1441. وَعَنْ عَبْدِ اللهِ بنِ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {قَضَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْخَصْمَيْنِ يَقْعُدَانِ بَيْنَ يَدَيِ الْحَاكِمِ} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.بَابُ الشَّهَادَاتِ
1441. நீதிவிசாரணையின்போது வாதியும், பிரதிவாதியும் நீதிபதிக்கு முன்பு (சரிசமமாக) அமர வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1442. عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ اَلْجُهَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ الشُّهَدَاءِ؟ الَّذِيْ يَأْتِي بِشَهَادَتِهِ قَبْلَ أَنْ يُسْأَلَهَا"} رَوَاهُ مُسْلِمٌ.
1442. ``சாட்சி அளிப்பவர்களில் சிறந்தவர் யாரென உங்களுக்கு அறிவிக்கட்டுமா? கேட்பதற்கு முன்பே சாட்சி அளிப்பவரே அவர்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1443. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"إِنَّ خَيْرَكُمْ قَرْنِي، ثُمَّ اَلَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ اَلَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَكُونُ قَوْمٌ يَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ، وَيَنْذُرُونَ وَلَا يُوفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1443. ``உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையை சேர்ந்தவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள், பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். அதன் பின்பு ஒரு கூட்டத்தார் வருவார்கள்; அவர்களிடம் சாட்சியம் கேட்காமலேயே சிலர் சாட்சி சொல்வர், அவர்கள் அதில் மோசடி செய்வார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைக்கப்படாது. (ஏனெனில்) அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அதில் அவர்களின் உண்மை நிலை வெளிப்பட்டுவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1444. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"لَا تَجُوزُ شَهَادَةُ خَائِنٍ، وَلَا خَائِنَةٍ، وَلَا ذِي غِمْرٍ عَلَى أَخِيهِ، وَلَا تَجُوزُ شَهَادَةُ الْقَانِعِ لِأَهْلِ الْبَيْتِ"} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ.
1444. ``மோசக்காரன், மோசக்காரியின் சாட்சியம் செல்லாது. பொறாமைக்காரன் தன் (முஸ்லிம்) சகோதரனுக்கு எதிராகச் சொல்லும் சாட்சியமும் செல்லாது. ஒரு வீட்டாருக்கு ஆதரவாக அவர்களின் பணியாள் (அல்லது ஊழியர்) சொல்லும் சாட்சியமும் செல்லாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
குறிப்பு: முஸ்லிம் அல்லாதவருக்கு எதிராக ஒருவர் சாட்சி அளித்தாலும், கொள்கை தவிர வேறு காரணத்திற்காக இருவரிடையே பகைமை இருக்குமானால், அப்போது அந்த முஸ்லிம் அல்லாதவருக்கு எதிராக அந்த சாட்சியம் ஏற்கப்படாது.
1445. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَا تَجُوزُ شَهَادَةُ بَدَوِيٍّ عَلَى صَاحِبِ قَرْيَةٍ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَابْنُ مَاجَهْ.
1445. ``நகரவாசிக்கு எதிராக கிராமவாசி அளிக்கும் சாட்சியம் ஏற்கப்படாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், இப்னு மாஜா
குறிப்பு: கிராமவாசி முரட்டுத்தனம் கொண்டவனாகவோ, எதையும் சரியான முறையில் நினைவில் வைக்காமல் பேசுபவனாகவோ குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில் அவனுடைய சாட்சியம் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை.
1446. وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُ خَطَبَ فَقَالَ: إِنَّ أُنَاسً اكَانُوا يُؤْخَذُونَ بِالْوَحْيِ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنَّ الْوَحْيَ قَدْ اِنْقَطَعَ، وَإِنَّمَا نَأْخُذُكُم ْالْآنَ بِمَا ظَهَرَ لَنَا مِنْ أَعْمَالِكُمْ} رَوَاهُ الْبُخَارِيُّ.
1446. உமர்(ரலி) உரை நிகழ்த்தியபோது, ``நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சிலர் (தவறிழைத்தவர்கள்) வஹீ மூலம் கண்டித்துத் தண்டிக்கப்பட்டார்கள். இப்போது வஹீ அறிவிக்கப்படுவது நின்றுவிட்டதால், உங்கள் செயல்களில் எது வெளிப்படுகிறதோ, அதற்காகவே இப்போது நாம் உங்களைப் பிடிப்போம்'' எனக் கூறினார்கள்.
நூல்: புகாரீ
1447. وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ عَدَّ شَهَادَةَ الزُّورِ فِ يأَكْبَرِ الْكَبَائِرِ} مُتَّفَقٌ عَلَيْهِ فِي حَدِيثٍ طَوِيْلٍ.
1447. ``பொய் சாட்சியைப் பெரும் பாவங்களில் மிகப் பெரியதாய் இறைத்தூதர்(ஸல்) கருதினார்கள்'' என அபூ பக்ராஹ்(ரலி) அறிவித்தார். (நீண்ட ஹதீஸ்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: இந்த ஹதீஸை முழுவதுமாக அறிந்திட புகாரீ 2654 ஹதீஸ் எண்ணைக் காண்க!
1448. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: "تَرَى الشَّمْسَ؟" قَالَ: نَعَمْ. قَالَ: "عَلَى مِثْلِهَا فَاشْهَدْ، أَوْ دَعْ"} أَخْرَجَهُ اِبْنُ عَدِيٍّ بِإِسْنَادٍ ضَعِيفٍ، وَصَحَّحَهُ الْحَاكِمُ فَأَخْطَأَ.
1448. இறைத்தூதர்(ஸல்) ஒரு மனிதரிடம், ``நீ சூரியனைப் பார்க்கிறாயா?'' எனக் கேட்டார்கள்.
``ஆம்'' என அவர் கூறினார்.
``அதைப்போன்று தெளிவானவற்றில் சாட்சி சொல்! இல்லையேல் விட்டுவிடு!'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இமாம் இப்னு அதீ(ரஹ்) இதனை பலவீனமான அறிவிப்பாளர் தொடரில் பதிவிடப்பட்டுள்ளார்.
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் தவறுதலாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
1449. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِيَمِينٍ وَشَاهِدٍ} أَخْرَجَهُ مُسْلِمٌ. وَأَبُو دَاوُدَ. وَالنَّسَائِيُّ وَقَالَ: إِسْنَادُ[هُ جَيِّدٌ.
1449. ஒரு சத்தியம் மற்றும் ஒரு சாட்சியைக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இதன் அறிவிப்புத் தொடர் சரியானது என இமாம் நஸயீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: வாதியிடமிருந்து சாட்சியத்தையும், பிரதிவாதியிடமிருந்து சத்தியத்தையும் பெற்று அதன்படி தீர்ப்பளித்தார்கள்.
1450. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ. بَابُ الدَّعْوَى وَالْبَيِّنَاتِ
1450. அபூ தாவூத் மற்றும் திர்மிதீயில் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1451. عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَوْ يُعْطَى النَّاسُ بِدَعْوَاهُمْ، لَادَّعَى نَاسٌ دِمَاءَ رِجَالٍ، وَأَمْوَالَهُمْ، وَلَكِنِ الْيَمِينُ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1451. ``மக்களுக்கு, அவர்களின் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கோருவதை எல்லாம் (பிரதிவாதியை விசாரிக்காமல்) கொடுத்தோம் என்றால் மக்கள், பலரின் உயிருக்கும் உடமைக்கும் உரிமை கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள். எனினும், பிரதிவாதியின் மீது (தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை மறுப்பதற்கு) சத்தியம் செய்யும் கடமை உள்ளது'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1452. وَلِلْبَيْهَقِيِّ بِإِسْنَادٍ صَحِيحٍ: {"اَلْبَيِّنَةُ عَلَى الْمُدَّعِي، وَالْيَمِينُ عَلَى مَنْ أَنْكَرَ}.
1452. ``வழக்காடுபவன் (வாதி) ஆதாரம் கொண்டு வரவேண்டும். அதனை மறுப்பவன் (பிரதிவாதி) சத்தியம் செய்ய வேண்டும்'' என பைஹகீயில் உள்ளது.
இதன் அறிவிப்புத் தொடர் ஆதாரப்பூர்வமானது.
1453. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ عَلَى قَوْمٍ الْيَمِينَ، فَأَسْرَعُوا، فَأَمَرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي الْيَمِينِ، أَيُّهُمْ يَحْلِفُ} رَوَاهُ الْبُخَارِيُّ.
1453. ஒரு கூட்டத்தை இறைத்தூதர்(ஸல்) சத்தியம் செய்யுமாறும் கட்டளையிட்டார்கள். அவர்கள் சத்தியம் செய்வதில் விரைவதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்), ``யார் சத்தியம் செய்வது?'' என்பதைக் குலுக்கல் போடுமாறு கட்டளையிட்டார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1454. وَعَنْ أَبِي أُمَامَةَ الْحَارِثِيُّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَنْ اِقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ، فَقَدْ أَوْجَبَ اللهُ لَهُ النَّارَ، وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ". فَقَالَ لَهُ رَجُلٌ: وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللهِ؟ قَالَ: "وَإِنْ قَضِيبٌ مِنْ أَرَاكٍ"} رَوَاهُ مُسْلِمٌ.
1454. ``பொய் சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையைப் பறித்தவருக்கு அல்லாஹ் நரகத்தை விதித்துவிட்டான். மேலும், சுவர்க்கத்தை விலக்கிவிட்டான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
(இதனைச் செவியுற்ற ஒருவர்), ``இறைத்தூதர் அவர்களே! சாதாரணப் ஒரு பொருளுக்காகவுமா?'' என வினவினார்.
``அராக் மரத்தின் ஒரு கிளையாய் இருப்பினும்தான்'' என்று இறைத்தூதர்(ஸல்) பதிலுரைத்தார்கள் என அபூ உமாமா அல்ஹாரிஸிய்யீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1455. وَعَنِ الْأَشْعَثِ بْنِ قَيْسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، هُوَ فِيهَا فَاجِرٌ، لَقِيَ اللهُ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1455. ``ஒரு சத்தியம் செய்து, அதன் காரணமாக ஒரு முஸ்லிமின் சொத்தைப் பறித்தவன், அதில் பொய்யனாய் இருந்தால், மறுமையில் அல்லாஹ்வை தன் மீது கோபம் சொண்ட நிலையில் சந்திப்பான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1456. وَعَنْ أَبَى مُوسَى اَلْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَجُلَيْنِ اِخْتَصَمَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي دَابَّةٍ، لَيْسَ لِوَاحِدٍ مِنْهُمَا بَيِّنَةٌ، فَقَضَى بِهَا رَسُوْلُ اللهِ. بَيْنَهُمَا نِصْفَيْنِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ وَهَذَا لَفْظُهُ، وَقَالَ: إِسْنَادُهُ جَيِّدٌ.
1456. ஒரு கால்நடை விஷயத்தில் இரண்டு மனிதர்களுக்கிடையே சச்சரவு ஏற்பட்டது. அவர்கள் இருவரிடமுமே (அது யாருடையது என்ற) ஆதாரம் எதுவும் இல்லை. (எனவே, அந்த வழக்கில்) அவர்கள் இருவருக்கும் இடையில் பாதிப் பாதியாக அதைப் பிரித்து இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இங்கு நஸயீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பு சரியானது, சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1457. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَنْ حَلَفَ عَلَى مِنْبَرِي هَذَا بِيَمِينٍ آثِمَةٍ، تَبَوَّأَ مَقْعَدَهُ مِنَ النَّارِ"} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1457. ``என்னுடைய மிம்பருக்கு அருகே (அல்லது மிம்பரில் நின்று) பாவமான (பொய்) சத்தியம் செய்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1458. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالْفَلَاةِ، يَمْنَعُهُ مِنْ اِبْنِ اَلسَّبِيلِ؛ وَرَجُلٌ بَايَعَ رَجُلاً بِسِلْعَةٍ بَعْدَ الْعَصْرِ، فَحَلَفَ لَهُ بِاللَّهِ: لَأَخَذَهَا بِكَذَا وَكَذَا، فَصَدَّقَهُ، وَهُوَ عَلَى غَيْرِ ذَلِكَ؛ وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لَا يُبَايِعُهُ إِلَّا لِلدُّنْيَا، فَإِنْ أَعْطَاهُ مِنْهَا، وَفَى، وَإِنْ لَمْ يُعْطِهِ مِنْهَا، لَمْ يَفِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1458. ``மூன்று வகையான மனிதர்களுடன் மறுமையில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு. 1. வனாந்திரத்தில் எஞ்சி இருக்கும் தண்ணீரை வழிப்போக்கர்கள் பயன்படுத்த விடாமல் தடுப்பவன் 2. அஸ் ருக்குப் பின் ஒருவருடன் வியாபாரம் செய்து அந்தப் பொருளை இன்ன விலைக்கு வாங்கினேன் எனப் பொய் சத்தியம் செய்து அதனை உண்மை என்று நம்ப வைத்தவன். ஆனால் அது உண்மை அல்ல. 3. உலக இலாபத்திற்காகவே ஆட்சித் தலைவரிடம் பைஅத் செய்தவன். அவன் ஏதேனும் கொடுத்தால், அவனுக்கு நன்றி செலுத்துவான்; எதையும் கொடுக்கவிட்டால் அவனுக்கு மாறுசெய்வான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1459. وَعَنْ جَابِرٍرَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَجُلَيْنِ اِخْتَصَمَا فِي نَاقَةٍ، فَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَ انُتِجَتْ عِنْدِي، وَأَقَامَا بَيِّنَةً، فَقَضَى بِهَا رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَنْ هِيَ فِي يَدِهِ}.
1459. ஓர் ஒட்டகம் தொடர்பாக இருவர் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒவ்வொருவரும் இந்த ஒட்டகம் என்னிடமே பிறந்தது என்றனர். தம் வாதத்திற்கான சான்றுகளைச் சமர்ப்பித்தனர். அந்த ஒட்டகம் யாரிடமிருந்தோ, அவருக்கே (அது உரியது) என்று இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
1460. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَدَّ الْيَمِينَ عَلَى طَالِبِ الْحَقِّ} رَوَاهُمَا الدَّارَقُطْنِيُّ، وَفِي إِسْنَادِهِمَا ضَعْفٌ.
1460. உரிமையைக் கோருபவரின் பக்கமே இறைத்தூதர்(ஸல்) சத்தியத்தைத் திருப்பிவிட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
மேற்கண்ட இரண்டு ஹதீஸும் பலவீனமான அறிவிப்புத் தொடரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பு: பிரதிவாதி சத்தியம் செய்ய மறுத்தால், அந்த சத்தியத்தை தன் உரிமையைக் கோரும் வாதியே செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) தீர்ப்பளித்து நடைமுறைப்படுத்தினார்கள்.