حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا وَاللَّهِ أَبُو ذَرٍّ، بِالرَّبَذَةِ كُنْتُ أَمْشِي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَرَّةِ الْمَدِينَةِ عِشَاءً اسْتَقْبَلَنَا أُحُدٌ فَقَالَ " يَا أَبَا ذَرٍّ مَا أُحِبُّ أَنَّ أُحُدًا لِي ذَهَبًا يَأْتِي عَلَىَّ لَيْلَةٌ أَوْ ثَلاَثٌ عِنْدِي مِنْهُ دِينَارٌ، إِلاَّ أُرْصِدُهُ لِدَيْنٍ، إِلاَّ أَنْ أَقُولَ بِهِ فِي عِبَادِ اللَّهِ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ". وَأَرَانَا بِيَدِهِ. ثُمَّ قَالَ " يَا أَبَا ذَرٍّ ". قُلْتُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " الأَكْثَرُونَ هُمُ الأَقَلُّونَ إِلاَّ مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا ". ثُمَّ قَالَ لِي " مَكَانَكَ لاَ تَبْرَحْ يَا أَبَا ذَرٍّ حَتَّى أَرْجِعَ ". فَانْطَلَقَ حَتَّى غَابَ عَنِّي، فَسَمِعْتُ صَوْتًا فَخَشِيتُ أَنْ يَكُونَ عُرِضَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَرَدْتُ أَنْ أَذْهَبَ، ثُمَّ ذَكَرْتُ قَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَبْرَحْ ". فَمَكُثْتُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُ صَوْتًا خَشِيتُ أَنْ يَكُونَ عُرِضَ لَكَ، ثُمَّ ذَكَرْتُ قَوْلَكَ فَقُمْتُ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ذَاكَ جِبْرِيلُ أَتَانِي، فَأَخْبَرَنِي أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ. قَالَ " وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ ". قُلْتُ لِزَيْدٍ إِنَّهُ بَلَغَنِي أَنَّهُ أَبُو الدَّرْدَاءِ. فَقَالَ أَشْهَدُ لَحَدَّثَنِيهِ أَبُو ذَرٍّ بِالرَّبَذَةِ. قَالَ الأَعْمَشُ وَحَدَّثَنِي أَبُو صَالِحٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ نَحْوَهُ. وَقَالَ أَبُو شِهَابٍ عَنِ الأَعْمَشِ " يَمْكُثُ عِنْدِي فَوْقَ ثَلاَثٍ ".
அபூ தர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவின் 'ஹர்ரா' (கருமங்கல்) பகுதியில் நபி (ஸல்) அவர்களுடன் இரவு நேரத்தில் நடந்து கொண்டிருந்தேன். (அப்போது) உஹத் மலை எங்களுக்கு எதிரே தென்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அபூ தர்ரே! இந்த உஹத் மலை எனக்குத் தங்கமாக மாறி, அதிலிருந்து ஒரு தீனார் என்னிடம் இருக்க, ஒரு இரவு அல்லது மூன்று இரவுகள் கழிவதை நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் தொகையைத் தவிர! (மீதமுள்ள அனைத்தையும்) அல்லாஹ்வின் அடியார்களுக்கு இப்படியும், இப்படியும், இப்படியும் நான் வாரி வழங்கிவிடுவேன்" என்று கூறி, தமது கையால் (சைகை செய்து) காட்டினார்கள்.
பிறகு, "அபூ தர்ரே!" என்று அழைத்தார்கள். நான், "லப்பைக் வ ஸஃதைக் (இதோ வந்துவிட்டேன்; கட்டளையிடுங்கள்), இறைத்தூதர் அவர்களே!" என்றேன். அவர்கள், "(உலகில் செல்வத்தில்) அதிகம் உள்ளவர்களே (மறுமையில் நன்மையில்) குறைந்தவர்கள்; (தமது செல்வத்தை) இப்படியும் இப்படியும் (நல்ல வழிகளில்) செலவு செய்தவர்களைத் தவிர" என்று கூறினார்கள்.
பிறகு என்னிடம், "நான் திரும்பி வரும் வரை நீர் இங்கேயே இரும்; உமது இடத்தை விட்டு நகர வேண்டாம்" என்று கூறிவிட்டு, (இருளில்) என் கண்ணிலிருந்து மறையும் வரை நடந்து சென்றார்கள். பிறகு நான் ஒரு சப்தத்தைக் கேட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று அஞ்சினேன். நான் (அவர்களைத் தேடிச்) செல்ல விரும்பினேன். ஆனால், "உமது இடத்தை விட்டு நகர வேண்டாம்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறிய சொல் எனக்கு நினைவுக்கு வந்தது. ஆகவே, (அவர்கள் வரும் வரை) நான் அங்கேயே தங்கியிருந்தேன்.
(அவர்கள் வந்ததும்) நான், "இறைத்தூதர் அவர்களே! நான் ஒரு சப்தத்தைக் கேட்டேன்; தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று அஞ்சி(ப் பார்க்க வர நினைத்தே)ன். பிறகு தங்கள் சொல்லை நினைவுகூர்ந்து (இங்கேயே) நின்றுவிட்டேன்" என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது ஜிப்ரீல் (அலை). அவர்கள் என்னிடம் வந்து, 'உமது சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் இறப்பவர் சொர்க்கம் செல்வார்' என்று நற்செய்தி கூறினார்கள்" என்று சொன்னார்கள். நான், "இறைத்தூதர் அவர்களே! அவர் விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர் விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலும் சரியே!" என்று பதிலளித்தார்கள்.
(அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நான் ஸைத் (பின் வஹ்ப்) அவர்களிடம், "இதை அறிவித்தவர் அபுத்தர்தா (ரலி) என எனக்குச் செய்தி எட்டியுள்ளதே?" என்று கேட்டேன். அதற்கு ஸைத் அவர்கள், "அபூ தர் (ரலி) அவர்கள் 'ரபதா' எனும் இடத்தில் வைத்து இதை எனக்கு அறிவித்தார்கள் என்பதற்கு நான் சாட்சியளிக்கிறேன்" என்று பதிலளித்தார்கள். அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்தும் இதே போன்றதொரு செய்தியை எனக்கு அறிவித்தார்கள். அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள் அஃமஷ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், "(அந்தத் தங்கம்) மூன்று நாட்களுக்கு மேல் என்னிடம் தங்கியிருப்பதை (நான் விரும்பமாட்டேன்)" என்று இடம்பெற்றுள்ளது.