அல்லாஹ்வுடைய பிரகாசத்தைத் தன் வாயினால் ஊதி அணைத்து விடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். இந்நிராகரிப்பவர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் பிரகாசத்தை (உலகமெங்கும் ஜொலிக்கும்படி) முழுமையாகவே ஆக்கிவைப்பான்.
61:8. இவர்கள், அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களால் ஊதி அணைத்துவிட விரும்புகின்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் முடிவு என்னவெனில் தன் ஒளியை முழுமையாகப் பரப்பியே தீர்வது என்பதாகும்; இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
61:8. அல்லாஹ்வின் பிரகாசத்தைத் தம் வாய்களினால் (ஊதி) அணைத்துவிட அவர்கள் நாடுகின்றனர், நிராகரிப்போர் வெறுத்தபோதிலும், அல்லாஹ்வோ தன்னுடைய பிரகாசத்தைப் பூர்த்தியாக ஆக்கிவைக்கக்கூடியவன்.
61:9
61:9 هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ‏
هُوَ الَّذِىْۤ அவன்தான் اَرْسَلَ அனுப்பினான் رَسُوْلَهٗ தனது தூதரை بِالْهُدٰى நேர்வழியைக் கொண்டும் وَدِيْنِ الْحَـقِّ இன்னும் சத்திய மார்க்கத்தை لِيُظْهِرَهٗ அதை மேலோங்க வைப்பதற்காக عَلَى الدِّيْنِ كُلِّهٖ எல்லா மார்க்கங்களை விட وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் சரியே! الْمُشْرِكُوْنَ‏ இணைவைப்பவர்கள்
61:9. (இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான்.
61:9. அவன்தான் தன் (இத்)தூதரை நேரான வழியைக்கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். (ஈஸாவை அல்லாஹ்வுடைய மகனென்று, அவனுக்கு) இணை வைத்து வணங்கும் இவர்கள் வெறுத்தபோதிலும், எல்லா மார்க்கங்களையும் அது வென்ன்ற தீரும்.
61:9. அவன்தான் தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், சத்தியமார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான். ஏனைய மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக; இணைவைப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!
61:9. அவன் எத்தகையோனென்றால், அவன் தன்னுடைய தூதரை நேர் வழியைக் கொண்டும், உண்மையான மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான், இணைவைத்துக்கொண்டிருப்போர் வெறுத்த போதிலும், மற்ற ஏனைய எல்லா மார்க்கங்களைவிட அதை மேலோங்கச் செய்யவே_(தன் தூதரை அனுப்பி வைத்தான்.)
61:10
61:10 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا هَلْ اَدُلُّكُمْ عَلٰى تِجَارَةٍ تُنْجِيْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! هَلْ اَدُلُّكُمْ உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? عَلٰى تِجَارَةٍ ஒரு வியாபாரத்தை تُنْجِيْكُمْ அது உங்களை பாதுகாக்கும் مِّنْ عَذَابٍ தண்டனையை விட்டும் اَلِيْمٍ‏ வலி தரக்கூடிய(து)
61:10. ஈமான் கொண்டவர்களே! நோவினை செய்யும் வேதனையிலிருந்து உங்களை ஈடேற்றவல்ல ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
61:10. நம்பிக்கையாளர்களே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அது துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.
61:10. இறைநம்பிக்கைகொண்டவர்களே! துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றக்கூடிய வியாபாரத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?
61:10. விசுவாசங்கொண்டோரே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? துன்புறுத்தும் வேதனையிலிருந்து அது உங்களை ஈடேற்றும்.
61:11
61:11 تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَتُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ‌ؕ ذٰلِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَۙ‏
تُؤْمِنُوْنَ நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَرَسُوْلِهٖ அவனது தூதரையும் وَتُجَاهِدُوْنَ இன்னும் ஜிஹாது செய்யுங்கள்! فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் بِاَمْوَالِكُمْ உங்கள் செல்வங்களாலும் وَاَنْفُسِكُمْ‌ؕ உங்கள் உயிர்களாலும் ذٰلِكُمْ அதுதான் خَيْرٌ சிறந்தது لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَۙ‏ அறிபவர்களாக
61:11. (அது) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொண்டு, உங்கள் பொருள்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது (அறப்போர்) செய்வதாகும்; நீங்கள் அறிபவர்களாக இருப்பின், இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
61:11. (அதாவது:) அல்லாஹ்வையும், அவனுடைய (இத்)தூதரையும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருள்களையும், உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களானால் இதுவே உங்களுக்கு மிக மேலானதாக இருக்கும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்).
61:11. அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், அல்லாஹ்வின் வழியில் உங்கள் பொருள்களாலும் உயிர்களாலும் ஜிஹாத்* செய்யுங்கள். நீங்கள் அறியக்கூடியவர்களாயின், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.
61:11. (அத்தகைய வியாபாரமாவது:) நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய (இத்) தூதரையும் ஈமான் கொண்டு, உங்களுடைய பொருட்களையும், உங்களுடைய உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் (ஜிஹாது) செய்வீர்கள், நீங்கள் அறியக்கூடியவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்.
61:12
61:12 يَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ وَيُدْخِلْكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ‌ؕ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُۙ‏
يَغْفِرْ அவன் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு ذُنُوْبَكُمْ உங்கள் பாவங்களை وَيُدْخِلْكُمْ இன்னும் உங்களை நுழைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் وَمَسٰكِنَ இன்னும் தங்குமிடங்களில் طَيِّبَةً உயர்ந்த فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் عَدْنٍ‌ؕ அத்ன் ذٰلِكَ இதுதான் الْفَوْزُ الْعَظِيْمُۙ‏ மகத்தான வெற்றி
61:12. அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; சுவனபதிகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அன்றியும், நிலையான அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளின் மணம் பொருந்திய இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு; இதுவே மகத்தான பாக்கியமாகும்.
61:12. (அவ்வாறு செய்தால்) உங்கள் பாவங்களை மன்னித்து, சொர்க்கங்களிலும் உங்களைப் புகுத்துவான். அவற்றில் நீரருவிகள் ஓடிக்கொண்டே இருக்கும். மேலும், நிலையான சொர்க்கத்திலுள்ள மேலான இருப்பிடங்களும் (உங்களுக்கு) உண்டு. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
61:12. அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், தோட்டங்களில் உங்களை நுழையச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். நிலைத்திருக்கும் சுவனங்களில் மிகச்சிறந்த இல்லங்களையும் உங்களுக்கு வழங்குவான். இதுவே மகத்தான வெற்றியாகும்.
61:12. (அவ்வாறு நீங்கள் செய்தால்) அவன் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னித்துவிடுவான், மேலும் சுவனங்களில் உங்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், மேலும், (அத்னு எனும்) நிலையான சுவனங்களில் (உள்ள) நல்ல இருப்பிடங்களிலும் (உங்களைப் பிரவேசிக்கச் செய்வான்), அதுவே மகத்தான வெற்றியாகும்.
61:13
61:13 وَاُخْرٰى تُحِبُّوْنَهَا‌ ؕ نَصْرٌ مِّنَ اللّٰهِ وَفَـتْحٌ قَرِيْبٌ‌ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
وَاُخْرٰى வேறு ஒன்றும் تُحِبُّوْنَهَا‌ ؕ அதை நீங்கள் விரும்புவீர்கள் نَصْرٌ உதவியும் مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் புறத்தில் இருந்து وَفَـتْحٌ வெற்றியும் قَرِيْبٌ‌ ؕ வெகு விரைவில் وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
61:13. அன்றியும் நீங்கள் நேசிக்கும் வேறொன்றும் உண்டு; (அதுதான்) அல்லாஹ்விடமிருந்து உதவியும், நெருங்கி வரும் வெற்றியுமாகும்; எனவே ஈமான் கொண்டவர்களுக்கு (இதைக் கொண்டு) நன்மாராயம் கூறுவீராக!
61:13. நீங்கள் விரும்பக்கூடிய மற்றொன்றும் உண்டு. அது அல்லாஹ்வுடைய உதவியும், சமீபத்தில் கிடைக்கக் கூடிய ஒரு வெற்றியும். (ஆகவே, நபியே! இதைக் கொண்டு) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
61:13. மேலும், நீங்கள் விரும்பும் இன்னொன்றையும் உங்களுக்கு நல்குவான். அல்லாஹ்விடமிருந்து கிட்டும் உதவியும் அண்மையிலேயே கிடைக்கவிருக்கும் வெற்றியுமாகும் அது! (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு இந்த நற்செய்தியை அறிவித்துவிடும்.
61:13. வேறொன்று(மான வியாபாரமும் உண்டு, அதை நீங்கள் விரும்புகிறீர்கள், (அதுவே) அல்லாஹ்விடமிருந்து உதவியும், சமீபித்து வரும் வெற்றியுமாகும், இன்னும், (நபியே! இதனைக் கொண்டு) நீர் விசுவாசிகளுக்கு நன்மாராயம் கூறுவீராக.
61:14
61:14 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ فَاٰمَنَتْ طَّآٮِٕفَةٌ مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَكَفَرَتْ طَّآٮِٕفَةٌ ۚ فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِيْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! كُوْنُوْۤا நீங்கள் ஆகிவிடுங்கள் اَنْصَارَ உதவியாளர்களாக اللّٰهِ அல்லாஹ்வின் كَمَا قَالَ கூறியதைப் போன்று عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் لِلْحَوٰارِيّٖنَ உற்ற தோழர்களை நோக்கி مَنْ யார் اَنْصَارِىْۤ எனது உதவியாளர்கள் اِلَى اللّٰهِ‌ؕ அல்லாஹ்விற்காக قَالَ கூறினார்(கள்) الْحَـوٰرِيُّوْنَ உற்றதோழர்கள் نَحْنُ நாங்கள் اَنْصَارُ உதவி செய்பவர்கள் اللّٰهِ‌ அல்லாஹ்விற்கு فَاٰمَنَتْ ஆகவே நம்பிக்கை கொண்டது طَّآٮِٕفَةٌ ஒரு பிரிவு مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களில் وَكَفَرَتْ இன்னும் நிராகரித்தது طَّآٮِٕفَةٌ ۚ ஒரு பிரிவு فَاَيَّدْنَا ஆகவே, நாம் பலப்படுத்தினோம் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை عَلٰى عَدُوِّهِمْ அவர்களின் பகைவர்களுக்கு எதிராக فَاَصْبَحُوْا ஆகவே ஆகிவிட்டார்கள் ظٰهِرِيْنَ‏ வெற்றியாளர்களாக
61:14. ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
61:14. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன் தோழர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?'' என்று கேட்ட சமயத்தில், ‘‘நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்'' என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.) எனினும், இஸ்ராயீலின் சந்ததிகளில் ஒரு கூட்டத்தினர்தான் (அவரை) நம்பிக்கை கொண்டனர். மற்றொரு கூட்டத்தினர் (அவரை) நிராகரித்தனர். ஆகவே, நம்பிக்கை கொண்ட அவர்களுக்கு, அவர்களுடைய எதிரியின் மீது (வெற்றி பெற) உதவி புரிந்தோம். ஆகவே, அவர்கள் வெற்றி பெற்றவர்களாகிவிட்டார்கள்.
61:14. இறைநம்பிக்கையாளர்களே மர்யத்தின் குமாரர் ஈஸா தம் சீடர்களை நோக்கி, “இறைவனின்பால் அழைப்பதில் எனக்கு உதவிபுரிபவர் யார்?” எனக் கேட்டபோது, “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளராக இருக்கின்றோம்” என சீடர்கள் மறுமொழி அளித்ததைப்போல் நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளராகத் திகழுங்கள். அப்போது இஸ்ராயீலின் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவினர் நம்பிக்கைகொண்டார்கள். மற்றொரு பிரிவினர் நிராகரித்துவிட்டார்கள். பின்னர், நாம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவருக்கெதிராக உதவி நல்கினோம். மேலும் அவர்களே வெற்றியாளர்களாய்த் திகழ்ந்தார்கள்!
61:14. விசுவாசங்கொண்டோரே! மர்யமின் புதல்வர் ஈஸா தன் சீடர்களிடம் “அல்லாஹ்வின்பால் (அவன் மார்க்கத்திற்காக) எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக்கேட்க, அச்சீடர்கள் “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள்” எனக்கூறியது போன்று அல்லாஹ்வின் உதவியாளர்களாக நீங்கள் ஆகிவிடுங்கள், (பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளில் ஒரு கூட்டம் விசுவாசம் கொண்டது, மற்றொரு கூட்டமோ நிராகரித்தது, ஆகவே, விசுவாசம் கொண்டிருந்தோரை அவர்களின் விரோதிகளுக்கெதிராக நாம் பலப்படுத்தி (வெற்றியை நல்கி)னோம், ஆகவே, அவர்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டனர்.