677. وَعَنْ حَفْصَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ} رَوَاهُ الْخَمْسَةُ، وَمَالَ النَّسَائِيُّ وَالتِّرْمِذِيُّ إِلَى تَرْجِيحِ وَقْفِهِ، وَصَحَّحَهُ مَرْفُوعًا اِبْنُ خُزَيْمَةَ وَابْنُ حِبَّانَ.وَلِلدَّارَقُطْنِيِّ: {لَا صِيَامَ لِمَنْ لَمْ يَفْرِضْهُ مِنَ اللَّيْلِ}.
677. ``ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் நோன்பிற்கான நிய்யத் (எண்ணம்) கொள்ளாதவருக்கு நோன்பு இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் திர்மிதீ மற்றும் நஸயீ(ரஹ்) இதனை `மவ்கூஃப்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இமாம் இப்னு குஸைமா மற்றும் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை `மர்ஃபூஃ' தரமுள்ள `ஸஹீஹ்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
``இரவில் (நோன்பிற்கான) நிய்யத் செய்யாதவருக்கு நோன்பு இல்லை' எனும் வாசகம் தாரகுத்னீயில் உள்ளது.
678. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ. فَقَالَ: " هَلْ عِنْدَكُمْ شَيْءٌ؟ " قُلْنَا: لَا. قَالَ: "فَإِنِّي إِذًا صَائِمٌ" ثُمَّ أَتَانَا يَوْمًا آخَرَ، فَقُلْنَا: أُهْدِيَ لَنَا حَيْسٌ، فَقَالَ: "أَرِينِيهِ، فَلَقَدْ أَصْبَحْتُ صَائِمًا" فَأَكَلَ} رَوَاهُ مُسْلِمٌ.
678. ஒரு நாள் என் வீட்டில் நுழைந்த இறைத்தூதர்(ஸல்) ``(உண்பதற்கு) ஏதாவது உள்ளதா?'' என வினவினார்கள்.
``இல்லை'' எனக் கூறினோம்.
``அப்படியானால் நான் நோன்பாளியாய் இருந்துவிடுகிறேன்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், மற்றொரு நாள் இறைத்தூதர்(ஸல்) வந்தார்கள். ``(பேரீத்தம் பழம், பாலாடைக் கட்டி மற்றும் நெய்யினால் தயாரிக்கப்பட்ட) பாயாசம் போன்ற ஒரு வகை உணவு அன்பளிப்பாக கொஞ்சம் வந்துள்ளது'' என நாங்கள் கூறினோம்.
``அதைக் கொண்டுவாருங்கள். நான் நோன்பாளியாகத்தான் காலைப்பொழுதை அடைந்தேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்; பின்னர், அதனை உண்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
679. وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
679. ``நோன்பு துறப்பதை (சூரியன் மறைந்ததும்) விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சஅத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
680. وَلِلتِّرْمِذِيِّ: مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {قَالَ اللهُ: أَحَبُّ عِبَادِي إِلَيَّ أَعْجَلُهُمْ فِطْرًا}.
680. ``ஆரம்பநேரத்தில், (சூரியன் மறைந்ததும் விரைவாக) நோன்பைத் துறப்பவரே என் அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவர்'' என அல்லாஹ் கூறுகிறான் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: திர்மிதீ
681. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً} مُتَّفَقٌ عَلَيْهِ.
681. ``ஸஹர் உணவு உண்ணுங்கள்! ஏனெனில், அதில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
682. وَعَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ الضَّبِّيِّ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا أَفْطَرَ أَحَدُكُمْ فَلْيُفْطِرْ عَلَى تَمْرٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ، فَإِنَّهُ طَهُورٌ} رَوَاهُ الْخَمْسَةُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ وَابْنُ حِبَّانَ وَالْحَاكِمُ.
682. ``உங்களில் ஒருவர் நோன்பைத் துறந்தால், அவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு நோன்பைத் துறக்கட்டும். அது அவருக்குக் கிடைக்கவில்லை எனில், தண்ணீரைக் கொண்டு நோன்பைத் துறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என சுலைமான் இப்னு ஆமிர் அள்ளப்பிய்யி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இமாம் இப்னு குஸைமா, இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
683. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْوِصَالِ، فَقَالَ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ: فَإِنَّكَ يَا رَسُولَ اللهِ تُوَاصِلُ؟ قَالَ: "وَأَيُّكُمْ مِثْلِي؟ إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي". فَلَمَّا أَبَوْا أَنْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ وَاصَلَ بِهِمْ يَوْمًا، ثُمَّ يَوْمًا، ثُمَّ رَأَوُا الْهِلَالَ، فَقَالَ: "لَوْ تَأَخَّرَ اَلْهِلَالُ لَزِدْتُكُمْ" كَالْمُنَكِّلِ لَهُمْ حِينَ أَبَوْا أَنْ يَنْتَهُوا} مُتَّفَقٌ عَلَيْهِ.
683. தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என இறைத்தூதர்(ஸல்) தடைசெய்தார்கள். அப்போது, முஸ்லிம்களில் ஒருவர், ``இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?'' என வினவினார்.
``உங்களில் யார் என்னைப் போன்றுள்ளார்? என் இறைவன் எனக்கு உணவளிக்கிறான். நீர் புகட்டுகிறான்'' எனக் கூறினார்கள்.
தொடர் நோன்பைக் கைவிட அவர்கள் மறுத்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஒரு நாள் தொடர் நோன்பு நோற்றார்கள். மறுநாளும் நோற்றார்கள். பின்னர், பிறையைக் கண்டார்கள். அப்போது, ``பிறை தெரியத் தாமதமாகி இருந்தால் நான் இன்னும் அதிகமாக உங்களை நோன்பு நோற்கச் செய்திருப்பேன்'' என்று அவர்கள் தொடர் நோன்பை கைவிட மறுத்ததைக் கண்டித்ததைப் போல் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
684. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ، وَالْجَهْلَ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ} رَوَاهُ الْبُخَارِيُّ، وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ.
684. ``பொய் சொல்வதையும், அதன்படி செயல்படுவதையும், அறிவீனமாக நடப்பதையும் விட்டுவிடாதவர், உண்ணுவதையும், பருகுவதையும் அவர் விட்டுவிடுவதல் (ஒன்றும்) அல்லாஹ்விற்குத் தேவை இல்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, அபூ தாவூத்
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
685. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ، وَيُبَاشِرُ وَهُوَ صَائِمٌ، وَلَكِنَّهُ أَمْلَكُكُمْ لِإِرْبِهِ} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.وَزَادَ فِي رِوَايَةٍ: {فِي رَمَضَانَ}.
685. இறைத்தூதர்(ஸல்) நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள். ஆனால், அவர்கள் தம் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கவராய் இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றோர் அறிவிப்பில், இது ரமளானில் என உள்ளது.
686. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِحْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ، وَاحْتَجَمَ وَهُوَ صَائِمٌ} رَوَاهُ الْبُخَارِيُّ.
686. இஹ்ராம் கட்டிய நிலையில் இறைத்தூதர்(ஸல்) இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள். இன்னும், நோன்பு நோற்றிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
687. وَعَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى عَلَى رَجُلٍ بِالْبَقِيعِ وَهُوَ يَحْتَجِمُ فِي رَمَضَانَ. فَقَالَ: "أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ"} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا التِّرْمِذِيَّ، وَصَحَّحَهُ أَحْمَدُ، وَابْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ.
687. பகீஃ எனும் இடத்தில், ரமளான் மாதத்தில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டிருந்த ஒருவரிடம் வந்த இறைத்தூதர்(ஸல்), ``இரத்தம் குத்தி எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் நோன்பை முறித்துக் கொண்டார்'' என்று கூறினார்கள் என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ , தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
இமாம் அஹ்மத், இமாம் இப்னு குஸைமா மற்றும் இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
688. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {أَوَّلُ مَا كُرِهَتِ الْحِجَامَةُ لِلصَّائِمِ؛ أَنَّ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ اِحْتَجَمَ وَهُوَ صَائِمٌ، فَمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: "أَفْطَرَ هَذَانِ"، ثُمَّ رَخَّصَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ فِي الْحِجَامَةِ لِلصَّائِمِ، وَكَانَ أَنَسٌ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَقَوَّاهُ.
688. நோன்பு நோற்ற நிலையில் ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டடிருந்தபோது அவரைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்), ``இருவரும் நோன்பை முறித்துக் கொண்டனர்'' என்று கூறினார்கள். (அப்போது, இரத்தம் குத்தி எடுப்பது தடுக்கப்பட்டிருந்தது). அப்போதுதான் நான் நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வது, விரும்பத் தகாததாய் ஆக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். பின்னர், இறைத்தூதர்(ஸல்) நோன்பாளிகளுக்கு இரத்தம் குத்தி எடுத்துக் கொள்ள சலுகை அளித்தார்கள்.
மேலும், நோன்பு நோற்ற நிலையில் தாம் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டதாக என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ
இது பலமான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.
689. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِكْتَحَلَ فِي رَمَضَانَ، وَهُوَ صَائِمٌ} رَوَاهُ اِبْنُ مَاجَهْ بِإِسْنَادٍ ضَعِيفٍ.قَالَ التِّرْمِذِيُّ: لَا يَصِحُّ فِيهِ شَيْءٌ.
689. இறைத்தூதர்(ஸல்) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்ற நிலையில் சுர்மா போட்டுக் கொண்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இமாம் இப்னு மாஜா(ரஹ்) இதனை, அறிவிப்பாளர் தொடர் `ளயீஃப்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான எந்த ஹதீஸும் ஆதாரப்பூர்வமானது அல்ல என இமாம் திர்மிதீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
690. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ نَسِيَ وَهُوَ صَائِمٌ، فَأَكَلَ أَوْ شَرِبَ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللهُ وَسَقَاهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
690. நோன்பிருக்கும் நிலையில் மறதியாகச் சாப்பிட்டவர், பருகுகியவர் தம் நோன்பைப் பூர்த்தியாக்கட்டும். (அவர் தன் நோன்பை முறிக்க வேண்டாம்). ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணச் செய்தான்; பருகச் செய்தான் என் இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
691. وَلِلْحَاكِمِ: {مَنْ أَفْطَرَ فِي رَمَضَانَ نَاسِيًا فَلَا قَضَاءَ عَلَيْهِ وَلَا كَفَّارَةَ} وَهُوَ صَحِيحٌ.
691. ``ரமளான் மாதத்தில் மறதியாக நோன்பை முறித்தவர் மீது களாவும் (திரும்ப நோன்பு நோற்பது) இல்லை; பரிகாரமும் இல்லை'' என ஹாகிமில் உள்ளது. இது `ஸஹீஹ்' எனும் தரத்திலும் உள்ளது.
692. وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ، وَمَنْ اسْتَقَاءَ فَعَلَيْهِ الْقَضَاءُ} رَوَاهُ الْخَمْسَةُ. وَأَعَلَّهُ أَحْمَدُ. وَقَوَّاهُ الدَّارَقُطْنِيُّ.
692. தன்னையும் மீறி (நோன்பு நோற்ற நிலையில்) வாந்தி எடுத்தவர் மீது (நோன்பு) களா இல்லை. இன்னும், (நோன்பு நோற்ற நிலையில் வேண்டுமென்றே வாந்தி எடுத்தவர் மீது (நோன்பு) களா இருக்கிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் அஹ்மத்(ரஹ்) இதனை `மஃலூல்' எனும் குறைபாடு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இமாம் தாரகுத்னீ(ரஹ்) இதனை `பலமானது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
693. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَامَ الْفَتْحِ إِلَى مَكَّةَ فِي رَمَضَانَ، فَصَامَ حَتَّى بَلَغَ كُرَاعَ الْغَمِيمِ، فَصَامَ النَّاسُ، ثُمَّ دَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ فَرَفَعَهُ، حَتَّى نَظَرَ النَّاسُ إِلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقِيلَ لَهُ بَعْدَ ذَلِكَ: إِنَّ بَعْضَ النَّاسِ قَدْ صَامَ. قَالَ: "أُولَئِكَ الْعُصَاةُ، أُولَئِكَ الْعُصَاةُ"}.
693. மக்கா வெற்றி கொண்ட ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கி இறைத்தூதர்(ஸல்) புறப்பட்டார்கள். அப்போது `குரா உல் கமீம்' எனும் இடத்தை அடையும் வரை நோன்பு நோற்றார்கள். மக்களும் நோன்பு நோற்றார்கள். பின்னர், இறைத்தூதர்(ஸல்) ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச்செய்து அதனை உயர்த்தினார்கள். மக்கள் அனைவரும் அதனைப் பார்த்தனர். இறைத்தூதர்(ஸல்) அதனைக் குடித்தார்கள். அதற்குப் பின்னரும் சிலர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் என்ற செய்தி அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு ``அவர்கள் பாவிகள்! அவர்கள் பாவிகள்!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
694. وَفِي لَفْظٍ: {فَقِيلَ لَهُ: إِنَّ النَّاسَ قَدْ شَقَّ عَلَيْهِمُ الصِّيَامُ، وَإِنَّمَا يَنْظُرُونَ فِيمَا فَعَلْتَ، فَدَعَا بِقَدَحٍ مِنْ مَاءٍ بَعْدَ الْعَصْرِ، فَشَرِبَ} رَوَاهُ مُسْلِمٌ.
694. நிச்சயமாக அந்த மக்களுக்கு நோன்பு நோற்பது கஷ்டமாய் இருக்கிறது. அவர்கள், (நபியாகிய) தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. எனவே, இறைத்தூதர்(ஸல்) அஸ் ர் தொழுகைக்குப் பின்பு அதைக் குடித்தார்கள் என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
695. وَعَنْ حَمْزَةَ بْنِ عَمْرٍو الْأَسْلَمِيِّ رِضَى اللهُ عَنْهُ؛ أَنَّهُ قَالَ: {يَا رَسُولَ اللهِ! أَجِدُ بِي قُوَّةً عَلَى الصِّيَامِ فِي اَلسَّفَرِ، فَهَلْ عَلَيَّ جُنَاحٌ؟ فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "هِيَ رُخْصَةٌ مِنَ اللهِ، فَمَنْ أَخَذَ بِهَا فَحَسَنٌ، وَمَنْ أَحَبَّ أَنْ يَصُومَ فَلَا جُنَاحَ عَلَيْهِ"} رَوَاهُ مُسْلِمٌ.وَأَصْلُهُ فِي "الْمُتَّفَقِ" مِنْ حَدِيثِ عَائِشَةَ؛ {أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو سَأَلَ}
695. ``இறைத்தூதர் அவர்களே! நான் பயணத்திலும் நோன்பு நோற்கும் ஆற்றல் பெற்றவனாய் இருக்கிறேன். அதனால் என் மீது குற்றமாகுமா?'' என நான் வினவினான்.
``இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள சலுகையாகும். அதனை எடுத்துக் கொண்டவர் சிறப்படைந்தார். இன்னும், நோன்பு நோற்க விரும்பியவர் மீது குற்றமில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஹம்ஸா இப்னு அம்ர் அல் அஸ்லமீ(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) இவ்வாறு) வினவினார் என்றும் ஆயிஷா(ரலி) இவ்வாறு பதிலளித்தார் என்றும் புகாரீ மற்றும் முஸ்லிமில் உள்ளது.
696. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {رُخِّصَ لِلشَّيْخِ الْكَبِيرِ أَنْ يُفْطِرَ، وَيُطْعِمَ عَنْ كُلِّ يَوْمٍ مِسْكِينًا، وَلَا قَضَاءَ عَلَيْهِ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ، وَالْحَاكِمُ، وَصَحَّحَاهُ.
696. ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக, ஓர் ஏழைக்கு ஸஹர் மற்றும் இஃப்தார், உணவு உண்ணச் செய்ய வேண்டும். களா செய்ய வேண்டியதில்லை என வயோதிகர்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களால் சலுகை அளிக்கப்ட்டது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: தாரகுத்னீ, ஹாகிம்
இரண்டிலும் இது ஆதாரப்பூர்வமானதாகப் பதிவிடப்பட்டுள்ளது.