65. ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து)
மதனீ, வசனங்கள்: 12

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
65:1
65:1 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ‌ ۚ لَا تُخْرِجُوْهُنَّ مِنْۢ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ‌ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ ؕ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ‌ ؕ لَا تَدْرِىْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰ لِكَ اَمْرًا‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! اِذَا طَلَّقْتُمُ நீங்கள் விவாகரத்து செய்தால் النِّسَآءَ பெண்களை فَطَلِّقُوْهُنَّ அவர்களை விவாகரத்து செய்யுங்கள் لِعِدَّتِهِنَّ அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு وَاَحْصُوا இன்னும் சரியாக கணக்கிடுங்கள் الْعِدَّةَ ۚ இத்தாவை وَاتَّقُوا இன்னும் அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை رَبَّكُمْ‌ ۚ உங்கள் இறைவனாகிய لَا تُخْرِجُوْهُنَّ அவர்களை வெளியேற்றாதீர்கள் مِنْۢ بُيُوْتِهِنَّ அவர்களின் இல்லங்களில் இருந்து وَلَا يَخْرُجْنَ இன்னும் அவர்களும் வெளியேற வேண்டாம் اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ அவர்கள் செய்தாலே தவிர بِفَاحِشَةٍ தீய செயலை مُّبَيِّنَةٍ‌ ؕ தெளிவான وَتِلْكَ இவை حُدُوْدُ சட்டங்களாகும் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் وَمَنْ எவர் يَّتَعَدَّ மீறுவாரோ حُدُوْدَ சட்டங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَقَدْ திட்டமாக ظَلَمَ அநீதி இழைத்துக் கொண்டார் نَفْسَهٗ‌ ؕ தனக்குத் தானே لَا تَدْرِىْ நீர் அறியமாட்டீர் لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ அல்லாஹ் ஏற்படுத்தலாம் بَعْدَ ذٰ لِكَ இதற்குப் பின்னர் اَمْرًا‏ ஒரு காரியத்தை
65:1. நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது; இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர்.
65:1. நபியே! (நம்பிக்கையாளர்களை நோக்கி நீர் கூறுவீராக:) “நீங்கள் உங்கள் மனைவிகளை ‘தலாக்கு' (விவாகப்பிரிவினை) செய்ய விரும்பினால், அவர்களுடைய (சுத்த காலமான) ‘இத்தா'வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலே தவிர, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்கள்) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதான் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறுகிறார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக்கிடையில் (சமாதானத்திற்குரிய) ஒரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும்.
65:1. (நபியே!) நீங்கள் பெண்களை விவாகரத்து செய்வீர்களாயின் அவர்களின் இத்தா* (காலத்தை நிர்ணயிக்க) வசதியாக விவாகரத்து செய்யுங்கள். மேலும், இத்தாவின் காலத்தைச் சரியாகக் கணக்கிடுங்கள். மேலும், உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (இத்தாகாலத்தில்) அப்பெண்களை அவர்களின் இல்லங்களிலிருந்து நீங்களும் வெளியேற்ற வேண்டாம்; அவர்களாகவும் வெளியேற வேண்டாம். அவர்கள் ஏதேனும் வெளிப்படையான மானக்கேடான செயல்கள் செய்தாலே தவிர இவை அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளாகும். யாரேனும் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவாராயின் திண்ணமாக, அவர் தனக்குத்தானே கொடுமை புரிந்து கொண்டவராவார். இதற்குப் பிறகு (ஒத்துப் போவதற்கான) ஏதேனும் சூழ்நிலையை அல்லாஹ் உருவாக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவது இல்லை.
65:1. நபியே! விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக! நீங்கள் பெண்களை விவாகரத்து செய்(ய முற்படுவீர்களானால், அவர்கள் இத்தா இருப்பதற்குரிய (மாத விலக்கு நீங்கி அப்பெண்கள் சுத்தமாகி தாம்பத்திய உறவின்றி இருக்கும்) சந்தர்ப்பத்தில் விவாகரத்து செய்யுங்கள், இத்தாவையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள், (இவ்விஷயத்தில் உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (நீங்கள் விவாகரத்துக் செய்த) பெண்களை அவர்கள் (இருக்கும் உங்களுடைய வீடுகளிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர், நீங்கள் வெளியேற்றிவிடவும் வேண்டாம், அவர்களும் வெளியேற வேண்டாம், பகிரங்கமான மானக்கேடான காரியத்தை அவர்கள் கொண்டு வந்தாலன்றி, இன்னும், இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும், எவர் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றாரோ, அவர் நிச்சயமாக தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவராவார், அதன் பின்னர் (நீங்கள் சேர்ந்து வாழ) புதிய ஒரு காரியத்தை அல்லாஹ் ஏற்படுத்தி விடலாம் என்பதை நீர் அறியமாட்டீர்.
65:2
65:2 فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ فَارِقُوْهُنَّ بِمَعْرُوْفٍ وَّاَشْهِدُوْا ذَوَىْ عَدْلٍ مِّنْكُمْ وَاَقِيْمُوا الشَّهَادَةَ لِلّٰهِ‌ ؕ ذٰ لِكُمْ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ ۙ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ‏
فَاِذَا بَلَغْنَ அவர்கள் அடைந்து விட்டால் اَجَلَهُنَّ தங்கள் தவணையை فَاَمْسِكُوْ தடுத்து வையுங்கள் هُنَّ அவர்களை بِمَعْرُوْفٍ நல்ல முறையில் اَوْ அல்லது فَارِقُوْ நீங்கள் பிரிந்து விடுங்கள் هُنَّ அவர்களை بِمَعْرُوْفٍ நல்ல முறையில் وَّاَشْهِدُوْا இன்னும் சாட்சியாக்குங்கள் ذَوَىْ عَدْلٍ நீதமான இருவரை مِّنْكُمْ உங்களில் وَاَقِيْمُوا இன்னும் நிலை நிறுத்துங்கள் الشَّهَادَةَ சாட்சியத்தை لِلّٰهِ‌ ؕ அல்லாஹ்விற்காக ذٰ لِكُمْ இவை يُوْعَظُ உபதேசிக்கப் படுகின்றார் بِهٖ இவற்றின் மூலம் مَنْ كَانَ يُؤْمِنُ எவர்/நம்பிக்கை கொண்டிருப்பாரோ بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَالْيَوْمِ الْاٰخِرِ‌ ۙ மறுமை நாளையும் وَمَنْ எவர் يَّـتَّـقِ அஞ்சுவாரோ اللّٰهَ அல்லாஹ்வை يَجْعَلْ ஏற்படுத்துவான் لَّهٗ அவருக்கு مَخْرَجًا ۙ‏ ஒரு தீர்வை
65:2. ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான்.
65:2. அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான முறையில் அவர்களை நீக்கிவிடுங்கள். (இவ்விரண்டில் நீங்கள் எதைச் செய்த போதிலும் அதற்கு) உங்களில் நீதமான இரு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அந்த சாட்சிகள், சாட்சி சொல்ல வந்தால்) அல்லாஹ்வுக்காக உண்மையையே கூறவும். உங்களில் எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ, அவருக்கு இந்நல்லுபதேசம் கூறப்படுகிறது. (தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்ல தீர்வுபெற) வழியை ஏற்படுத்தித் தருவான்.
65:2. அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) இறுதிக் காலகட்டத்தை எட்டிவிட்டால், அவர்களை நல்ல முறையில் (திருமண பந்தத்தில்) நீடித்து இருக்கச் செய்யுங்கள்; அல்லது நல்ல முறையில் அவர்களை விட்டுப் பிரிந்து விடுங்கள். மேலும், உங்களில் நேர்மைமிக்க இருவரைச் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். மேலும், (சாட்சி சொல்பவர்களே!) அல்லாஹ்வுக்காகச் சரியான முறையில் சாட்சியம் வழங்குங்கள். இவற்றின் மூலம் உங்களுக்கும் அறிவுறுத்தப்படுகின்றது; அல்லாஹ்வின் மீதும் இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்ற ஒவ்வொருவருக்கும் அறிவுரை வழங்கப் படுகின்றது. மேலும், யாரேனும் அல்லாஹ்வுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் அல்லாஹ் அவருக்(குச் சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்)கு ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான்.
65:2. ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்து(விட நெருங்கி) விட்டால் (மார்க்கத்தில்) அறியப்பட்டவாறு அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக் கொள்ளுங்கள், அல்லது (மார்க்கத்தில்) அறியப்பட்டவாறு அவர்களைப் பிரித்து) விட்டு விடுங்கள், (அதற்கு) உங்களில் நீதமான இருவரை சாட்சிகளாகவும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் (சாட்சி கூறுபவர்களாகிய) நீங்கள் அல்லாஹ்வுக்காக சரியான முறையில் சாட்சியத்தை நிலைநிறுத்துங்கள், (உங்களில்) யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசிக்கின்றாரோ அவர் இதைக்கொண்டு நல்லுபதேசம் செய்யப்படுகிறார், அன்றியும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு (ஒவ்வொரு சங்கடத்திலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் ஆக்குவான்.
65:3
65:3 وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ‌ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَىْءٍ قَدْرًا‏
وَّيَرْزُقْهُ இன்னும் அவருக்கு உணவளிப்பான் مِنْ حَيْثُ விதத்தில் இருந்து لَا يَحْتَسِبُ‌ ؕ அவர் எண்ணாத وَمَنْ يَّتَوَكَّلْ எவர் நம்பிக்கை வைப்பாரோ عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது فَهُوَ அவனே حَسْبُهٗ ؕ அவருக்குப் போதுமானவன் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بَالِغُ நிறைவேற்றுவான் اَمْرِهٖ‌ ؕ தனது காரியத்தை قَدْ திட்டமாக جَعَلَ ஏற்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் لِكُلِّ شَىْءٍ ஒவ்வொன்றுக்கும் قَدْرًا‏ ஓர் அளவை
65:3. அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
65:3. மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.)
65:3. மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் அல்லாஹ்வையே முழுவதுஞ் சார்ந்திருக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன். திண்ணமாக, அல்லாஹ் தன் பணியை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு விதியை நிர்ணயித்து வைத்திருக்கிறான்.
65:3. மேலும், அவர் எண்ணியிராத விதத்தில் அவருக்கு வாழ்வாதாரங்களை அவன் வழங்குவான், எவர் அல்லாஹ்வின் மீது (தன் காரியத்தை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறாரோ அவருக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன், நிச்சயமாக, அல்லாஹ் தன் காரியத்தை அடைந்தே தீருவான், (ஆயினும்) அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை திட்டமாக நிர்ணயம் செய்திருக்கிறான்.
65:4
65:4 وَالّٰٓـىٴِْ يَٮِٕسْنَ مِنَ الْمَحِيْضِ مِنْ نِّسَآٮِٕكُمْ اِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلٰثَةُ اَشْهُرٍ وَّالّٰٓـىٴِْ لَمْ يَحِضْنَ‌ ؕ وَاُولَاتُ الْاَحْمَالِ اَجَلُهُنَّ اَنْ يَّضَعْنَ حَمْلَهُنَّ ‌ؕ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مِنْ اَمْرِهٖ یُسْرًا‏
وَالّٰٓـىٴِْ எவர்கள் يَٮِٕسْنَ நிராசை அடைந்து விட்டனரோ مِنَ الْمَحِيْضِ மாதவிடாயிலிருந்து مِنْ نِّسَآٮِٕكُمْ உங்கள் பெண்களில் اِنِ ارْتَبْتُمْ நீங்கள் சந்தேகித்தால் فَعِدَّتُهُنَّ அவர்களின் இத்தா ثَلٰثَةُ மூன்று اَشْهُرٍ மாதங்களாகும் وَّالّٰٓـىٴِْ எவர்கள் لَمْ يَحِضْنَ‌ ؕ அவர்கள் மாதவிடாய் வரவில்லை وَاُولَاتُ الْاَحْمَالِ கர்ப்பமுடைய பெண்கள் اَجَلُهُنَّ அவர்களின் தவணை اَنْ يَّضَعْنَ அவர்கள் பெற்றெடுப்பதாகும் حَمْلَهُنَّ ؕ தங்கள் கர்ப்பத்தை وَمَنْ எவர் يَّـتَّـقِ அஞ்சுவாரோ اللّٰهَ அல்லாஹ்வை يَجْعَلْ ஏற்படுத்துவான் لَّهٗ அவருக்கு مِنْ اَمْرِهٖ அவரின் காரியத்தில் یُسْرًا‏ இலகுவை
65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
65:4. (தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கை இழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரை மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரை இருக்கிறது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகிறான்.
65:4. உங்கள் பெண்களில், எவர்கள் ‘இனி மாதவிலக்கு வராது’ என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தாகாலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு வரவில்லையோ அவர்களுக்கான விதிமுறையும் இதுவே! மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன் முடிகின்றது. யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய விவகாரத்தில் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தியிருக்கின்றான்.
65:4. (தலாக் சொல்லப்பட்ட மனைவியராகிய) உங்கள் பெண்களில் மாதவிடாயை விட்டு நம்பிக்கையிழந்து விடுகிறார்களே அத்தகையவர்கள் (அவர்களின் இத்தாவை கணக்கிடுவது பற்றி நீங்கள் சந்தேகப்பட்டால் அப்போது அவர்களின் இத்தா(வின் தவணை) மூன்று மாதங்களாகும், (அவர்களில் சிறார்களுக்கும், பருவமடையும் வயதை அடைந்தும் இதுவரையில்) மாதவிடாயே ஏற்படாதவர்களுக்கும் (இவ்வாறே இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும்.) இன்னும் கர்ப்பமுடையவர்கள் - அவர்களின் (இத்தாகால) தவணையானது, அவர்களின் கர்ப்பத்தை வைத்தல் (பிரசவித்தல்வரை) ஆகும், மேலும் எவர், அல்லாஹ்வைப் பயந்து நடக்கிறாரோ அவருக்கு அவரின் காரியத்தில் அவன் எளியதை ஆக்குவான்.
65:5
65:5 ذٰ لِكَ اَمْرُ اللّٰهِ اَنْزَلَهٗۤ اِلَيْكُمْ‌ ؕ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّاٰتِهٖ وَيُعْظِمْ لَهٗۤ اَجْرًا‏
ذٰ لِكَ اَمْرُ இது/கட்டளையாகும் اللّٰهِ அல்லாஹ்வின் اَنْزَلَهٗۤ இதை இறக்கி இருக்கின்றான் اِلَيْكُمْ‌ ؕ உங்களுக்கு وَمَنْ எவர் يَّـتَّـقِ அஞ்சுவாரோ اللّٰهَ அல்லாஹ்வை يُكَفِّرْ அவன் போக்குவான் عَنْهُ அவரை விட்டும் سَيِّاٰتِهٖ அவரின் பாவங்களை وَيُعْظِمْ இன்னும் பெரிதாக்குவான் لَهٗۤ அவருக்கு اَجْرًا‏ கூலியை
65:5. இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் - இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்.
65:5. அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த கட்டளை இதுதான். ஆகவே, எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்கிறாரோ, அவருடைய பாவங்களை அவன் மன்னித்து, (அவருடைய) கூலியையும் அவருக்கு பெரிதாக்கி விடுகிறான்.
65:5. இது அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கும் கட்டளையாகும். யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய தீமைகளை அவரை விட்டு அல்லாஹ் போக்கிவிடுவான். மேலும், அவருக்குப் பெரும் கூலியையும் வழங்குவான்.
65:5. அது(வே) அல்லாஹ்வின் கட்டளையாகும், அதனை உங்களின்பால் அவன் இறக்கிவைத்தான், எவர் அல்லாஹ்விற்குப் பயந்து நடந்துகொள்கிறாரோ, அவரை அவருடைய தீயவைகளைவிட்டும் நீக்கி அவருக்குக் கூலியை மகத்தானதாகவும் (அல்லாஹ்வாகிய) அவன் ஆக்குகிறான்.
65:6
65:6 اَسْكِنُوْهُنَّ مِنْ حَيْثُ سَكَنْـتُمْ مِّنْ وُّجْدِكُمْ وَلَا تُضَآرُّوْهُنَّ لِتُضَيِّقُوْا عَلَيْهِنَّ‌ ؕ وَاِنْ كُنَّ اُولَاتِ حَمْلٍ فَاَنْفِقُوا عَلَيْهِنَّ حَتّٰى يَضَعْنَ حَمْلَهُنَّ‌‌ ۚ فَاِنْ اَرْضَعْنَ لَـكُمْ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ‌ ۚ وَاْتَمِرُوْا بَيْنَكُمْ بِمَعْرُوْفٍ‌ۚ وَاِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهٗۤ اُخْرٰى ؕ‏
اَسْكِنُوْهُنَّ அவர்களை தங்க வையுங்கள் مِنْ حَيْثُ سَكَنْـتُمْ நீங்கள் தங்கும் இடத்தில் مِّنْ وُّجْدِكُمْ உங்கள் வசதிக்கேற்ப وَلَا تُضَآرُّوْ தீங்கு செய்யாதீர்கள் هُنَّ அவர்களுக்கு لِتُضَيِّقُوْا நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக عَلَيْهِنَّ‌ ؕ அவர்கள் மீது وَاِنْ كُنَّ அவர்கள் இருந்தால் اُولَاتِ حَمْلٍ கர்ப்பம் உள்ள பெண்களாக فَاَنْفِقُوا செலவு செய்யுங்கள் عَلَيْهِنَّ அவர்களுக்கு حَتّٰى வரை يَضَعْنَ அவர்கள் பெற்றெடுக்கின்ற حَمْلَهُنَّ‌ ۚ தங்கள் கர்ப்பத்தை فَاِنْ اَرْضَعْنَ அவர்கள் பாலூட்டினால் لَـكُمْ உங்களுக்காக فَاٰ تُوْهُنَّ அவர்களுக்கு கொடுங்கள் اُجُوْرَهُنَّ‌ ۚ அவர்களின் ஊதியங்களை وَاْتَمِرُوْا ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் بِمَعْرُوْفٍ‌ۚ நல்லதை وَاِنْ تَعَاسَرْتُمْ நீங்கள் சிரமமாகக் கருதினால் فَسَتُرْضِعُ பாலூட்டுவாள் لَهٗۤ அவருக்காக اُخْرٰى ؕ‏ வேறு ஒரு பெண்
65:6. உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
65:6. (‘தலாக்' கூறிய பின்னர் இத்தா இருக்கவேண்டிய உங்கள்) பெண்களை உங்களால் முடிந்தவரை, நீங்கள் இருக்கும் இடத்திலேயே வசித்திருக்கும்படி செய்யுங்கள். அவர்களை நிர்ப்பந்திக்கக் கருதி அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் கர்ப்பமான பெண்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள். (பிரசவித்ததன்) பின்னர் (குழந்தைக்கு) உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் முறையாக பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால், (அக்குழந்தைக்கு) மற்றவளைக் கொண்டும் பால் கொடுக்கலாம்.
65:6. உங்கள் வசதி வாய்ப்புக்கேற்ப நீங்கள் எந்த இடத்தில் வசிக்கின்றீர்களோ அந்த இடத்திலேயே அவர்களை (இத்தா) காலத்தில் வசிக்கச் செய்யுங்கள். அவர்களை நெருக்கடியில் ஆழ்த்துவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். அவர்கள் கர்ப்பிணிகளாய் இருந்தால், குழந்தை பெற்றெடுக்கும் வரையில் அவர்களுக்கு செலவுக்குக் கொடுங்கள். மேலும் அவர்கள் உங்களுக்காக வேண்டி (குழந்தைக்குப்) பாலூட்டினால் அவர்களுக்குரிய ஊதியத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். மேலும், (ஊதியம் பெறும் விஷயத்தை) உங்களுக்கிடையே பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் (நல்ல முறையில்) முடிவுசெய்து கொள்ளுங்கள். ஆயினும் (ஊதியத்தை நிர்ணயிப்பதில்) நீங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கடிக்கு ஆளானால், குழந்தைக்கு வேறொரு பெண் பாலூட்டிக் கொள்ளட்டும்.
65:6. உங்களுடைய வசதிக்குத் தக்கவாறு நீங்கள் குடியிருந்து வரும் இடத்தில் (இத்தாவிலிருக்கும் பெண்களாகிய) அவர்களைக் குடியிருக்கச் செய்யுங்கள், (அப்பெண்களிடமிருந்து ஈடாக எதையும் பெறவோ, அல்லது நிர்ப்பந்தமாக அவர்கள் வெளியேறிவிடவோ உள்ள சூழ்நிலைகளை உருவாக்கி) அவர்களுக்கு நீங்கள் நெருக்கடியை உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாகயிருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரையில் அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள், (பிரசவத்தின்) பின்னர், உங்களுக்காக (குழந்தைக்கு) அவர்கள் பாலூட்டினால், அப்போது (அதற்காக) அவர்களுக்குரிய கூலியையும் அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள், (இதைப்பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் அறியப்பட்ட முறையைக் கொண்டு பேசி முடிவும் செய்து கொள்ளுங்கள், (இது விஷயத்தில் தகராறுகள் உண்டாகி) நீங்கள் ஒருவருக்கொருவர் சிரமம் அடைந்தால் (அப்பொழுது குழந்தையாகிய) அதற்கு மற்றொருத்தி பால் கொடுப்பாள்.
65:7
65:7 لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ‌ؕ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهٗ فَلْيُنْفِقْ مِمَّاۤ اٰتٰٮهُ اللّٰهُ‌ؕ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰٮهَا‌ؕ سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا‏
لِيُنْفِقْ செலவு செய்யட்டும் ذُوْ سَعَةٍ வசதியுடையவர் مِّنْ سَعَتِهٖ‌ؕ தனது வசதியிலிருந்து وَمَنْ எவர் ஒருவர் قُدِرَ நெருக்கடியாக இருக்கின்றதோ عَلَيْهِ அவர் மீது رِزْقُهٗ அவருடைய வாழ்வாதாரம் فَلْيُنْفِقْ அவர்கள் செலவு செய்யட்டும் مِمَّاۤ اٰتٰٮهُ தனக்கு கொடுத்ததில் இருந்து اللّٰهُ‌ؕ அல்லாஹ் لَا يُكَلِّفُ சிரமம் கொடுக்க மாட்டான் اللّٰهُ அல்லாஹ் نَفْسًا ஓர் ஆன்மாவிற்கு اِلَّا தவிர مَاۤ اٰتٰٮهَا‌ؕ அவன் அதற்கு கொடுத்ததை سَيَجْعَلُ ஏற்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் بَعْدَ பின்னர் عُسْرٍ சிரமத்திற்கு يُّسْرًا‏ இலகுவை
65:7. தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்; கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கிரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான்.
65:7. (பால் குடிப்பாட்ட செலவு செய்யும் விஷயத்தில்) வசதியுடையவர் தன் தகுதிக்குத் தக்கவாறு (தாராளமாகச்) செலவு செய்யவும். ஏழ்மையானவர், அல்லாஹ் அவருக்குக் கொடுத்ததிலிருந்துதான் செலவு செய்வார். எம்மனிதனையும் அல்லாஹ் அவனுக்குக் கொடுத்ததற்கு அதிகமாக(ச் செலவு செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான்.
65:7. வசதியுள்ளவர் தம் வசதிக்கேற்ப ஜீவனாம்சம் அளிக்கட்டும். எவருக்கு வாழ்வாதாரம் குறைவாக அளிக்கப்பட்டிருக்கின்றதோ அவர் அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் எவருக்கு எவ்வளவு கொடுத்திருக்கின்றானோ அதற்கு மேலாக அவர் மீது அவன் பொறுப்பு சுமத்துவதில்லை. வசதிக் குறைவுக்குப் பிறகு, அதிக வசதிவாய்ப்புகளையும் அல்லாஹ் வழங்கக்கூடும்.
65:7. (பால் குடிச் செலவு விஷயத்தில்) வசதியுடையவர், தன்னுடைய வசதிக்கேற்ப (தாராளமாகச்) செலவு செய்யவும் எவருக்கு அவருடைய வாழ்வாதாரங்கள் நெருக்கடியாக்கப்பட்டுள்ளதோ அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்யவும், அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அதற்கு அவன் கொடுத்ததைத் தவிர (அதற்குமேல்) சிரமப்படுத்தமாட்டான், கஷ்டத்திற்குப் பின்னர் அடுத்து இலகுவை ஆக்குவான்.
65:8
65:8 وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ اَمْرِ رَبِّهَا وَرُسُلِهٖ فَحَاسَبْنٰهَا حِسَابًا شَدِيْدًاۙ وَّعَذَّبْنٰهَا عَذَابًا نُّكْرًا‏
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ قَرْيَةٍ عَتَتْ ஊர்கள்/மீறின عَنْ اَمْرِ கட்டளையையும் رَبِّهَا தமது இறைவனின் وَرُسُلِهٖ இன்னும் தமது தூதரின் فَحَاسَبْنٰهَا நாம் அவற்றை விசாரித்தோம் حِسَابًا விசாரணையால் شَدِيْدًاۙ கடுமையான وَّعَذَّبْنٰهَا இன்னும் அவற்றை வேதனை செய்தோம் عَذَابًا نُّكْرًا‏ மோசமான தண்டனையால்
65:8. எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர்; ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம்.
65:8. எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர் களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்தோம்.
65:8. எத்தனையோ ஊர்கள் தங்கள் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளையை மீறிவிட்டன. எனவே நாம் அவர்களைக் கடுமையாக கேள்விக்கணக்கு கேட்டோம். மேலும், அவர்களுக்கு மோசமான தண்டனையும் அளித்தோம்.
65:8. எத்தனையோ ஊர்(வாசி)கள் தங்களிரட்சகனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தனர், (ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்கு கேட்டு, அவர்களைக் கொடூரமான வேதனையாக வேதனையும் செய்தோம்.
65:9
65:9 فَذَاقَتْ وَبَالَ اَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ اَمْرِهَا خُسْرًا‏
فَذَاقَتْ அவை சுவைத்தன وَبَالَ கெட்ட முடிவை اَمْرِهَا தமது காரியத்தின் وَكَانَ இன்னும் ஆகிவிட்டது عَاقِبَةُ முடிவு اَمْرِهَا அவற்றின் காரியத்தின் خُسْرًا‏ மிக நஷ்டமாகவே
65:9. இவ்வாறு அவை தம் செயலுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டன; அன்றியும், அவர்களுடைய செயல்களின் முடிவும் நஷ்டமாகவே ஆயிற்று.
65:9. ஆகவே, அவர்களின் தீய செயலுக்குரிய பலனை அவர்கள் அனுபவித்தனர். அவர்களின் (தீய) காரியங்களின் முடிவு (இம்மையிலும்) நஷ்டமாகவே ஆகிவிட்டது.
65:9. அவர்கள் தங்கள் செயல்களுக்கான விளைவைச் சுவைத்துவிட்டார்கள். மேலும், அவர்களின் இறுதி முடிவு நஷ்டத்திலும் நஷ்டமாக இருந்தது.
65:9. ஆகவே, அவை தன் (வரம்பு மீறிய) காரியத்தின் தண்டனையைச் சுவைத்துவிட்டன, அதன் (தீய) காரியத்தின் முடிவும் (இம்மையில்) நஷ்டமாகவே இருந்தது.
65:10
65:10 اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًا‌ ۙ فَاتَّقُوا اللّٰهَ يٰۤاُولِى الْاَ لْبَابِ ۖۚ ۛ الَّذِيْنَ اٰمَنُوْا ۛؕ قَدْ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكُمْ ذِكْرًا ۙ‏
اَعَدَّ தயார் செய்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا தண்டனையை شَدِيْدًا‌ ۙ கடுமையான فَاتَّقُوا ஆகவே, அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை يٰۤاُولِى الْاَ لْبَابِ ۖۚ ۛ அறிவுடையவர்களே! الَّذِيْنَ اٰمَنُوْا ۛؕ நம்பிக்கை கொண்டவர்கள் قَدْ திட்டமாக اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் اِلَيْكُمْ உங்களுக்கு ذِكْرًا ۙ‏ நல்லுபதேசத்தை
65:10. அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான்; ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்.
65:10. (இன்னும் மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான். ஆகவே, நம்பிக்கைகொண்ட அறிவாளிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(த் திரு குர்ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக்கிறான்.
65:10. அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்குக் கடும் வேதனையைத் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். எனவே, நம்பிக்கை கொண்டிருக்கும் அறிவுடைய மக்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் உங்கள் பக்கம் ஓர் அறிவுரையை இறக்கியுள்ளான்.
65:10. (அன்றியும் மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயாராக்கி வைத்திருக்கின்றான், ஆகவே விசுவாசங்கொண்டோராகிய அறிவாளிகளே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு (குர் ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக்கிறான்-
65:11
65:11 رَّسُوْلًا يَّتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِ اللّٰهِ مُبَيِّنٰتٍ لِّيُخْرِجَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًـا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ؕ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا‏
رَّسُوْلًا ஒரு தூதரை يَّتْلُوْا ஓதிக் காண்பிக்கிறார் عَلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் مُبَيِّنٰتٍ தெளிவான(வை) لِّيُخْرِجَ வெளியேற்றுவதற்காக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை مِنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِ‌ؕ ஒளியின் பக்கம் وَمَنْ எவர்(கள்) يُّؤْمِنْۢ நம்பிக்கை கொண்டார்(கள்) بِاللّٰهِ அல்லாஹ்வை وَيَعْمَلْ இன்னும் செய்வார்(கள்) صَالِحًـا நன்மையை يُّدْخِلْهُ அவர்களை பிரவேசிக்கவைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமாகத் தங்குவார்கள் فِيْهَاۤ அவற்றில் اَبَدًا‌ؕ எப்போதும் قَدْ திட்டமாக اَحْسَنَ அழகாக வைத்திருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لَهٗ அவர்களுக்கு رِزْقًا‏ வாழ்வாதாரத்தை
65:11. அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக; மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான்.
65:11. (மேலும்), ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கிறான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, இருள்களில் இருந்து பிரகாசத்தின் பக்கம் கொண்டு வருகிறார். ஆகவே, (உங்களில்) எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ, அவர்களை சொர்க்கங்களில் புகச்செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான்.
65:11. அதாவது, ஒரு தூதரை! அவரோ தெளிவாக வழிகாட்டக் கூடிய இறைவசனங்களை உங்களுக்கு ஓதிக்காட்டுகின்றார். இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிவோரை இருளிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக! யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் சுவனங்களில் நுழைவிப்பான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட மக்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் இத்தகையவருக்கு மிக அழகிய வாழ்வாதாரத்தை வைத்திருக்கின்றான்.
65:11. ஒரு தூதரை-(யும்) உங்களுக்கு அனுப்பி வைத்தான், உங்களில் எவர்) விசுவாசங்கொண்டு நல்லசெயல்களும் செய்கிறாரோ அத்தகையோரை இருள்களிலிருந்து ஒளியின்பால் அவர் வெளியேற்றிக் கொண்டு வருவதற்காக-தெளிவு படுத்தக்கூடிய அல்லாஹ்வின் வசனங்களை, உங்கள் மீது அவர் ஓதிக்காண்பிக்கிறார், மேலும் (உங்களில்) எவர் அல்லாஹ்வை விசுவாசித்து நற்செயலும் புரிகிறாரோ அவரைச் சுவனபதிகளில் அவன் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக அவற்றில் (தங்கி) இருப்பவர்கள், திட்டமாக அல்லாஹ் அவருக்குரிய உணவை அழகானதாக ஆக்கிவிட்டான்.
65:12
65:12 اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ ؕ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا‏
اَللّٰهُ الَّذِىْ அல்லாஹ்தான் خَلَقَ படைத்தான் سَبْعَ سَمٰوٰتٍ ஏழு வானங்களையும் وَّمِنَ الْاَرْضِ இன்னும் பூமியில் مِثْلَهُنَّ ؕ அவைப் போன்றதையும் يَتَنَزَّلُ இறங்குகின்றன الْاَمْرُ கட்டளைகள் بَيْنَهُنَّ அவற்றுக்கு மத்தியில் لِتَعْلَمُوْۤا நீங்கள் அறிவதற்காக اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ ۙ பேராற்றலுடையவன் وَّاَنَّ اللّٰهَ இன்னும் நிச்சயமாக அல்லாஹ் قَدْ திட்டமாக اَحَاطَ சூழ்ந்துள்ளான் بِكُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்களையும் عِلْمًا‏ அறிவால்
65:12. அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது.
65:12. ஏழு வானங்களையும், அவற்றைப்போல் பூமியையும் அல்லாஹ்தான் படைத்தான். இவற்றில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கிறது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கிறான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவற்றைப் படைத்தான்.
65:12. அல்லாஹ்தான் ஏழு வானங்களைப் படைத்தான். பூமியின் இனத்திலிருந்து அவற்றைப் போன்றதையும் படைத்தான். அவற்றிற்கிடையே கட்டளை இறங்கிக் கொண்டிருக்கின்றது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கின்றான் என்பதையும் அல்லாஹ்வின் அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்திருக்கின்றது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயங்கள் உங்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.
65:12. அல்லாஹ்-அவன் எத்தகையவனென்றால் ஏழு வானங்களையும், அவைகளைப்போல் (எண்ணிக்கையில்) பூமியையும் படைத்தான், அவைகளுக்கிடையில் (அன்றாடம் நடந்தேரும் காரியங்கள் பற்றி) கட்டளைகள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன, நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் (தன்) அறிவால் ஒவ்வொரு பொருளையும் திட்டமாக சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான் என்பதையும் (விசுவாசிகளே!) நீங்கள் அறிந்து கொள்வதற்காக (இவ்வாறு விளக்குகிறான்.)