முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அபுல்அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகளுக்கு (ஷாம் வாசிகளுக்கு எதிராகப் போரிட) ஒரு படை திரட்டப்பட்டது. அதில் (கலந்துகொள்ள) நானும் பதிவு செய்யப்பட்டேன். பிறகு நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் விடுவிக்கப்பட்ட அடிமையான இக்ரிமா (ரஹ்) அவர்களைச் சந்தித்து, அவரிடம் (இது குறித்துத்) தெரிவித்தேன். அவர் என்னை (அதில் கலந்துகொள்ளக் கூடாதென) வன்மையாகத் தடுத்துவிட்டுப் பின்னர் கூறினார்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்: (மக்காவில் இருந்த) முஸ்லிம்களில் சிலர் (பத்ருப் போரில்) இணைவைப்பாளர்களுடன் இருந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக அந்த இணைவைப்பவர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். (போரின்போது) ஓர் அம்பு எய்யப்படும், அது அவர்களில் ஒருவரைத் தாக்கி அவரைக் கொன்றுவிடும், அல்லது அவர் (வாளால்) வெட்டப்பட்டுக் கொல்லப்படுவார். அப்போது அல்லாஹ், "நிச்சயமாக, தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்ட நிலையில் இருப்பவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது..." (4:97) என்ற இறைவசனத்தை அருளினான்.